Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 100

மந்திரிமனை அழிந்தால் தமிழர் வரலாறும் அழியும்!

யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (18) பார்வையிட்டார்

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக வருகை தந்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும், அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்

நாடாளுமன்ற உறுப்பினருடன் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன், நல்லூர் யாழ்ப்பாண வலயத்தின் உத்தியோகத்தர் மணிமாறன், கனியவள அளவையியலாளர் அமர்நாத் மற்றும்
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மிக முக்கிய கூட்டம்!

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (18.09.2025) நடைபெற்றது.

யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறானதொரு தனியான கூட்டத்தைக் கூட்டியமைக்காக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதை எல்லோரும் அறிவீர்கள் எனத் தெரிவித்த ஆளுநர் குறிப்பாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி சகலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்றதொரு நவீனமயப்படுத்தல் வடக்கு மாகாணத்துக்கும் தேவைப்படுவதாகக் கோரிய ஆளுநர், ஏற்கனவே தூய்மை இலங்கை செயற்றிட்டத்தில் வடக்கில் 9 பேருந்து நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் நினைவுகூர்ந்தார்.

இதன் பின்னர் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தனது உரையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்தை தற்போதுள்ள நிலைமையை விடவும் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்புக்குழுவை தனித்தனியே அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழான ஒவ்வொரு துறைகளின் பிரச்சினையும் தனித்தனியே ஆராயப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வேலைத் திட்டங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டது. இதன்போது தீவுப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்காக விசேடமாக மேலதிக நிதியாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பயணிகள் கடற்போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டது. வீதி விபத்துக்கள், யாழ். மாவட்டத்தில் இயங்கும் சாரதி பயிற்சிப் பாடசாலைகள், புகையிரத திணைக்களம் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன. குறிப்பாக கடந்த காலங்களில் இயங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதேவேளை, யாழ். நகரத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் மத்திய பேருந்து நிலையம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நகரின் நெருக்கடி காரணமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன் ஆகியோரும், கௌரவ தவிசாளர்கள், அமைச்சு அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிறுநீரக நோயாள் தினமும் ஐந்து பேர் உயிரிழக்கும் அபாயம்!

0

நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டில், நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் 1,600க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சிந்தா குணரத்ன தெரிவித்தார். 

சிறுநீரக நோய் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்தியர் சிந்தா குணரத்ன இந்த தகவலை வௌியிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர், சிறுநீரக நோயின் அறிகுறிகள் தாமதமாகி வருவதால், தொற்றா நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சி இன்று ஆரம்பம்!

0

இந்த ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சியான “Industry Expo 2025” இன்று ஆரம்பமாகிறது.

கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஏற்பாடு செய்துள்ள “Industry Expo 2025” இன்று (18) ஆரம்பமாகிறது.

அதன்படி, இதன் ஆரம்ப விழா இன்று காலை BMICH இல் கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

இலங்கை முழுவதிலுமிருந்து 25 தொழில்துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்களால் முன்வைக்கப்படும் 450 கண்காட்சி கூடங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால் வழங்கப்படும் புத்தாக்க வலயம் (Innovation Arena), பாடசாலை தொழில்முனைவோர் வட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி கூடங்கள், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சேவைக் கூடங்கள் (NERD) மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தொழில்களை ஆதரிக்கும் வங்கிகளால் ஒரே கூரையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட “One Stop Service” ஆகியவை அடங்கும்.

அதன்படி, இந்தக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருக்கு இலங்கையில் பாராட்டு!

0

இலங்கையில் கௌரவம் பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன்.

இந்தியாவின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசின் உயரிய கௌரவமாக விளங்கும் “தகைசால் தமிழர் விருது” இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்மொழி, இலக்கியம், கலை, அறிவியல், கல்வி, சமூகம், மருத்துவம், தொழிநுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது “தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த விருது” எனக் கருதப்படுகிறது.

ஏன் “தகைசால் தமிழர் விருது” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது?

பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் மனிதநேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூக நலப்பணிகள் ஆகியவை இவ்விருதிற்கு அவரைத் தகுதியானவராக மாற்றியது.

2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “தமிழ்நாட்டிற்கும் அரபு நாடுகளுக்குமுள்ள தொடர்புகள்” குறித்த ஆய்வுக் கட்டுரையை வழங்கியுள்ளார்.

தாருல் குர்ஆன் இதழில் எட்டாண்டுகள் தொடர்ச்சியாக “தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?” என்ற தலைப்பில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

“வாழும் நெறி”, “குர்ஆனின் குரல்”, “இஸ்லாமிய இறைக் கோட்பாடு” உள்ளிட்ட ஆறு நூல்களை எழுதி சமூக, அறிவுத்தளங்களில் பங்களித்துள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 15 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து, மாணவர்களின் மனங்களில் சமூக நல்லிணக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை விதைத்துள்ளார்.

யார் இந்த பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன்?

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருநல்லூரில், 1940 ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார்.

கல்வியில் பெரும் நாட்டம் கொண்டவராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், அதன் பலனாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். மேலும், அரபு மற்றும் உருது மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர்:

மாணவராக இருந்த போதே “மறுமலர்ச்சி” இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய அவர், முபாரக், தாருல் குர்ஆன் போன்ற பத்திரிகைகளில் முக்கியக் கட்டுரைகளை வழங்கினார். மேலும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழில் முக்கியமான நூல்களையும் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ள அவர், மத ரீதியான ஒப்பீடுட்டு நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக “வாழும் நெறி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

அவரது எழுத்துகள் சமூக ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், மத விழிப்புணர்வு ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தன.

அரசியல் பங்களிப்பு:

மாணவர் நிலையிலிருந்தே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், இந்திய முஸ்லிம்களின் இருப்பை உறுதி செய்வதில் அடையாளமாகத் திகழ்ந்த “இந்திய யூனியன் முஸ்லிம் லீக்” கட்சியின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்ட காதர் முஹைதீன் மாணவர் சங்கம் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில உதவியாளராக, மாநில செயலாளராக பதவி வகித்து, தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

2004–2009 காலத்தில் மக்களவை உறுப்பினராக வேலூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பல நாடாளுமன்றக்குழுக்களில் பணியாற்றினார். உள்துறை, வக்ஃப் தொடர்பான குழுக்கள், ஹஜ் குழு, பல்கலைக்கழகக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சமூக நலனுக்காக உழைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அரசியல், கல்வி இரு துறைகளிலும் ஆழமான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் மனித நேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூதாய நலன் என்பவற்றிற்கு தன்னையே அர்ப்பணித்தார். அதில் அவருடைய எழுத்து, கல்விப்பணி மற்றும் சமூகப்பங்களிப்பும் முக்கியமானதாகும்.

மனிதநேயப்பண்பு:

பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் உயர்ந்த பண்புகளின் அடையாளம், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சமூக நீதிக்கான உறுதி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்ததுதான். பெண்கள், ஏழைகள், அனைத்து மதத்தினரும் அவரிடம் அணுகி உதவி பெற்றனர்.

மஹல்லா ஜமாத் கூட்டமைப்பைத் தொடங்கி, வட்டியில்லாத கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு மதம் சார்ந்தவர்களிடையே கலந்துரையாடல்கள், ஒப்பீட்டு மதம் வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றால் மத நல்லிணக்கத்துக்கு வழிவகுத்து சகிப்புத்தன்மையை வளர்த்தார்.

உரிமைகளை வென்றெடுக்கவும், அநீதிக்கெதிராகவும் உரத்த குரலில் போராடியவர் அவர். அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுக்க கையாண்ட முக்கியமான போராட்டங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

2013ம் ஆண்டு ஏப்ரல் 2 – தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது.

அவை, முஸ்லிம்களுக்கு தனித்த ஒதுக்கீடு உயர்த்த வேண்டும். நிர்ப்பந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணியை நேரடியாக தனது தலைமையிலே நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தார்.

வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கெதிரான போராட்டத்தில் வக்ஃப் சொத்துகளின் உரிமை குறையும் வகையிலான மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இப்போராட்டத்தில் அவரின் பங்களிப்பாக நாடளாவிய உரைகள், ஊடகக்கருத்துரைகள், பொதுக்கூட்டங்கள் மூலம் போராடினார். “இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல்” என உரையாற்றி பெரிய எதிர்ப்பை எழுப்பினார்.

மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான கட்சித்தீர்மானங்கள் மற்றும் போராட்டங்கள், ரயில்வே கட்டண உயர்வுக்கெதிரான பிரசாரம், இந்தி திணிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள், இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கும் பொதுக்கூட்டங்கள், இந்திய மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கெதிரான சட்டங்களைக்கொண்டு வந்த போது, மத்திய அரசை நோக்கி “இறைவனின் சட்டத்தை மாற்ற நீங்கள் யார்?” என பொங்கியெழுந்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.

இவை அனைத்திலும் காதர் முஹைதீன் முன்மொழிந்த தீர்மானங்கள், ஆர்ப்பாட்ட அழைப்புகள், தெருப்போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கே.எம்.காதர் முஹைதீன் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சில முழுமையாகவும் பல பகுதியளவிலும் வெற்றியைத் தந்தன.

முஸ்லிம்களுக்கு இடவொதுக்கீடு உயர்வு கோரிக்கை (2013 ஆர்ப்பாட்டம்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பல ஆண்டுகளாகக் கொண்டு வந்த கோரிக்கையாக இருந்தது.

2007-ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆணையம் அடிப்படையில் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனியொதுக்கீடு வழங்கப்பட்டது.

பின்னர் அதனை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை 2013 ஆர்ப்பாட்டங்கள் மூலம் மீண்டும் எழுப்பினர்.

இதனால், தமிழ்நாடு அரசு 2010களின் இறுதியில் முஸ்லிம் சமூக நலத்திட்ட நிதியை அதிகரித்து, கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப்பங்கு அதிகரிப்பை நடைமுறையில் கொண்டு வந்தது.

வக்ஃப் சட்டத்திருத்த எதிர்ப்பு :

“இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல் எனக் கண்டித்தபோது, கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு திருத்தச்சட்டத்தில் சில பிரிவுகளைத் தளர்த்தி மாற்றங்களைச் செய்தது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் முஸ்லிம் தலைவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் ஏற்பட்ட வெற்றி.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து எடுத்துக்கொண்ட போராட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றினார்.

தமிழ்நாடு முழுக்க “இந்தி விரோத மனப்பான்மை” வலுவானதால், அரசுகள் “இந்தி கட்டாயம்” என்பதை பின்வாங்கியுள்ளன. இது நடைமுறையில் வெற்றி கண்ட போராட்டமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல், கண்டனப் போராட்டங்கள்
2013–14 காலகட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் காதர் முஹைதீன் தலைமையில் கண்டனப் பேரணிகள் நடந்தன.

இதனால் இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் மனித உரிமை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தள்ளப்பட்டது. இது சர்வதேசளவில் ஒரு அரசியல் அழுத்த வெற்றி.

இவ்வாறு சமூகநலப் போராட்டங்களில் பல்வேறு வெற்றிகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் பெற்றுக் கொடுத்தார்.

அவரின் சமூக நீதிக்காகப் போராடும் உயர்ந்த குணம், மொழிப்பற்று, மக்கள் பணிகளைக் கண்டு, மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் மாண்புமிகு கருணாநிதி, பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டார்.

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் இந்த உயர்வான “தகைசால் தமிழர் விருதை” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கியதுடன், மிகப்பொருத்தமான ஒருவருக்கு வழங்கியதில் திருப்திப்படுவதாக பெருமிதமடைந்தார்.

அரசியலில் எதிர் முகாமிலிருப்பவர்களும் பேராசிரியருக்கான கன்னியத்தைக் கொடுப்பதற்கு ஒரு போதும் தவறுவதில்லை.

இவ்வாறு பல முக்கிய அரசியல் தலைவர்களின் கண்ணியத்தையும், நெருக்கத்தையும், நன்மதிப்பையும், வாழ்த்தையும் தன் வாழ்நாளில் பெற்றவராக பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் திகழ்கிறார்.

அவர், இளமைப்பருவம் தொடக்கம் தற்போது வரை தான் ஏற்றுக்கொண்ட பல பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தனக்கான தனித்துவமான இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.

அரசியல் ரீதியாக பெரும் பதவிகளைப் பெற்றுக் கொண்ட போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக எளிமையான வாழ்வையே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது ஊதியத்தையும் மாணவர்களின் கல்விக்காக செலவு செய்து வருகின்றார்.

சமூகத்திற்கான வழிகாட்டியாகவும், அதன் நலனுக்காகப் பணியாற்றுபவராகவும் கருதப்படுவதால் “முனீருல் மில்லத்” (சமூகத்தின் ஒளி) என மக்களால் கௌரவமாக அழைக்கப்படுகிறார்.

பேராசிரியரின் உயர் பண்பு, ஆளுமை, அறிவார்ந்த பேச்சுக்களால் இந்தியாவில் மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் அவரை நேசிக்கும் பல தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய முஸ்லிம்களை தொப்புள் கொடி உறவாகத்தான் பார்க்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் விவகாரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கரிசணையோடு கடந்த காலங்களில் தங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்கி வந்திருக்கிறது.

இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு தொடரான நெருக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது.

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் உட்பட ஏனைய நிருவாகிகளுக்கும் இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

பேராசிரியரை நேசிப்பவராகவும், அவரின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பவராகவும், அவரின் வழிகாட்டல்களை ஏற்பவராகவும் ரவூப் ஹக்கீம் இருக்கிறார்.

எனவே தான், இந்திய – இலங்கை முஸ்லிம்கள் தொப்புள் கொடி உறவைப் பலப்படுத்தவும், முஸ்லிம்கள் ஒரு சமூதாயமாகப் பரந்துபட்டவர்கள் என்ற அடிப்படையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் தலைவரின் உறவு இன்றியமையாதவொன்றாக இலங்கை முஸ்லிம்களுக்கு இருப்பதால் “தகைசால் தமிழர்” என்ற உயர்வான விருது மிகத் தகுதிவாய்ந்த பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதையிட்டு இலங்கை முஸ்லிம்களும் பெருமிதம் கொள்கின்றார்கள்.

அந்த வகையில், இலங்கையில் நாளை (செப்டம்பர்) 19 ம் திகதி தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் இலங்கையர்களோடு நட்புறவு கொண்ட திருச்சி ஊடகவியலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் இணைந்து “தகைசால் தமிழர்” விருது வென்ற மூத்த அரசியல் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு இலங்கையில் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பல தலைமுறை கண்ட பேராசிரியர் எல்லோருக்கும் சிறந்த முன்மாதிகளுடையவராகத் திகழ்கிறார். எதிர்கால சந்ததிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவே தனது வாழ்வியலை அமைத்துக் கொண்டிருக்கிறார். நாடு கடந்து பலரது கவனத்தை ஈர்த்த தலைவராகவும் இருக்கிறார்.

இவ்வாறான உயர்ந்த ஆளுமைச் சிறப்புகளுடன் வாழ்ந்து வருகின்ற பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது, அனுபவம் போதாது.

எனினும், அவரின் எளிமையான வாழ்க்கை, நற்குணங்கள், வீரியமிக்க பேச்சு ஆகியவற்றைக் கண்டு வியந்து போகும் இளைஞனாக, அவரிடமிருந்து வாழ்வுப் பாடங்களைப் பெறுகிறேன்.

அவரது வாழ்வியல் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட வேண்டும். அது நிகழ்ந்தால், நிச்சயம் சமூக அக்கறையுடனும், நெறியுடனும், நல்ல அரசியல் பண்புகளுடனும் கூடிய புதிய தலைமுறைத் தலைவர்கள் உருவாக பாடமாகவும் அறிவுரையாகவும் இருக்கும்.

பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அறிவார்ந்த சமூதாயத்திற்கும், எதிர்கால சந்ததிக்கும் மிகப்பெரும் பொக்கிஷம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாதென்பது நிதர்சனம்.

இவ்வளவு பொருத்தமான ஒருவருக்கு “தகைசால் தமிழர்” விருதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நாடு கடந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இலங்கையில் மாபெரும் கௌரவம் மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்படுவதை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிருவாகிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் தமிழக மக்கள், கடல் கடந்து வாழும் அன்னாரை நேசிக்கும் நல்லுள்ளங்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள் என்பது திண்ணம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்
இளங்கலை மாணி பட்டதாரி (B.A.), தீவு முழுவதற்குமான சமாதான நீதவான்,
சமூக செயற்பாட்டாளர் – ஓட்டமாவடி.

மன்னார் மக்கள் வங்கி கிளை நடாத்திய கிரிக்கட் தொடர்!

0

மன்னார் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் பிரதிநித்துவப்படுத்தி கலந்துகொண்ட அணிகளுக்கிடையான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிறு (14.09.2025) மன்னார் நகரசபை பொது மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மன்னார் மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சுற்றுப் போட்டிக்கு மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முகம்மது அரூஸ் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

குறித்த தொடரில் ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 9 அணிகள் பங்குபற்றி தொடரை அலங்கரித்தனர்.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி, துள்ளுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மற்றும் தலைமன்னார் பியர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதலாவது அரையிறுதி போட்டியில் எருக்கலம்பிட்டி மற்றும் துள்ளுக்குடியிருப்பு அணிகள் மோதியதுடன், எருக்கலம்பிட்டி அணியை வீழ்த்தி துள்ளுக்குடியிருப்பு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இதேவேளை இரண்டாவது அரையிறுதி போட்டியில் புதுக்குடியிருப்பு மற்றும் தலைமன்னார் பியர் அணிகள் மோதியதுடன், தலைமன்னார் பியர் அணியை புதுக்குடியிருப்பு அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் புதுக்குடியிருப்பு அணியும் துள்ளுக்குடியிருப்பு அணியும் பலப்பரீட்சை நடத்தியதுடன், துள்ளுக்குடியிருப்பு அணியை வீழ்த்தி புதுக்குடியிருப்பு அணி சாம்பியன் ஆனது.

தொடரில் சாம்பியன் ஆன புதுக்குடியிருப்பு அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த துள்ளுக்குடியிருப்பு அணிக்கும் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் மக்கள் வங்கி கிளையின் முதன்மை வாடிக்கையாளர்களில் ஒருவரான ஜனாப் எம்.எச்.எம். பாஹிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மன்னார் மக்கள் வங்கி கிளையின் ஊழியர்கள் மற்றும் கிரிக்கட் அபிமானிகள் குறித்த சுற்றுத்தொடரில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பெத்தும் நிஸ்ஸங்க!

0

ஆசிய கிண்ண இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்தொடரில் இடம்பெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த அரைச்சதத்தின் மூலம், ஆசியக் கிண்ண இருபதுக்கு – 20 தொடர்களில் அவர் குவித்த அரைசதங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் மூலம், விராட் கோஹ்லி அடித்த 8 அரைசதங்கள் என்ற சாதனையை அவர் கடந்து புதிய மைல்கல்லை பிடித்துள்ளார்.

பெத்தும் நிஸ்ஸங்க ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் அசால்டாக 9 அரைசதங்கள் பெற்றுள்ளார். விராட் கோஹ்லி ஆசிய கிண்ண இருபதுக்கு – 20 போட்டிகளில் 8 அரைசதங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் இளம் வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, அவரது சிறப்பான ஆட்டத் திறமையால், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் சாதனையை முறியடித்ததன் மூலம், அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

119,000 கி.மீட்டர் வீதியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

0

நாட்டின் 119,000 கிலோமீட்டர் வீதி வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைப் பகுதிகளில் கிராமப்புற வீதிகளை நவீனமயமாக்கும் பணி அதிகாரசபையின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.

தேசிய கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த தேர்தல் தொகுதியில் வீதி அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்துப் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 கிராமப்புற வீதிகள் நவீனமயமாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த ஆண்டு ரூ. 14 பில்லியன் ஒதுக்கியுள்ளது, அடுத்த ஆண்டு மேலதிக நிதியும் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

அனைத்து தடைகளையும் நீக்கிய ஐக்கிய தேசியக் கட்சி!

0

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று (16) மாலை கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்ட பின்னணி குறித்து ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான குழுவை நியமிக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த தீர்மானத்தின் ஊடாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், அதன் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பங்கேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலான யோசனை ஒன்றும் இதன்போது நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிற்கான நாளைய நீர்வெட்டு அறிவிப்பு இரத்து!

0

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமைப் போல் நீர்விநியோகம் தடையின்றி நாளைய தினம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால், நாளை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால், கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளும், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுலாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், குறித்த பிரச்சினை சீரமைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளுக்கு நாளைய தினம் வழமைப் போல நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.