- வாகன மோசடி: முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 6.6 மில்லியன் ரூபா தண்டம் – பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்புக் கோரவும் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- அரச வாகனத்தை சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய பௌசிக்கு விழுந்த சம்மட்டி அடி: வாகனப் படத்துடன் பகிரங்க மன்னிப்பு!
அரச சொத்துக்களைத் தமது சொந்த உடைமை போல் கருதி வலம்வரும் அரசியல்வாதிகளுக்குத் தெளிவானதொரு செய்தியை விடுக்கும் வகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (29) வழங்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அரச வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 6.6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வணிகப் பேரவையின் (Ceylon Chamber of Commerce) முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை முன்னாள் அமைச்சர் அப்பட்டமாக மீறியுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதியரசர் ஜனக் டி சில்வா, அரச வாகனப் பாவனைக்காக செலவிடப்பட்ட 16 இலட்சத்து 64 ஆயிரத்து 334 ரூபாவை (Rs.1,664,334.93) ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் திரட்டிய நிதியத்தில் வைப்பிலிடுமாறு பௌசிக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை; நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் சார்ந்த செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையிலும், ஏனையோருக்குப் பாடமாக அமையும் வகையிலும் மேலதிகமாக 5 மில்லியன் ரூபாவை முன்மாதிரி இழப்பீடாகச் செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பின் மிக முக்கியமான மற்றும் அதிரடியான விடயம் யாதெனில், அரச சொத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நாட்டின் மூன்று முன்னணிப் பத்திரிகைகளில் முன்னாள் அமைச்சர் பௌசி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என நீதிமன்றம் பணித்துள்ளமையாகும். வெறும் மன்னிப்பு உரையுடன் மாத்திரம் நின்றுவிடாது, அவர் முறைகேடாகப் பயன்படுத்திய குறித்த வாகனத்தின் புகைப்படத்தையும் கட்டாயமாக அதில் இணைத்துப் பிரசுரிக்க வேண்டும் என நீதியரசர்கள் குழாம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.


