Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 107

நேபாளத்தில் பிரதமருக்கு எதிராக தொடங்கிய “அரகலய”

0

நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. நேற்று போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலியான நிலையில், 300 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தினர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார்.

நேபாள உள்துறை அமைச்சர் பதவி விலகினால் போதாது, பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இளைஞர்கள் போராட்டம் காரணமாக நேபாளத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகினர். இந்த நிலையில், இன்றைய தினம் நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள நாட்டில் உள்ள சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இத்தகைய இணையதளங்கள் நேபாள நாட்டு சட்டப்படி பதிவு செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் உரிய நிபந்தனைகள்படி பதிவு செய்யப்படாத பேஸ்புக், யூடியூப் உள்பட 26 சமூக ஊடகங்கள் செப்.4ஆம் தேதி முதல் நேபாள நாட்டில் தடை செய்யப்பட்டன.

இந்த இணையதளங்கள் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்படும் வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நேபாள ஜென் இசட் தலைமுறைைய சேர்ந்த இளைஞர்கள் நேற்று நாடு முழுவதும் இணையதள தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறி போகவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ளனர். நேபாள நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கிய பிறகும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலியர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ராமோட்டின் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு பாதுகாப்பு அதிகாரியும் ஒரு குடிமகனும் குற்றவாளிகளை சுட்டுக் கொன்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.

குற்றவாளிகள் ஒரு வாகனத்தில் வந்து ஒரு பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இடையிலான அனைத்து சோதனைச் சாவடிகளையும் இஸ்ரேலியப் படைகள் மூடியதாக தெரிவித்தன.

குற்றவாளிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வந்ததாக காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் அந்தப் பிரதேசத்தில் உள்ள ஜெருசலேம் கவர்னரேட்டில் உள்ள நான்கு கிராமங்களான கட்டானா, பிட்டு, பெய்ட் இனான் மற்றும் பெய்ட் டுகு ஆகிய இடங்களில் இராணுவச் சுற்றி வளைப்பை ஏற்படுத்தி அங்கு சோதனைகளை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் பரந்த ஜெருசலேம் பகுதியில் தனது படைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் “உடந்தையாக இருந்தவர்கள்” என்று விவரித்தவர்களைத் தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜித சேனாரத்னவுக்கு பிணை!

0

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

யாழில் இடம்பெற்ற உலகளாவிய கருத்தரங்கு!

வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து ‘போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு’ என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (09.09.2025) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர் தனது உரையில், வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணிகளையும் கருத்திலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது.

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே?

அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் – ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன. அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன், என்றார் ஆளுநர்.

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பூதாகரமாக மாறிய ஐஸ் கொள்கலன்கள்!

0

ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன. சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன. இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது. 

இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார். 

போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும். இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

0

2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி நாளை (9) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் ஒன்லைன் ஊடாக விடைத்தாள் மதீப்பீடு தொடர்பான மேன்முறையீட்டை முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல் விடும் மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம்!

0

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்தின் முதல் கட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றால், சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்தா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி அறிவிப்பு!

0

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. 

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற குழு அல்லது இதே போன்ற பொறிமுறையின் மூலம் பணியாற்றவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் பொதுவான பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி, நீண்ட காலமாக கலந்துரையாடி வருகிறது. 

அந்தக் கலந்துரையாடல்களின் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை தொடர்ந்து செயல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெளிப்படையாகப் பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மு.ஜனாதிபதி ரணிலின் முடிவு அரசியலமைப்புக்கு முரணா?

0

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. 

இந்த மனுக்கள் இன்று (08) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டது. 

இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது. 

பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றுமுதல் கடுமையாக்கப்பட்ட போக்குவரத்து சட்டம்!

0

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். 

போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.