ஜூட் சமந்த
மாற்றுத்திறனாளிகளின் திறமையை உலகறியச் செய்த புத்தளம் மாவட்ட விளையாட்டு விழா: மஹவெவ ஒட்டுமொத்த சம்பியன்
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறனையும், மன உறுதியையும் வெளிப்படுத்திய புத்தளம் மாவட்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழா உற்சாகம் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களால் நிறைவடைந்தது.
புத்தளம் நகர சபை விளையாட்டரங்கில் கடந்த 10ஆம் திகதி முழு நாளும் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
108 புள்ளிகளைப் பெற்று மஹவெவ பிரதேச செயலகப் பிரிவு ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றதுடன், 98 புள்ளிகளைப் பெற்ற முந்தலம் பிரதேச செயலகப் பிரிவு ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தைப் பெற்று அசத்தியது.
புத்தளம் மாவட்டச் செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் ஆகியோர் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமானது.
இந்த விளையாட்டு விழாவில் நீண்ட தூர ஓட்டப் போட்டி, குண்டு எறிதல், உயரம் பாய்தல், ஒரு காலை இழந்தவர்களுக்கான சிறப்பு ஓட்டப் போட்டி, வட்டு எறிதல் மற்றும் சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல்வேறு திறன் வெளிப்பாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
உடல் வரம்புகளை மனவலிமையால் வென்ற வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை நிரூபித்து பார்வையாளர்களின் கைதட்டலையும் பாராட்டுகளையும் பெற்றனர். அவர்களின் உறுதியும் விடாமுயற்சியும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு புத்தளம் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம். எம். ஜயதிலக மற்றும் புத்தளம் மாவட்ட முன்னாள் விளையாட்டு உத்தியோகத்தர் தனபால ஜயபத்ம ஆகியோர் வெற்றிக் கேடயங்களையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறமைகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்கும் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த மாவட்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழா அமைந்தது.





