- நீருக்குள் மூழ்கிய பேங்காக்: 23 பேர் பலி, 7 லட்சம் மக்கள் பாதிப்பு! களத்தில் இராணுவம்
- தென்கிழக்காசியாவை உலுக்கும் பெருவெள்ளம்: முடங்கிய விமான நிலையம்; 80 வருட மழைப் பதிவை முறியடித்த மியான்மார்!
- வெள்ளக் காடான தாய்லாந்து: கால்நடைகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் மக்கள் – அவசரநிலை பிரகடனம்!
தாய்லாந்தில் கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் இடைவிடாது பெய்து வரும் அடைமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பேங்காக்கில் 4 பேர் உட்பட இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 42 மாகாணங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு உள்விவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தலைநகர் பேங்காக்கில் மாத்திரம் வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 3 இலட்சத்து 29 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, பேங்காக்கின் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுன்ட் நகரின் அனைத்து 50 மாவட்டங்களிலும் வெள்ள அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதுடன், சுமார் 7,000 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு பேங்காக் பகுதியே மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. பாங் கபி (Bang Kapi) மாவட்டத்தில் புகையிரத நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களைச் சூழ முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களைத் தலையில் சுமந்தவாறும், படகுகள் மூலமாகவும் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக வேலைவாய்ப்பை இழந்த நவோரத் சுபனிகோர்ன் (55) என்ற வீட்டுப் பணிப்பெண், “இடுப்பளவுக்கு நீர் வந்ததும் வளர்ப்பு நாய்கள், பூனைகளுடன் வெளியேறினேன். வேலைக்குச் செல்ல முடியாததால் வேலையும் பறிபோய்விட்டது, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது” எனத் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
வெள்ளத்தின் தாக்கம் நாட்டின் முக்கிய போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டமைப்புகளையும் நிலைகுலையச் செய்துள்ளது. பேங்காக்கின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திற்கு ஊழியர்கள் வருகை தர முடியாததால், பயணிகளின் பொதிகளைக் கையாள்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அசௌகரியத்தைத் தவிர்க்கவும், நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்கவும் 69 வான்படை வீரர்கள் உடனடியாக களமிறக்கப்பட்டு பொதிகளை ஒப்படைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலைமையைச் சமாளிக்க திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பேரழிவு தாய்லாந்தோடு நின்றுவிடவில்லை; அண்டை நாடுகளான மியான்மார் மற்றும் கம்போடியாவையும் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது. மியான்மாரின் டாவே நகரில் திங்கட்கிழமை 346 மில்லிமீற்றர் மழை பதிவாகி, கடந்த 80 ஆண்டுகால மழைவீழ்ச்சி சாதனையை முறியடித்துள்ளதுடன், அங்கு 10 பேர் உயிரிழந்து பலர் காணாமல் போயுள்ளனர். கம்போடியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கோர் வாட் (Angkor Wat) ஆலய வளாகத்தைப் பாதுகாக்க வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 44 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பல பகுதிகளுக்கு மேலும் கனமழை, ஆற்றுப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



