- 3.7 பில்லியன் டொலர் சினோபெக் திட்டம் இழுபறி: அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையால் அம்பலமான உண்மை!
- அதானி வெளியேற்றம் முதல் சினோபெக் முட்டுக்கட்டை வரை: இலங்கையின் முதலீட்டுச் சூழல் குறித்த அதிர்ச்சித் தகவல்!
- முடங்கும் மெகா திட்டங்கள்: அரசின் முரண்பட்ட நிலைப்பாடுகளால் சர்வதேச முதலீட்டாளர்கள் ஏமாற்றம்!
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாக எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் ‘சினோபெக்’ (Sinopec) நிறுவனத்தின் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், திட்டமிட்டபடி இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது புதிய அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்டிய பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்படவிருந்த இந்த மெகா திட்டத்தின் ஒப்பந்தப் பணிகளை நிறைவுசெய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கடந்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்தார். இருப்பினும், கடந்த ஜூன் மாதம் நிறைவடையும் வரை இரு தரப்புக்கும் இடையில் உத்தியோகபூர்வமான எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
சினோபெக் திட்டம் மாத்திரமன்றி, இலங்கைக்கு வரவிருந்த பல சர்வதேச பெரு முதலீடுகளும் இதேபோன்ற பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முன்னெடுக்கவிருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டத்தின் ஆரம்ப உடன்படிக்கை நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் மீண்டும் மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முற்பட்டதால், அதானி நிறுவனம் கடந்த பெப்ரவரியில் அத்திட்டத்திலிருந்தே முழுமையாக வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு அதிரடி நடவடிக்கை கடந்த டிசம்பரில் மிதக்கும் எல்.என்.ஜி (LNG) முனையத் திட்டத்திலும் அரங்கேறியுள்ளது. சீனா ஹார்பர் என்ஜினியரிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாக சில நாட்களே இருந்த நிலையில், அது குறித்த பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் எவ்வித முன்னறிவிப்புமின்றி அமைதியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நட்டமடையும் அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் கொள்கையைக் கைவிட்டு, அவற்றைத் தொடர்ந்து அரசே நிர்வகிக்கும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் முடிவும் முதலீட்டாளர் மத்தியில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஒருபுறம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாகப் பிரச்சாரம் செய்துகொண்டு, மறுபுறம் பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்க வேண்டும் என அரச உயரதிகாரிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவது சர்வதேச முதலீட்டாளர்களைக் குழப்பத்திலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது. நீண்ட இழுபறி அனுமதி நடைமுறைகளும், அரசின் நிலையற்ற சமிக்ஞைகளும் இலங்கையின் முதலீட்டுக் களத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அமெரிக்காவின் அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.


