ஜூட் சமந்த
பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: அரசின் தலையீட்டுக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசர கவனம் செலுத்தி, அவற்றுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற “நாடு முழுவதும் ஊடகவியலாளர்கள் அமைப்பு” பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் பிரதிநிதிகள், பிராந்திய ஊடகவியலாளர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் பல்வேறு சிக்கல்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக, சில ஊடக நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் செய்திகளுக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தெளிவான நடைமுறையைக் கொண்டிருக்கவில்லை என்றும், பல ஊடகவியலாளர்கள் தொழில் பாதுகாப்பின்றி பணியாற்றி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செய்திகளை சேகரித்து அனுப்புவதற்காக தொடர்பாடல் செலவினங்களுக்கே கணிசமான தொகையை பிராந்திய ஊடகவியலாளர்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை, அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் போதுமான அளவில் சென்றடைவதில்லை என்பதையும் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, செய்திகளுக்கான கொடுப்பனவு தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்வொன்றை எட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன், பிராந்திய ஊடகவியலாளர்களின் தொடர்பாடல் செலவுகளை குறைக்கும் வகையில் சலுகை அடிப்படையிலான விசேட தொடர்பாடல் தொகுப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் தாம் இணக்கம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த செய்திகளை பிராந்திய ஊடகவியலாளர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று, அரச தகவல் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் அவற்றை பரவலாகப் பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, நாடு முழுவதும் ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் சாலிய கமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன், தொழில் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து அரச மட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த தலையீடு, நீண்டகாலமாக தீர்வுக்காக காத்திருந்த ஊடகத்துறையினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



