இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என புத்தளம் மாநகரசபை மாண்புமிகு மேயர் ரின்சாத் அகமது அவர்கள் தெரிவித்தார்.
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஸ்கில்ஸ் விஸ்டா ‘Skills Vista’ திட்டத்தின் 2025/2026 ஆம் ஆண்டிற்கான சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை கல்வி அமைச்சு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் தேசிய கல்வி நிறுவனம் (NIE) ஆகிய உயர்மட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
முக்கியமாக, உயர் தர மாணவர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:
- தொழில் வழிகாட்டல் (Career Guidance): மாணவர்களின் எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தல்.
- தகவல் தொழில்நுட்பம் (ICT): நவீன டிஜிட்டல் உலகிற்குத் தேவையான கணினித் திறன்கள்.
- ஆங்கில மொழிப் பயிற்சி (English Language): சர்வதேச மட்டத்தில் தொடர்பாடல் திறனை வளர்த்தல்.
- வாழ்க்கைத் திறன்கள் (Life Skills): ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தல்.
இந்நிகழ்வில் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு மேயர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களை வாழ்த்திய மேயர், கல்வி அறிவு என்பது வெறும் புத்தகங்களோடு நின்றுவிடாமல், இத்தகைய செயல்முறைத் திறன்களையும் (Practical Skills) வளர்த்துக்கொள்ளும் போதுதான் ஒரு இளைஞர் முழுமையான வெற்றியாளராக மாற முடியும் என வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் நோக்கில் இத்தகைய காத்திரமான திட்டத்தை முன்னெடுத்து வரும் கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மேயர் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ‘Skills Vista’ திட்டம் கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.






