காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் ஹமாஸை முற்றிலுமாக அழிப்போம் எனச் சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வரலாறு காணாத ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்பு காரணமாக காசா பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 64,871 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 164,610 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமாவர். இஸ்ரேலின் முற்றுகையால் உணவு, நீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டைகளும், யூதக் குடியேறிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்களும் அங்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
சர்வதேச அளவில் இந்தப் போர் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கி வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கோரி வருகின்றன.
தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே, சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசம் குறித்த ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவரான நவி பிள்ளை, இன்று அதன் கண்டுபிடிப்புகள் குறித்துத் தெரிவித்தார். இதில் இஸ்ரேலியத் தலைவர்கள் – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் – பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க இஸ்ரேலிய அதிகாரிகளும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று சர்வதேச விசாரணை ஆணையம் முடிவு செய்கிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் இராணுவம் தனது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், காசா நகரவாசிகள் “கடுமையான, இடைவிடாத” குண்டுவீச்சுக்கு ஆளாகி விடியற்காலையில் இருந்து காசா முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் வியாழக்கிழமை (18) அன்று 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அதற்கமைய வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் மாலை 07 மணி வரை நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
அதேநேரம் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்.
இந்த நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று (16) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டார்.
“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய 5வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஆட்சியாளர்களால் தீர்மானிக்கப்பட்டபடி, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் என்ற செய்தி இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த ஒரு செய்தியாகும்.
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகளுடன் நான் இன்று (16) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். நாங்கள் அவரைச் சந்தித்து, அவரது நலம் விசாரித்தோம், மேலும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு புறப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் நேற்று (15) இரவு சீனாவிற்கு பயணமானார். அதன்படி, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபராக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பிரியந்த வீரசூரிய உரை நிகழ்த்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு, பொலிஸ்மா அதிபர் செப்டம்பர் 20 அன்று நாடு திரும்பவுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (16) உத்தரவிட்டது.
அதன்படி, ஒவ்வொரு பிரதிவாதியும் தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட உள்ளனர்.
பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
பிரதிவாதிகளுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.
பின்னர், பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பதை சட்டமா அதிபர் எதிர்ப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர், பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்களின் சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள் மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன மற்றும் அமலி ரணவீர ஆகியோரை உள்ளடக்கிய மேல் நீதிமன்ற அமர்வு, சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அரசியல்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.
இலங்கை அரசியலிலும் முஸ்லிம் அரசியலிலும் மர்ஹும் அஷ்ரப் என்ற ஆளுமை தவிர்க்க முடியாத சக்தி. சிறுபான்மைத்தலைவராக பெரும்பான்மை இன ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார்.
அதிகார அரசியலில் சிறிது காலப் பயணமாக இருப்பினும் அவரின் ஆளுமைகள் இன்றும் இலங்கை அரசியலில் பலரால் அசைபோடப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
அரசியல் சாத்தியமானதை சாதிக்கும் கலை என்பார்கள். அஷ்ரப் தனக்கு சாதகமாக வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல விடயங்களை சாதித்துக் காட்டினார்.
அதிலும், இன்று வரை சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கும் இன்றைய ஆட்சியாளர்களான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தியும் அரியாசணம் ஏறுமளவுக்கு அடித்தளமிட்டவர் அஷ்ரப். அன்று பிரேமதாசவிடம் கேட்டுப்பெற்ற தேர்தல் வெட்டுப்புள்ளியை 5% குறைத்தது தான் காரணம் என்பதை எவரும் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.
உயர்வான எண்ணங்களோடு, தூரநோக்கோடு தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அஷ்ரப்பின் அரசியல் பயணம் தங்களுக்கு தலையிடியென உணர்ந்தவர்களின் சதியா? அல்லது விபத்தா? என்ற கேள்வியோடு இன்று வரை தொடர்கின்றது அஷ்ரப்பின் திடீர் மறைவின் மர்மம்.
அஷ்ரப் மரணித்தார், தலையிடி தீர்ந்தது என பேரினவாதம் மகிழ்ந்தது. ஆனாலும், அவரின் கட்சியின் கீழ் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டிருப்பது அவரின் இலக்கை அடைந்து கொள்ள வழிவகுக்கும் என அஞ்சி, சதிக்கு மேல் சதி செய்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அதற்குள்ளிருந்த சிலரை பதவி ஆசை காட்டி உடைத்தெடுத்து பதவி கொடுத்து தலைவர்களாக்கி முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பலவீனப்படுத்தியது இன்று வரை முஸ்லிம் அரசியலில் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
தற்போதைய ஆட்சியாளர்களும் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமை அமைச்சராக நியமிக்கும் மனநிலை இல்லாமல் தான் இருக்கிறார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் மன்னர் காலந்தொட்டு அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து நாட்டுக்கு தொண்டு செய்து வந்த முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவை அடையாளம் இன்று மறுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தில் பல கட்சி தோற்றம், முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தியதன் விளைவும், கடந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையும், அவர்களோடு இணைந்து பயணித்த அரசியல்வாதிகளின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவும் முஸ்லிம் சமூகம் தங்களின் பெருவாரியான வாக்குகளை அனுர பெற்று ஜனாதிபதியாக உறுதியான ஆட்சியைக் கொண்டுசெல்வதற்கும் வழங்கினார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த ஆட்சியாளர்கள் அமைச்சரவை உட்பட பல முக்கிய நியமனங்களில் தகுதியானவர்கள் இருந்த போதும், அவர்கள் புறக்கணக்கப்பட்டமை உட்பட பல அசெளகரியங்களை முஸ்லிம் சமூகம் சந்தித்த நிலையில், இந்த நாட்டில் தாங்களும் தனித்துவமான இனம் என்பதையும், தங்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், ஏனைய இனத்தவர்களால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவற்கும் உரித்துடைய சமூகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
அரசியல் அரங்கில் முஸ்லிம் சமூக அரசியலை உயிர்ப்போடு கொண்டு செல்ல அஷ்ரப் காட்டிய வழிமுறைகளை இளம் சந்ததி அறிந்து கொள்ளச் செய்வதோடு, அஷ்ரப் கால அரசியல் சூழ்நிலை தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பான தெளிவான ஞானத்தையும் இன்றைய இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு இளம் தலைமுறையினரையும், கல்வியலாளர்களையும் உள்ளீர்த்து புத்துயிரளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும் தலைவர் அஷ்ரப் மரணித்து 25 வருடங்கள் நிறைவடையும் தருணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மீண்டும் உயிரூட்டும் அரசியல் யுக்திகள் தொடர்பில் அவதானஞ் செலுத்தவேண்டும்.
தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் பல சவால்கள், துரோகங்களுக்கும் முகங்கொடுத்து கட்சியை முன்கொண்டு செல்கிறார். மேலும் கட்சியை வலுவூட்டும் நடவடிக்கைகளிலும் கவனஞ்செலுத்தி வருகிறார்.
பின்வரும் விடயங்களில் கவனஞ்செலுத்துவதும் கட்சிக்கு புத்துயிரளிக்கும்.
01.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் பற்றிய தெளிவான அறிவை கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு மீண்டும் நினைவூட்டுதல் அவசியமாகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களாக பின்வருபவனவற்றைப் பார்க்கலாம்.
*முஸ்லிம்களின் நலன் :- இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் முன்னேற்றத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்.
*ஜனநாயகத்தின் நிலைநிறுத்தம்:- ஜனநாயக முறைகள், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துதல்.
*ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்:- முஸ்லிம் சமூகத்தின் உட்பகையைத்தவிர்த்து, அவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குதல்.
*தேசிய ஒற்றுமை :- பிற இன, மத சமூகங்களுடனான நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் மேம்படுத்துதல்.
*அரசியல் பிரதிநிதித்துவம்:- உள்ளூராட்சி, மாகாண, நாடாளுமன்றம் உள்ளிட்ட சகல் நிலைகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறல்.
*சமூக முன்னேற்றம்:- கல்வி, கலாசாரம், பொருளாதாரம் போன்ற துறைகளில் முஸ்லிம்களின் வளர்ச்சியை உறுதி செய்தல்.
*சமாதானம்:- நாட்டில் நிலையான அமைதி, சமாதானம், சமநிலை ஆகியவற்றை நிலைநிறுத்த முயற்சித்தல்.
உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை நோக்கும் போது பலரால் இனவாதக்கட்சி என குற்றஞ்சாட்டப்படுவது அடிப்படையற்றது என்பதை விளங்கிக்கொள்வதோடு, ஒரு ஜனநாயகக்கட்சி என்பதை தெளிவாகப்புரிந்து கொள்ள முடிகிறது.
புதிய தலைமுறை முன்னேற்றம்:-
இன்றைய தலைமுறை மக்கள் (இளைஞர்கள், கல்வியறிவு பெற்றவர்கள்) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை “பழைய கட்சி, இனத்துவக்கட்சி” எனக் கருதுகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியத்தை எடுத்துக்கூறி இளைஞர்கள், பெண்கள், கல்வியாளர்கள் கட்சிக்குள் உள்வாங்கி முன்னுரிமை வழங்க வேண்டும். தூய்மையான, ஊழலற்ற முகங்களை முன்வைக்க வேண்டும்.
அரசியலில் நம்பிக்கை இழந்த முஸ்லிம் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக, புதுமையான யோசனைகள் (Digital platforms, job creation policies) கொண்டு வர வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளில் நேரடி ஈடுபாடு:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று “கூட்டணி அரசியல்” என்ற பெயரில் அமைச்சுப்பதவிகளை மட்டுமே நாடுகிறது என்ற குற்றச்சாட்டுண்டு.
இதைத் தகர்க்க, பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள், மீனவர்கள், சிறுதொழிலாளர்கள் பிரச்சினைகள் மற்றும் பிரதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனித்துவமாக எடுத்துரைக்க வேண்டும்.
கிராம, மாவட்ட மட்டத்தில் உண்மையான சமூகப்பணி செய்ய கட்சி மட்டத்திலுள்ள நிருவாகிகள் தயாராக வேண்டும், இதற்குப்பொருத்தமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நிருவாகப்பொறுப்புகள் வழங்கப்படுதல் வேண்டும்.
இன ஒற்றுமை – பாலம் கட்டும் பங்கு:
அஷ்ரப்பின் கனவான தேசிய ஐக்கிய முன்னணி( NUA ) – எல்லா இனங்களையும் இணைக்கும் மேடையாக பார்க்கப்பட்டது.
இன்று அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக உயிர்ப்பிக்க தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் உண்மையான சமரச அரசியல் செய்ய வேண்டும்.
முஸ்லிம் பிரச்சினைகளைத் தனியாகப்பேசினாலும், நாட்டின் ஒருங்கிணைந்த பிரச்சினைகளிலும் பங்களிக்க வேண்டும். (தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்சொன்ன விடயத்தில் தொடராக பங்களிப்புச்செய்து வருகிறார்)
கொள்கை மற்றும் நெறிமுறை புதுப்பிப்பு:-
வெளிப்படையான கொள்கை அறிக்கை (Policy Manifesto) தயாரிக்க வேண்டும். ஊழல், குடும்ப அரசியல், பதவி வியாபாரம் ஆகியவற்றைத்தவிர்த்து, நேர்மை என்ற முகத்துடன் செயற்பட வேண்டும்.
தேசிய அரசியலில் தனித்துவ பங்கு:-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் “பெரிய கட்சிகளின் துணைக்கட்சி” என்ற விமர்சனம் இருக்கிறது.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தளவில் சுயாதீன முடிவுகளை பல சந்தர்ப்பத்தில் எடுத்திருக்கிறது.
தேர்தலில் தனித்துப்போட்டியிடும் துணிச்சல் இக்கட்சியிடம் இருக்கிறது.
அரசாங்கத்தில் சேரும் போது கூட, முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் உறுதிகளையும் பல சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொண்டிருக்கிறது.
தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகள்
*சமூக ஒருமையை மீட்டெடுத்து வலிமை கொடுக்கல்:- பிரிவுகளை ஒன்றிணைத்து சமூகத்தின் அடிப்படை சக்தியை உறுதி செய்தல்.
*பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல்:- எதிர்க்கட்சியாக இருந்தாலும் சமூகத்தின் உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் கவனம்.
*அரசியல் திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்துதல். தேர்தல் வாக்கு சக்திகளை கணக்கிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
*இளம் தலைமுறைக்கு வழிகாட்டுதல்:- அஷ்ரப் காட்டிய அரசியல் வழிமுறைகள் இளம் தலைமுறை அறிந்து பின்பற்றச்செய்தல்.
இன்றைய சூழ்நிலையில் அடுத்த தலைமுறை நோக்கி கட்சியை நகர்த்த வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தாலும், அடுத்த தலைமுறை மூலம் சமூக அரசியலை வலுப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
*இளம் தலைமுறை உரிமையாளர்களை கட்சியில் சேர்ப்பது :- இளம் இளைஞர்களின் திறன், கற்பனை மற்றும் உற்சாகத்தை கட்சிக்கு புதுப்புயிர் கொடுக்கப் பயன்படுத்துதல்.
*சமூகப்பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒருமை வலுப்படுத்தல்:- சமூகத்திலுள்ள அனைவரும் கட்சியின் செயற்பாடுகளுக்கு இணைந்து பங்களிக்கத்தூண்டுதல்.
*அரசியல் கல்வி மற்றும் பயிற்சி:- அஷ்ரப் கால அரசியல் சூழ்நிலையை அறிந்து, தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்க்கட்சிப் பங்களிப்பை திட்டமிடும் திறன் வளர்த்தல்.
*முஸ்லிஸ் சமூக உரிமைகள் மற்றும் அதிகாரங்களை பாதுகாப்பது :- சமூகத்தின் நியாயமான உரிமைகள், வாக்கு சக்தி மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.
*முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உருவாக்கல்:- சமூக நலன், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் நடவடிக்கைகள்.
இவ்வாறு, அடுத்த தலைமுறை உருவாக்கப்படும் வழியோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சமூகத்திற்கும் அரசியலிற்கும் உறுதியான பங்களிப்புச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கு கட்சிக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்து பொருத்தமான நபர்களாக இளைஞர்கள், கல்வியலாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளீர்த்து பொறுப்புகளைக்கையளித்து, ஆலோசனைகளை வழங்கி, கண்காணிப்புகளை மேற்கொள்வதனூடாக சிறப்பான அடைவுகளைக்காணலாம்.
அஷ்ரப் கால சாதனைகள், பெற்ற உரிமைகள், நுட்பமான அரசியல் நகர்வுகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரின் செயற்பாடுகள் இணைந்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிஸ் சமூக அரசியலை வலுவாக்கும் வழிமுறையை உருவாக்குகின்றன.
இளந்தலைமுறை இதனைப்பின்பற்றி, சமூக ஒற்றுமை, அதிகாரம் மற்றும் உரிமைகளை வலுப்படுத்தி, அஷ்ரப் இலக்குகளைத்தொடர வேண்டும். இதன் மூலம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிஸ் சமூக அரசியல் மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய பாத்திரம் வகிக்கும்.
எனவே, மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதோடு நின்று விடாது, அவரின் நோக்கங்களை வெற்றி பெறச்செய்ய அனைவரும் திடசங்கம் பூண வேண்டும்.
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதுதான் எனத் தெரிவித்தார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று (15) பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தை கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
அலுவலகப் பணிகளை எளிதாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்காக, 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் விதிகளின்படி டிஜிட்டல் கையொப்பங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட நிறுவனமாக லங்காபே LankaPay உள்ளது.
அதன்படி, கடிதங்களைச் செயலாக்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கலாம் மற்றும் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்.
Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி நிலைபேறான, நவீன மற்றும் தரப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து கட்டமைப்புடன் கூடிய அழகான வாழ்க்கை முறையை அடைவதற்காக, புகையிரத நிலையங்களில் பொது வசதிகளை மேம்படுத்தல், புகையிரத நிலையங்களை வசதியான மற்றும் பாதுகாப்பான இடங்களாக மாற்றும் நோக்கத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டம், அரச-தனியார் பங்களிப்பின் கீழ் நாட்டில் நூறு புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்கும் சுத்தமான, அழகான புகையிரத நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புகையிரத நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதுடன் கட்டுப்பாட்டு அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டார்.
புகையிரத திணைக்களத்திற்கே உரித்தான ‘ருஹுனு குமாரி’ என்ற புதிய சிங்கள கணினி எழுத்துருவும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகையிரத நிலையமாக கருதப்படும் மருதானை புகையிரத நிலையம், கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய புகையிரத நிலையமாக கருதப்படுகிறது.
இந்த நவீனமயமாக்கல் பணிகள், இதன் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
புகையிரத சேவையை புறக்கணிப்பதும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு பலியாகுபவர்களாக புகையிரத சேவை ஊழியர்கள் மாறி இருந்ததும், இந்த நாட்டில் தரமான புகையிரத சேவையைக் கட்டியெழுப்புவதில் சவாலாக இருந்தது.
மக்களின் அன்றாட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான வழிமுறையான புகையிரத சேவை குறித்து பொதுமக்களின் நம்பிக்கையை வளர்த்து, செயற்திறன்மிக்க மற்றும் வினைத்திறனான புகையிரத சேவையைப் பேணுவதும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும், புகையிரத தொழிற்சங்கங்கள், பயணிகள் மற்றும் பிரதேசவாசிகள், தனியார் துறையினர் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அனைவரின் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிகிரிய கண்ணாடிச் சுவரில் தலையில் குத்தியிருந்த கொண்டை ஊசியால் எழுதிய இளம் பெண்ணை வரும் 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை மாவட்ட நீதிபதி நிலந்த விமலரத்ன இன்று (15) உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயது பெண்.
சிகிரிய கண்ணாடிச் சுவரில் ஆறு ஆங்கில எழுத்துக்களை கொண்டை ஊசி மூலம் எழுதியதாக சந்தேகிக்கப்படும் 21 வயது பெண் ஒருவர் நேற்று (14) மதியம் கைது செய்யப்பட்டதாக சிகிரிய போலீசார் தெரிவிக்கின்றனர்.
அவிசாவளையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் குழு ஒன்று சிகிரியவைப் பார்வையிட வந்திருந்தனர், அவர்களில் ஒருவர் தனது தலையில் குத்தியிருந்த கொண்டை ஊசி மூலம் சிகிரிய கண்ணாடிச் சுவரில் எழுதுவதைக் கண்டு தொல்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
பின்னர், சிகிரிய தொல்பொருள் மண்டலப் பொறுப்பதிகாரி தனுக உதயங்க, அந்த இளம் பெண்ணை சிகிரிய காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த இடத்தில் உள்ள கண்ணாடிச் சுவரின் முக்கியத்துவம் குறித்தும், அதைத் தொடுவது, எழுதுவது மற்றும் சேதப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தொல்பொருள் அதிகாரிகளுக்கு மூன்று மொழிகளிலும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சிறுமியுடன் சென்ற ஒரு குழு தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வெளியேறியது.
பெற்றோர் சிகிரியா காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர், மேலும் அவரது தந்தை தனது மகள் முதல் முறையாக சிகிரியாவிற்கு வந்ததாகக் கூறினார்.
சந்தேக நபர் தொல்பொருள் சட்டத்தின் கீழ் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக சிகிரியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் திலக் குமார தெரிவித்தார்.
“மருதங்களின் சமர் “2025 துடுப்பாட்ட போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் கல்வியை வழங்குகின்ற பூநகரி மத்திய கல்லூரி மற்றும் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி அணிகள் மோதுகின்ற இரண்டாவது மருதங்களின் சமர் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 17ம் திகதி பூநகரி மத்திய கல்லூரி மைதானத்தில் மென்பந்து போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்த வருடம் இரு கல்லூரியின் பெண்களுக்கான மருதங்களின் சமர் துடுப்பாட்ட தொடரும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இரண்டு போட்டிகளுக்குமான வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வு பூநகரி மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இராமலிங்கம் பாலச்சந்திரன், பூநகரி மத்திய கல்லூரி முதல்வர் அரசரட்ணம் பங்கையற்செல்வன், முருகானந்தா கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.