கடல் கொந்தளிப்பு அபாயம்: காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரை சிவப்பு எச்சரிக்கை!
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள மீனவர்கள் இந்த காலப்பகுதியில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான கரையோர பகுதிகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலின் சீற்றம் தீவிரமடையக்கூடிய சூழ்நிலை நிலவுவதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


