கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்தர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் மூன்று பேர் நீராடிக்கொண்டிருந்தனர். இதன்போது, எதிர்பாராத விதமாக அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரைத் தேடும் பணிகள் நேற்று மாலை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இரவு வரை தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்த போதிலும், போதிய வெளிச்சமின்மை மற்றும் இயற்கை சவால்களால் உடல் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் மீண்டும் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. காலை 8.00 மணியளவில், இரணைமடு நன்னீர் மீனவர்களின் பாரிய ஒத்துழைப்புடன் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


