புத்தளம் மாவட்டத்தின் வணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சேரக்குளிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சின்னநாகவில்லுவ கிராமத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமைகளை நேரில் ஆராய்ந்து, அதற்கான உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன சுமார் 7 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் நேற்று (03) அங்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஏற்கனவே ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலை காரணமாக மீண்டுமொரு இரட்டை அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதனால் சின்னநாகவில்லுவ பிரதேசத்தில் 24 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
அத்துடன், கிராமத்தில் அமைந்துள்ள தேவாலயம், முன்பள்ளி மற்றும் மேலும் 13 வீடுகள் இதுவரை வெள்ள நீரில் மூழ்கியிருப்பதுடன், தொடர்ந்தும் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதன்போது, குறித்த இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த பொது இடங்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அங்கு வருகை தந்திருந்த உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கள்ளக்கண்டல் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்தும் அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார். இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் அப்பிரதேசத்தின் பங்குத்தந்தையும் கலந்துகொண்டார்.
இவ்விஜயத்தின் போது அமைச்சருடன் வணாத்தவில்லு பிரதேச செயலாளர், அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





