Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 109

ஆப்கான் நிலநடுக்க பலி 2,200-ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 2,205ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கங்கள் மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, நாட்டின் உள்கட்டமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளன. இந்த நிலையில், இன்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், ஜலாலாபாத் நகரில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் வடகிழக்கே மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு மிகவும் வலுவாக இருந்ததால், பீதியடைந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் அல்லது உயிர்ச்சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஏராளமான கிராமங்களைத் தரைமட்டமாக்கியதுடன், ஆயிரக்கணக்கானோரை இடிபாடுகளில் சிக்க வைத்தது.

குறிப்பாக, குனார் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை தற்போது 2,200ஐ கடந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பலியானோரின் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடாரங்கள், முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள கரடுமுரடான மலைப்பாதைகள் மீட்புப் பணிகளுக்குப் பெரும் தடையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாருக்குல் வந்து மூக்குடைபட்டு சென்ற அமைச்சர்!

0

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்று (05) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர். 

மன்னார் தீவில்  காற்றாலை  அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான  குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் காற்றாலை, கணிய மணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்தில் இனியும் வேண்டாம் என்று ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை கோபுரங்களும், தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2 காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது. 

குறித்த 5 காற்றாலை கோபுரங்களும், 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின் கோபுரங்களும், பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.குறித்த 8 காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. 

இந்த நிலையில் குறித்த 5 கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து குறித்த கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாரிற்கு விஜயம் செய்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன் போது அமைச்சருடன் அதிகாரிகள் வருகை தந்தனர். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், து.ரவிகரன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன், மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர். 

மேலும் மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், மீனவர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். 

மேலும் தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு, எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம். 

எனினும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது பகுதிக்குள் காற்றாலை வேண்டாம், அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என ஒருமித்து தெரிவித்தனர். 

இந்நிலையில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர். குறித்த கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும் எவ்வித பதிலும் வழங்காது அங்கிருந்து வெளியேறினர்.

கற்பிட்டி மத்தியஸ்தர் சபைக்கு புதிய தலைவர்!

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் புதிய தலைவர், உப தலைவர் தெரிவும் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை 9.00 மணிக்கு கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் பயிற்சி உத்தியோகத்தர் ஜே.எச். திமுத் இசுர , கற்பிட்டி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ். மர்ஜானா, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம அதிகாரி பீ.எம்.எம். பைனஸ், புத்தளம் மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் என். அருனராஜ், கற்பிட்டி பிரதேச செயலக மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.டீ. பெர்ணாந்து ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் தலைவராக
எதிர்வரும் மூன்று (2025 – 2028) வருட காலத்திற்கு கடந்த 35 வருடங்கள் மத்தியஸ்தர் சபையின் உறுப்பினராகவும் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக உப தலைவராக கடமையாற்றிய கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் டபள்யூ.பீ. சகீலா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உபதலைவராக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜீ.வீ. அனூசா தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நபிகளாரின் பிறந்த தினத்தில் ஜமிய்யாவின் முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் பெருமானார் நபி முஹம்மத் ﷺ அவர்கள் மனித சமூகத்துக்கு ஒரு விடிவாக சத்திய மார்க்கத்தையும், சமூக விடுதலையையும், சுய மரியாதையையும், அமைதியையும், சுபீட்சத்தையும் சுமந்தவர்களாக இப்பூமியில் வந்துதித்தார்கள்.

அதனால் தான் அல்லாஹு தஆலா நபி ﷺ அவர்களை பற்றி அல்-குர்ஆனிலே குறிப்பிடும் போது “உலக மக்களுக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.” என சிறப்பித்துக் கூறுகிறான். (சூரா அல்-அன்பியா : 107)

மேற்படி அல்-குர்ஆனின் கூற்றுப் படி, அகிலத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் ரபீஉல் அவ்வல் மாத்தித்திலே தான் பிறந்தார்கள் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையில் ‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்று பொருளாகும். வசந்த காலத்தில் தான் தாவரங்கள் பூத்துக் குலுங்கி பூமிக்கு பசுமையையும், செழிப்பையும், அழகையும், ரம்மியத்தையும் ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்த எமது உயிரிலும் மேலான நபி முஹம்மத் ﷺ அவர்கள் மனித சமூகத்துக்கு சத்திய மார்க்கத்தையும், இறையருளையும், சர்வதேசத் தூதையும் சுமந்து வந்தார்கள்.

அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு அனுப்பட்ட அத்தனை நபிமார்களும் ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு ஆகிய விடயங்களைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். இறுதி இறைத்தூதரான நபிகளார் ﷺ அவர்களும் அதே பணியினை மேற்கொள்வதற்காகத் தான் அல்லாஹு தஆலாவினால் இவ்வுலகிற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்.

இதனை பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்.” (சூரா அல்-ஜுமுஆ : 02)

“(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். (சூரா அல்-பகரா : 119)

அந்தவகையில் நபி ﷺ அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் பல சிறப்பம்சங்களைப் பெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீலாதுந் நபி தினம் எனப்படும் நபிகளார் ﷺ அவர்களது பிறந்த தினமானது உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய உன்னதமான ஒரு நிகழ்வுக்குரிய தினமாகும்.

அன்னார் மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். அனைவருடனும் பாகுபாடின்றி, அன்பாகவும் பண்பாகவும் பழகினார்கள். மனித நேயம், சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக அன்னார் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். எப்போதும் எல்லா நிலைமைகளிலும் நீதமாக நடந்துகொண்டதோடு ஏழை எளியோரை, அநாதைகளை அரவணைத்து வாழ்ந்தார்கள். பல்லின சமூகங்களையும் உள்ளடக்கிய ‘மதீனா சாசனம்’ எனும் நீதமான யாப்பை அறிமுகம் செய்தார்கள். ஆன்மிகம், லௌகீகம் ஆகிய இரண்டிலும் ஒருசேர மகத்தான வெற்றியைப் பெற்றார்கள். எனவேதான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதராக அண்ணல் நபி ﷺ அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

நபி ﷺ அவர்கள் மூலம் அல்லாஹ் நபித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். மறுமை வரைக்கும் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டும் பொறுப்பை அன்னாரிடம் ஒப்படைத்தான். எனவே எம் பெருமானார் ﷺ அவர்கள் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும் ஏக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். அம்மாமனிதரின் முழு வாழ்வுமே மனித குலத்திற்கான அழகிய முன்மாதிரிகளால் நிரம்பி வழிந்தன. இந்த உண்மையை அல்-குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

“அல்லாஹ்வின் தூதரில் நிச்சயம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது”. (சூரா அல்-அஹ்ஸாப்: 21)

நபிகளார் ﷺ அவர்கள் மீது பற்றுவைத்தல் எனும்போது குறைந்தபட்சம் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்தும் ஸலாமும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) சொல்லல், அவர்களின் பெயர் கூறும் போதும் பிறர் கூறக் கேட்கும் போதும் கண்ணியப்படுத்தி ஸலவாத் சொல்லல், அவர்களது குடும்பத்தவர்கள் (அஹ்லுல்பைத்), தூய மனைவிமார்கள் மற்றும் நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) ஆகியோர் மீதும் அன்பும் கண்ணியமும் வைத்தல், ஹதீஸ்களை கற்றுக்கொள்ளல், சுன்னாக்களை பேணுதலோடு நடைமுறைப்படுத்தல், நபி ﷺ அவர்களின் ஆளுமைப் பண்புகளை புரிந்துகொள்ளவும் படித்து விளங்கவும் நேரம் ஒதுக்குதல், அறியாத மக்களுக்கு அன்னாரை அழகிய முறையில் அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களை தவறாகப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அப்புரிதலைக் களைந்து, சரியான புரிதலை அவர்களுக்கு வழங்கி நபிகளார் ﷺ அவர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தல் என்பன அன்னாரின் சமூகத்தினர் என்ற வகையில் எமது கடமையும் பொறுப்புமாகும்.

எம் பெருமானார் அவர்கள் கொண்டுவந்த மார்க்கமும், அவர்களின் வாழ்க்கை முறைகளும், எல்லா மனிதர்களாலும் எடுத்து நடக்க இலகுவானதாகவும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதாகும் என்பது உலகம் வியக்கும் விடயமாகும்.

அன்னார் கொண்டு வந்த இஸ்லாமியத் தூது ஈருலக வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்து நின்றது. அந்தத் தூது அநாகரிகமாக வாழ்ந்த மக்களை நாகரீகத்தின் பால் அழைத்துச் செல்லக்கூடியதாக இருந்தது.

“முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்.” (சூரா அல்-ஹுஜ்ராத் : 02)

“(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்.” (சூரா அந்-நூர் : 63)

மேற்படி திருமறை வசனங்களின் ஊடாக அன்பு நபி ﷺ அவர்களுக்கு முன்னால் தமது சப்தத்தை உயர்த்திப் பேசுவதையும் அவர்களோடு அவமரியாதையாக நடந்து கொள்வதையும் அல்லாஹு தஆலா தடை செய்துள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதன்படி, நபி ﷺ அவர்களின் உத்தம தோழர்கள் அவர்களை தம் உயிருக்கும் மேலாக நேசித்ததோடு அவர்களிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பண்பாட்டோடும் நடந்துகொண்டார்கள்.

எனவே, நாமும் அதேபோன்று அல்லாஹு தஆலா வழிகாட்டியதன் அடிப்படையில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் எமது உயிரை விடவும் மேலான நபி ﷺ அவர்கள் மீது நேசம் வைப்போம். அவர்களது வாழ்க்கையை ஆழமாகக் கற்றுக் கொள்வதோடு, எமது பிள்ளைகளின் உள்ளங்களிலும் அவர்கள் மீதான அன்பையும் பற்றையும் விதைப்போம். அல்லாஹ் எம்மனைவரையும் இறுதிநாள் வரை நபி ﷺ அவர்கள் காட்டித்தந்த வழியில் வாழச்செய்வதோடு அன்னாரோடு சுவனத்தில் ஒன்றாக வாழும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக!

நிறைவேற்று குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

இறுதித்தூதர் முஹம்மது நபியின் பிறந்த தினம் இன்றாகும்!

0

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும். 

முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இறுதி நபியான முஹம்மது நபி (ஸல்) அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பெரும் பணியை ஆற்றியவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்தார். 

பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக, இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற, சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 

இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்தவொரு நபரும் மற்றொருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகத்துவமான கருத்தே அவரது போதனைகளின் அடித்தளமாகும். 

சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 

சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, சிந்தனையுள்ள, கருணையுள்ள, நீதி மற்றும் நியாயத்தை உலகிற்குக் கற்பித்த மனிதாபிமான உணர்வுகளையும் மனித அன்பையும் உலக உயிரினங்களுக்காகப் பகிர்ந்தளித்த இறைதூதர் முஹம்மது நபிகளாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அதற்காக முழு உலக மக்களுக்கும் அதேபோல் இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துச் செய்தியை அனுப்ப முடிந்தமை மகிழ்ச்சிக்குரியதுன அவர் குறிப்பிட்டுள்ளார். 

இனம், மதம், குலம் அல்லது இருப்பு நிலை பார்க்காமல் ஒருவருக்கொருவர் மரியாதை, கருணை மற்றும் சேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது மட்டுமே ஒரு சமுதாயம் செழிக்க முடியும் என்பதை நபிகள் நாயகம் நமக்குக் காட்டியுள்ளார். 

சமூக பிரச்சினைகளுக்கு சர்வதேசம் நிலைதன்மையான தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது. நபிகளாரின் உன்னத போதனைகளில் முழு மானுடத்திற்கே வழிகாட்டல்கள் உட்பொதிந்துள்ளன.

அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை. 

ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மேலும் சவால்கள் வரக்கூடும். 

ஆனால் ஒரே மக்களாக, ஒரே குடும்பமாக மற்றும் ஒரே நாடாக ஒன்றிணைவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன மத குல வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப அன்னார் காட்டிய வழிமுறைகளை நாமும் பின்பற்ற முடியும். 

அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் நாட்டிற்காக ஒன்றாக அணிதிரளுவோம் என தமது வாழ்த்திச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை துயரத்தில் ஆழ்த்திய கோர விபத்து!

0

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று (04) இரவு நடந்த பேருந்து விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். 

அத்துடன் இறந்தவர்களில் இரண்டு சிறு பிள்ளைகளும் பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பதுளை போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பில் 9 மணி நேர நீர் வெட்டு!

0

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (06) 9 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த. தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான. மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த நல்லாந்தழுவை பாடசாலை!

0

இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் 14 மாணவர்கள் சித்திபெற்று புத்தளம் தெற்கு கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் மதுரங்குளி பகுதியில் அமைந்துள்ள தமது நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை தமது பாடலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாப் M.Y. ஹுதைபா தெரிவித்தார்.

இதன் மூலம் புத்தளம் தெற்கு கோட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, புத்தளம் புத்தளம் நல்லாந்தழுவை பாடசாலையைச் சேர்ந்த 14 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதில் ரகுமான் பாத்திமா ரஹ்னா என்ற மாணவி அதிகூடிய புள்ளியாக 162 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சாதனைபடைத்த கற்பிட்டி அல் ஹிரா பாடசாலை!

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலை மாணவி நதா தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் கற்பிட்டி நகரில் அதி கூடிய புள்ளி பெற்று வரலாற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி எம்.என்.எப். நதா 154 புள்ளிகள் பெற்று கற்பிட்டி நகரிலேயே அதிக கூடிய புள்ளி பெற்றவராக வரலாற்று சாதனை புரிந்துள்ளார் .

அத்தோடு அதே பாடசாலையின் மாணவி எம் எப். எப் ஹயா 134 புள்ளி மற்றும் எம் எஸ் எம் இஷாக் 134 புள்ளிகள் பெற்று மூவரும் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் புத்தளம் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எம்.எம்.எம். நவ்ப் தெரிவித்துள்ளனர்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு பாடசாலையிலிருந்து 38 மாணவர்கள் தோற்றியதாகவும், அதில் மூன்று மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 58 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் இம் மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்களான ஏ.எம்.எப். பாரா, ஆர்.எம். றின்ஷா, ஏ.எம்.எப். தஸ்ரிகா ஆகியோருடன் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அதிபர் எம்.எம்.எம். நவ்ப் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை விரிவுரையாளர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்!

0

சுமார் 13,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க கூறுகிறார்.

அதன்படி, இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது ஐம்பது சதவீத விரிவுரையாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,500 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 150 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பீடங்களில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க சுட்டிக்காட்டுகிறார்.

இந்த சூழ்நிலை காரணமாக, பல பட்டப்படிப்புகளின் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு போதுமான வசதிகள் மற்றும் சம்பளம் இல்லாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள பல சிக்கல்கள் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.