Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 106

வீட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த ராஜபக்ஷ!

0

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் புதிய சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க பாராளுமன்றில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 

நேற்று (10) பாராளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார். 

இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்திருந்தது. 

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. 

அவர் ஹம்பாந்தோட்டை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர உள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்க எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னு!

0

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்தார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பார்லியில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக ஃபிரான்சுவா பேரூ பதவியேற்றார்.

பாா்னியா் பதவி விலகிய பின்னா் ஃபிரான்சுவா பேரூவை பிரதமராக மேக்ரான் நியமித்தாா். இந்நிலையில், அரசின் கடன்களை எதிா்கொள்ள அவா் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இதனால் நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை பேரூ நேற்று முன்தினம் மேற்கொண்டாா். அப்போது அவருக்கு எதிராக 364 வாக்குகள் பதிவானதால் அவா் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து நாட்டின் தற்போதைய ராணுவ அமைச்சராக உள்ள செபஸ்டியன் லெகுர்னுவை, புதிய பிரதமராக நியமித்து அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று உத்தரவிட்டார். இதன் வாயிலாக, பிரான்ஸ் நாட்டில் ஒரே ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமராக லெகுர்னு திகழ்கிறார்.

நாட்டில் அதிகரித்த திருட்டுச் சம்பவங்கள்!

கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் ஏ9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும், திருடர்கள் (CCTV) பாதுகாப்பு கேமராவில் சிக்கியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குல் நுழையும்போது பாதுகாப்பு கேமராவில் திருடர்கள் சிக்கியுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

0

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார். 

எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று ரஞ்சித் மத்துமபண்டார மேலும் கூறினார். 

எனினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். 

இதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகரின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு கோரினார், ஆனால் இது ஒரு விவாதம் அல்ல என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சபாநாயகர் கூறினார். 

இதனையடுத்து பாராளுமன்றத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், குறித்த அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினார். 

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கத்தாரை தாக்கிய இஸ்ரேல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட “கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை” கத்தார் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேலும் இந்தத் தாக்குதலை “அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறல்” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த பொறுப்பற்ற இஸ்ரேலிய நடத்தையையும், பிராந்திய பாதுகாப்பில் அதன் தொடர்ச்சியான குறுக்கீட்டையும், அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கத்தார் அரசு பொறுத்துக்கொள்ளாது என்று கத்தார் தெரிவித்துள்ளது.

என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இத்தாக்குதல் குறித்து உயர் மட்டத்தில் விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் மேலும் விவரங்கள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தோஹாவில் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நடத்தியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிரான இன்றைய நடவடிக்கை முற்றிலும் சுதந்திரமான இஸ்ரேலிய நடவடிக்கை” என்று நெதன்யாகு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.

“இஸ்ரேல் அதைத் தொடங்கியது, இஸ்ரேல் அதை நடத்தியது, இஸ்ரேல் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சமீபத்திய காசா போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க ஹமாஸின் பேச்சுவார்த்தையாளர்கள் ஒன்றுகூடிய நிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக ஹமாஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராகவும், அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தின் தாயகமாகவும் இருக்கும் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தில் சாதனை படைத்த ஷஹாப்தீன் லுக்மான்!

0

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட துணை பணிப்பாளர் (Senior Deputy Director of Customs) ஜனாப் ஷஹாப்தீன் லுக்மான் 1998 முதல் இலங்கை சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதுடன், நாட்டின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மேலும் 560 க்கும் மேற்பட்ட இருபது அடி நீளமுள்ள கண்டைனர்களில் நாட்டுக்குள் வந்த (560 TEUs) அபாயகரமான கழிவுகளை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதற்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் ஆசிய பசுபிக் சுங்கம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இருபது அடி நீளமுள்ள 104 கண்டைனர்களில் (104 TEUs) சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பாக்குகளை பறிமுதல் செய்து மேற்பார்வையிட்டுள்ளதுடன், உள்ளூர் விவசாயத்தை வெளிநாட்டு ஆபத்தான பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படக்கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாத்து சிறப்பான சேவையை வழங்கியுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை கைவைக்கப்படாத சில பகுதிகளையும் தைரியமாக விசாரணைகள் செய்துள்ளதுடன், அனுமதிக்குப் பிந்தைய தணிக்கையில் அவரது நிபுணத்துவம் மூலம் எதிர்பாராத வருவாய் இலங்கை சுங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.

மேலும் எருக்கலம்பிட்டியை சேர்ந்த ஜனாப் ஷஹாப்தீன் லுக்மானின் முயற்சிகள், துணிச்சலாக கண்டறிதல், தொழில்முறை அணுகுமுறை, பயனுள்ள மக்கள் தொடர்பு மற்றும் விடாமுயற்சி மூலம் இலங்கையின் நலன்களைப் பாதுகாப்பதில் சுங்கத்தில் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக்கொலை!

0

நேபாள முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனல் இல்லத்துக்கு போராட்டக்காரர்கல் தீ வைத்தனர். ஜாலா நாத் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிரிழந்தார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பல கட்டடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. கண்டிப்பூரில் உள்ள தொலைக்காட்சி அலுவலக கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்கள் இல்லம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கிடையே பிரதமர் மாற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள்.

நேபாளத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இலங்கையை போன்றே நேபாளத்தில் புரட்சி வெடித்துள்ளது. 2022ல் இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

இலங்கையில் 2022 மார்ச்சில் தொடங்கிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் கோத்தபய ராஜபக்ச. இலங்கையில் போராட்டத்தின்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதவி துறந்தார் நேபாள ஜனாதிபதி!

0

நேபாளத்தில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, அந்த நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் பதவி விலகியுள்ளார்.

முன்னதாக பிரதமர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியும் பதவி விலகினார்.

அவர் பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார்.

கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு பூட்டு!

0

புதுப்பித்தல் பணிகள் காரணமாக, கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகம் நாளை மறுதினம் (11) முதல் மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

குறித்த பணிகள் முடியும் வரை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு புதிய கட்டிடம்!

0

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர
சிகிச்சை பிரிவு கட்டிடம் நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (09) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் கையெழுத்தானது.

மேற்கூறிய நடவடிக்கைகள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவுவதாக இந்த நிகழ்வு அமைகிறது.

சுகாதார செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு செலவிடும் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 600 மில்லியன் மற்றும் திட்ட காலம் 03 ஆண்டுகள் ஆகும்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை நிர்மாணித்தல் மற்றும் வழங்குவதற்கான இலங்கை அரசின் குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் துணை இயக்குநர் ஜெனரல் (திட்டமிடல்) டாக்டர் எஸ். ஸ்ரீதர்ன், கூடுதல் செயலாளர் (மேம்பாடு) சுனில் கலகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.