விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிவிப்பு குறித்து ஹிரு செய்தி நிறுவனத்தின் செய்தி அறிக்கை தொடர்பில் அவரது சட்டத்தரணியால் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்திற்கு, ஹிரு செய்தி நிறுவனத்தின் சட்டத்தரணிகள் கடும் பதிலடி கொடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் லால் காந்தவின் சட்டத்தரணிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், அமைச்சரின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தமது சேவைப் பெறுநரான ஹிரு நிறுவனம் முற்றாக நிராகரிப்பதோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளையும் நிராகரிக்கிறது.
திருத்தம் செய்யும் உரிமையை ஏற்றுக்கொண்டு, ஆசியா பிரோட்காஸ்டிங் கோர்ப்பரேஷன் (Asia Broadcasting Corporation) நிறுவனம் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஹிரு டி.வி உள்ளிட்ட தனது அனைத்து ஊடகத் தளங்களிலும் உடனடியாகத் திருத்தம் ஒன்றை மேற்கொண்டதாக நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லால் காந்தவின் பிரகடனத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அந்தச் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனம் சட்டத்திற்கு அமைய சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் தரப்பு தமது சேவைப் பெறுநருக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தால், ஒரு நிறுவனப் பிரஜை என்ற வகையில் தமது சேவைப் பெறுநருக்குள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதோடு, கட்டாய சட்ட விதிகளைத் திட்டமிட்டு மீறியமை தொடர்பிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உங்களது சேவைப்பெறுநர் பகிரங்க மேடைகளில் ஒப்புக்கொண்டபடி, அவர் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பிரஜைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல் போன்ற விடயங்களுடன் தொடர்புடையவர் என்பதால், எங்களது சேவைப்பெறுநர், சட்ட நடவடிக்கையின் போது அவர் ஒரு நற்பெயர் இல்லாத நபர் என்ற நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைக்கப் போவதாக ஹிரு நிறுவன சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமது சேவைப்பெறுநரின் ஒளிபரப்பு உரிமைகளுக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


