நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் நாட்டை உலுக்கிய டித்வா புயலினால் சிலாபம் வைத்தியசாலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், பல கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்களும் சேதமடைந்திருந்தன.
டித்வா புயலிலிருந்து சிலாபம் வைத்தியசாலை தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் இவ்வேளை, மீண்டுமொரு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது நோயாளர்களையும், பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவித்துள்ளனர்.


