கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகத்தில் இன்று (09) காலை இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கிளிநொச்சி நகரைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வழமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சாரம் தாக்கிய நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மீட்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இளம் வயதில் குடும்பத்தின் நம்பிக்கையாக விளங்கிய ஒருவரின் திடீர் மரணம், உறவினர்கள் மற்றும் பிரதேச மக்களிடையே பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலிடங்களில் மின்சார பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.




