Tuesday, November 4, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 10

தப்போவ நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

பெய்து வரும் அதிக மழை காரணமாக, தப்போவ நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் இன்று 21 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு தலா 01 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டதாக புத்தளம் நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேறும் நீர் மீ ஓயாவில் சங்கமிக்கின்றது.

தெதுரு ஓயாவின் 04 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும், 02 வான் கதவுகள் தலா 02 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவில் வினாடிக்கு 16,900 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 6832 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2898 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய விருது பெற்ற கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்!

இன்று (20), Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference) 75வது ஆண்டு மாநாட்டில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக, “The Y Personality of the Year 2025” என்ற விருதை இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

— ஊடகப் பிரிவு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

0

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அறிமுகமாகிறது புதிய வடிவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

0

பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பல இடங்களில் கேலரிகள் காலியாகக் கிடக்கும் நிலையில் இளையோர் பட்டாளத்தை ஈர்க்கும் வகையில், புதிய டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அறிமுகமாகிறது.

பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டைக் காண மைதானங்களில் கூட்டம் குறைந்துவிட்ட நிலையில், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் ஒரு புதிய முயற்சியாக ‘டெஸ்ட் டுவென்டி’ வடிவம் அறிமுகமாகியுள்ளது.

இது பாரம்பரிய ஆட்டத்தின் ஆழத்தையும், டி20-யின் அதிரடியையும் கலந்து கட்டிய ஒரு சூப்பர் வடிவமாக இருக்கும் என கருதப்படுகிறது. இது மொத்தமே 80 ஓவர்களை கொண்ட ஆட்டம். ஒவ்வொரு அணியும் தலா 20 ஓவர்களைக் கொண்ட இரண்டு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். ஒரேநாளில் விறுவிறுவென நான்கு இன்னிங்ஸ்களும் நிறைவடையும். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கிய அம்சமான ஃபாலோ-ஆன் விதி இங்கும் உண்டு. முதல் இன்னிங்ஸில் 75 ரன்களைக் குறைவாகப் பெறும் அணி ஃபாலோ-ஆன் விளையாட நேரிடும்.

ஆட்டம் வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட் போலவே வெள்ளை உடையில், சிவப்புப் பந்துடன் நடைபெறும். கேப்டன்களுக்குச் சவால் விடுக்கும் வகையில், ஒரு போட்டியில் அதிகபட்சமாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொருவரும் அதிகபட்சம் 8 ஓவர்கள் வீச முடியும். ஆட்டத்தின் முடிவில் வெற்றி, தோல்வி, சமன், மற்றும் டிரா என நான்கு முடிவுகளும் சாத்தியம். இந்தப் புதிய வடிவத்தை விளையாட்டுத் தொழில்முனைவோர் கௌரவ் பஹிர்வானி உருவாக்கியுள்ளார்.

இதற்குப் பின்னால் ஜாம்பவான்கள் பட்டாளமே உள்ளது. சர் கிளைவ் லாயிட், ஏபி.டி.வில்லியர்ஸ், மேத்யூ ஹேடன், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆலோசனைக் குழுவில் உள்ளனர்.

முதல் சீசன் ஜனவரி 2026இல் இந்தியாவில் தொடங்குகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட ஆறு சர்வதேச அணிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற்றால், பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்? இது காலத்திற்கேற்ப கிரிக்கெட்டைத் தகவமைத்துக்கொள்ளும் தொலைநோக்குத் திட்டமா அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முன்னெடுப்பா என்பதற்கு காலம் பதில்சொல்லும்!

18 ரயில் சேவைகள் இன்று ரத்து!

0

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று காலை​ 7 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதனிடையே, மண்சரிவு காரணமாக கடிகமுவ மற்றும் பலான இடையேயான ரயில் பாதையை அடைவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பின்வரும் ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் பின்வருமாறு: 

பிற்பகல் 03.35 கொழும்பு கோட்டை முதல் கண்டி 

மாலை 04.35 கொழும்பு கோட்டை முதல் மாத்தளை 

மாலை 05.15 கொழும்பு கோட்டை முதல் கண்டி 

மாலை 05.55 கொழும்பு கோட்டை முதல் கண்டி 

இரவு 08.30 கொழும்பு கோட்டை முதல் பதுளை இரவு தபால் ரயில் 

பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை 

மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரையிலான ரயில் உட்பட 18 சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையில் கிண்ணஸ் சாதனை!

0

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றும் நிகழ்வை உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சரயு நதிக்கரையில் சுமார் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விளக்கு ஏற்றி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்னர் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீப உற்சவத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையிலும் வண்ண ஒளி லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்வுகள் பார்ப்போரின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

0

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி அவர்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த கொண்டாட்டம் தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கிறது. தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அதேபோல், நமது பிரஜைகள் மட்டுமன்றி இந்த நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதீக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பிற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரும் தங்கள் அனைத்து சிவில், அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய, அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகிறேன்.

தீபாவளி உண்மையிலேயே ஒரு ஒளிப் பண்டிகை. தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பிலான இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பிரார்த்தித்து இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் அவர்களின் இதயங்களை பிரகாசமாக்கும் மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி

கல்முனையில் இடம்பெற்ற SLMC யின் முக்கிய கலந்துரையாடல்!

0

ஏ.எஸ்.எம். அர்ஹம் – நிருபர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பகுதியின் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் அவரது கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

நாட்டில் நிலவும் சமகால அரசியல் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், எதிர்வரக்கூடிய தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கல்முனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துரைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

மரத்தை நேர் செய்த வெசேல் வண்டி!

0

(உடப்பு க.மகாதேவன்)

குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் மகாகெலிய சந்திக்கு அருகில் கார் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று(20) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால், கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெய்வாதீனமாக குறித்த விபத்தில் பயணித்த எவருக்கும் உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லை.

இறால் பண்ணை நீர் தொட்டியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0

ஜூட் சமந்த

இறால் பண்ணையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தள் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து நேற்று 19 ஆம் தேதி முந்தல், புலிச்சகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் வவுனியா, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த வசந்தம் தர்ஷன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முந்தல், புலிச்சகுளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உயிரிழந்த குறித்த நபர் வலிப்பு நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இறால் பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பண்ணையில் இருந்த மற்றவர்கள் அவரை சிகிச்சைக்காக முந்தல் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.

முந்தல் போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.