நிருபர் – எம் என் முஹம்மது
- அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து நெல் கொள்வனவு கோரி பாரிய கவனயீர்ப்பு பேரணி.
- வெளிநாட்டு அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு விசேட மகஜர் கையளிப்பு.
- தற்போதைய நிர்ணய விலையான 120 ரூபாவுக்கே நெல்லை வாங்க மில் உரிமையாளர்கள் தயக்கம்; அடிமட்ட விலைக்கு விற்க நேரிடுவதால் விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம்.
நெல் கொள்வனவு நெருக்கடி: அம்பாறையில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்!
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யால) அறுவடை களைகட்டவுள்ள நிலையில், கிழக்கு மாகாண விவசாயிகளின் முகங்களில் மகிழ்ச்சிக்கு பதிலாக மரண பயமே குடிகொண்டுள்ளது.
தமது வியர்வையின் பலனுக்கு நியாயமான விலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர். நெல் கொள்வனவு மற்றும் நியாயமான விலை நிர்ணயத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணியின் முடிவில், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் தமது உருக்கமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜர் நேரடியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எதிர்வரும் சிறுபோக அறுவடை நெல்லினை அரசாங்கம் உடனடியாகக் கொள்வனவு செய்ய வேண்டும், அத்துடன் ஒரு கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை 140 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் அதிரடி கோரிக்கையாகும்.
இதற்குப் பின்னணியில் உள்ள கசப்பான உண்மை என்ன தெரியுமா? அரசாங்கம் ஏற்கனவே ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா என விலை நிர்ணயித்துள்ள போதிலும், மில் உரிமையாளர்கள் அந்த விலைக்கு முழுமையாக நெல்லைக் கொள்வனவு செய்யத் தயங்குகின்றனர். இதனால், வேறு வழியின்றி தரகர்களிடமும், வியாபாரிகளிடமும் அடிமட்ட விலைக்கு தமது நெல்லை விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நஷ்டம் தொடருமானால், எதிர்காலத்தில் எந்தவொரு இளைஞரும் விவசாயத் துறையை நோக்கி வரமாட்டார்கள் என்ற அபாய எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
பிரச்சினை விலை நிர்ணயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடவில்லை. உள்ளூர் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே நெல் மலைபோல் தேங்கிக் கிடக்கிறது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதை அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் ஆவேசமாக கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் விவசாயி நஷ்டத்தில் தவிக்கும்போது, வெளிநாட்டு அரிசி எதற்கு என்பது அவர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.
எவ்வாறாயினும், இது அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டமும் அல்ல என்பதை பேரணியில் கலந்து கொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மாறாக, தேங்கிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்வனவு செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விடுக்கும் ஒரு ‘அவசர அபயக் குரல்’ இதுவாகும். ஜூலை மாத அறுவடைக்கு முன்னர் அரசாங்கம் இவர்களின் குரலுக்கு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!





