Home Blog Page 110

இலங்கை மீனவர்களை தாக்கியது இந்திய கடலோரப் படை அல்ல!

அண்மையில் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், இதில் இந்திய கடலோர காவல்படையினருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் குறித்தும் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் வினவப்பட்ட போது, இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று இந்தியா எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டு மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக பெரும் பரபரப்பை ஏற்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி வென்னப்புவ – வெல்லமங்கரைய துறைமுகத்திலிருந்து ‘தினிதி துவ’ மற்றும் ‘தினிதி துவ 1’ ஆகிய இரு படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஜனவரி 29 ஆம் திகதி அவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் அவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்திந்திருந்தனர்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்தார்.

நாட்டில் மொத்தம் 899 இலுவைக் கரைவலை மீன்பிடித் தளங்கள் உள்ள நிலையில், ஒரு சிறு குழுவினர் வலைகளை இழுப்பதற்கு டிராக்டர்களைப் பயன்படுத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

முன்னைய ஆட்சியின் போது சட்டத்திற்குப் புறம்பாக 183 பேருக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அது முறையற்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார், தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

டிராக்டர்களைப் பயன்படுத்துவதால் கடற்கரை மற்றும் கடல் தளங்கள் சேதமடைவதுடன், சிறிய அளவிலான மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின் கீழ், பாரம்பரிய முறைகளைப் பாதுகாப்பதற்காகவே புதிய ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தளவில போன்ற பகுதிகளில் பாரம்பரிய முறையில் வலைகளை இழுப்பதன் மூலம் சிறந்த வருமானம் ஈட்டப்படுவதையும் அரசாங்கம் உதாரணமாகக் காட்டியுள்ளது.

2026 ஜனவரி 1 முதல் டிராக்டர் பயன்பாட்டிற்கான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையை எதிர்த்து சில மீனவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், சட்டத்தின் அடிப்படையில் முறையான தீர்வைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கவும், கடல் வளங்களை முறையாக நிர்வகிக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட மீன்பிடி அமைச்சு தயாராக இருப்பதாகவும், சட்டவிரோத முறைகளைக் கைவிட்டு முறையான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் மீனவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பீரமாக காட்சியளிக்கும் மன்னார் கரிசல் பள்ளிவாசல்!

மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் அவர்கள் (08) நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் அலாவுத்தீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஜப்ரான், உப தவிசாளர் புர்ஹான், பள்ளிவாசல் அதிபர் பழீல், இணைப்பாளர் முனவ்வர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

சமூக நலன் மற்றும் இறை சேவையை முதன்மையாகக் கொண்டு, இவ்வழகிய பள்ளிவாசல் மாளிகை சமூக செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் அலாவுத்தீன் அவர்களால் அவரது சொந்த நிதியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

“இத்தகைய மகத்தான பணிக்காக அல்-ஹாஜ் அலாவுத்தீன் அவர்களுக்கு இறை அருளும் நன்மைகளும் கிடைக்க வேண்டும். அவரின் இந்த நற்காரியத்தை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும். வடக்கு சமூகத்தின் சார்பாக எனது மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்தினார். 

போக்குவரத்திற்கு இடையூறான 65 கால்நடைகள் பிரதேச சபை வசம்!

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (08) இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அண்மைய நாட்களில் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்கும் கால்நடைகளால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன. இதனைத் தடுக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேச எல்லைக்குட்பட்ட வீதிகளில் கால்நடைகளை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

இந்நடவடிக்கையின் போது மாடு கன்றுகள் என மொத்தமாக 65 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.

முன்னதாக மக்களிடம் பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கட்டுப்படுத்த தவறியிருந்தனர். இதனால் தபிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிடிக்கப்பட்ட கால்நடைகளை மீட்டுக்கொள்ள உரிமையாளர்கள் ஒருவர் ஒரு கால்நடைக்கு 10,000 ரூபா தொகையை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் கால்நடைகள் நிற்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்கவும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தபிசாளர் தெரிவித்தார்.

இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள்!

புற்றுநோய் மரணங்களைக் குறைக்கப் புதிய நடவடிக்கை: கொழும்பில் நவீன முன்கூட்டியே கண்டறியும் மையம் திறப்பு

இலங்கையின் பிரதான புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மையம் (Cancer Early Detection Center – CEDC), கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் புதிய பொலிவுடன் இன்று (09) காலை திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தலைமையில் இந்த மையம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் (OPD) தொற்றுநோய் மருத்துவக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அமையப்பெற்றுள்ளது.

இந்த மையம் பிரதானமாக இலங்கையில் அதிகளவில் காணப்படக்கூடிய மூன்று புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதில் விசேட கவனம் செலுத்துகிறது,

மார்பகப் புற்றுநோய்கருப்பை வாய்ப் புற்றுநோய்வாய்ப் புற்றுநோய்

பரிசோதனைகளின் மூலம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட உடனேயே, அவர்களைத் தடையின்றி மேலதிக சிகிச்சைகளுக்காக விசேட நிபுணத்துவ மருத்துவச் சிகிச்சையகங்களுக்கு (Clinics) பரிந்துரைக்கும் துரித முறைமை இங்கு நடைமுறையில் உள்ளது. இந்த மையம் அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மையத்தை நிறுவுவதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். தற்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய வைத்தியசாலைகளை அண்மித்து இத்தகைய 5 மையங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 100 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதுடன், தினமும் சுமார் 40 மரணங்கள் பதிவாகின்றன. நோயாளிகள் மிகத் தாமதமாக சிகிச்சைக்காக வருவதைத் தடுத்து, ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் இந்த மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இம்மையங்களின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மையம் 2004 ஆம் ஆண்டு முதல் நாரஹேன்பிட்ட பகுதியில் இயங்கி வந்ததுடன், கடந்த 22 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் பேருக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு ரோட்டரி சங்கம் (Rotary Club) தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

43% ஆக இருந்த அரசாங்கத்தின் மக்கள் ஆணை 25% ஆக வீழ்ச்சி!

தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆதரவுத் தளம் 25 வீதத்திற்கும் குறைவான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் செல்வாக்கு குறித்து தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வின் ரகசிய அறிக்கை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கம்மன்பில குறிப்பிட்டார். அந்த அறிக்கையின்படி, அரசாங்கத்தின் வாக்கு வங்கி 25% க்கும் சற்று குறைவாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே எந்தவொரு மாகாண சபையையும் வெல்ல முடியாது என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்த தயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக 43% ஆக இருந்த ஆதரவு தளம் தற்போது 25% ஆகக் குறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்:

அந்த வகையில் ரணவிரு (மாவீரர்) என்ற கௌரவம் குறைக்கப்பட்டு, அவர்களை வெறும் சிப்பாய்களாகக் கருதியமை, வடக்குக்கு பௌத்தர்கள் வெறுப்பைப் பரப்பவே வருகிறார்கள் என்ற கருத்துக்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் சொத்து விபரங்கள் வெளிப்பட்டமை, அரசாங்கத்தின் நிர்வாகத் தவறுகளால் ஏற்பட்ட நிலக்கரி மற்றும் உப்பு ஊழல்கள் அம்பலமானமை போன்ற காரணங்களினால் அரசாங்கம் தனது செல்வாக்கை இழந்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் 45 இலட்சமாக வீழ்ச்சியடைந்தது. இது வெறும் ஆறு மாத காலப்பகுதியில் 24 இலட்சம் வாக்குகள் அல்லது 34% வீழ்ச்சியாகும் என கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

2015 இல் நடத்தப்பட வேண்டிய தேர்தலை ரணில் விக்ரமசிங்க 2018 வரை ஒத்திவைத்ததால் ‘மொட்டு’ கட்சி உருவாகி வெற்றி பெற்ற வரலாற்றை நினைவுபடுத்திய அவர், தற்போது தேர்தலை மேலும் ஒரு வருடம் ஒத்திவைத்தால் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 3% ஆகப் பாதாளத்திற்கு வீழ்ந்துவிடும் என எச்சரித்தார்.

“எனது இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை என்றால், உடனடியாக மூன்று சரத்துக்கள் கொண்ட சட்டமூலத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்த அவர், 2025 இல் தேர்தலை நடத்தியிருந்தால் இரண்டு மாகாணங்களையாவது வென்றிருக்க முடியும், ஆனால் இனி வரும் காலங்களில் அதுவும் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதம்பே பகுதியில் வீதி அறிவித்தல் பலகைகளில் குளறுபடி!

ஜூட் சமந்த

மாதம்பே புதிய நகரத்திலிருந்து பழைய நகரம் ஊடாக சிலாபம் – கொழும்பு பிரதான வீதிக்கு நுழையும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள வீதி அறிவித்தல் பலகைகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA) இந்த இடத்தில் இரண்டு அறிவித்தல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு பலகைகளும் ஒன்றுக்கொன்று சுமார் ஒரு மீட்டர் இடைவெளியில் மிக அருகருகே அமைந்துள்ளன.

இதில் ஒரு அறிவித்தல் பலகையின்படி, அந்த இடத்திலிருந்து சிலாபம் நகரத்திற்குள்ள தூரம் 12 கிலோமீட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மிக அருகிலேயே உள்ள மற்றைய பலகையில் அந்தத் தூரம் 11.5 கிலோமீட்டர் எனக் காட்டப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் அமைந்துள்ள இரண்டு பலகைகளிலும் இவ்வாறு அரை கிலோமீட்டர் வித்தியாசத்தில் வெவ்வேறான தூர அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதால், மாதம்பே பழைய நகரத்திலிருந்து சிலாபத்திற்கான உண்மையான தூரம் எது என்பதில் பயணிகளும் வாகன சாரதிகளும் பாரிய குழப்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அதிகாரிகளின் இவ்வாறான கவனயீனமான செயல்பாடுகள் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைந்து சரியான தூரத்தை வெளிப்படுத்தும் வகையில் பலகைகளைச் சீரமைக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மககும்புக்கடவலவில் தீவிரமடையும் யானை – மனித மோதல்!

மககும்புக்கடவலவில் தீவிரமடையும் யானை – மனித மோதல்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

ஜூட் சமந்த

மககும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் யானை – மனித மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மககும்புக்கடவல பகுதிக்கு அருகில் தேசிய பூங்காக்கள் எதுவும் இல்லாத போதிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சில யானைகள் வல்பாழுவ (Walpaluwa) அரச காப்பகத்திற்குள் நுழைந்தன. ஆரம்பத்தில் இவை சிறிய கூட்டமாக இருந்த நிலையில், தற்போது பல கூட்டங்களாகப் பிரிந்து கிராமங்களுக்குள் ஊடுருவி வருகின்றன. இந்த மோதல்களின் விளைவாக இதுவரை பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, கடமையில் இருந்த வனவிலங்கு அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக மீகஹகெலே (Meegahakele) மற்றும் கருவலபெத்த (Karuwalabedda) ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டங்கள் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக 5 முதல் 7 ஆண்டுகள் வரை பராமரிக்கப்பட்ட, பலன் தரத் தயாராக இருந்த தென்னை மரங்கள் மற்றும் பெருமளவிலான வாழைப் பயிர்களை யானைகள் முற்றாக அழித்துள்ளன.

வறட்சி மற்றும் யானைத் தொல்லைகளுக்கு மத்தியிலும் தென்னை, வாழை மற்றும் உப பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வந்த சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் உழைப்பு தற்போது வீணாகியுள்ளது.

“யானைகள் முன்பு ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே தென்படும், ஆனால் தற்போது பகல் இரவு வித்தியாசமின்றி கிராமங்களுக்குள் திரிகின்றன” என விரக்தியில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்த போதிலும், இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பணக்காரர்களால் கொள்வனவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெரிய நிலப்பரப்புகள் யானைகளின் மறைவிடமாக மாறியுள்ளன. பகல் நேரங்களில் அங்கு பதுங்கியிருக்கும் யானைகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்துகின்றன.

வழக்கமாக யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாகக் கூறப்படும் நிலைக்கு மாறாக, மககும்புக்கடவலவில் மனிதர்கள் உருவாக்கிய விவசாய நிலங்களை யானைகள் முழுமையாகக் ஆக்கிரமித்துள்ள சூழல் உருவாகியுள்ளது.

பல கோடி மக்கள் பணம் செலவிடப்பட்டும், யானைகளை விரட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், தமது பிள்ளைகளைப் பாதுகாக்கவும் வாழ்வாதாரத்தை மீட்கவும் நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக்குத்து!

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அதே நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு உத்தியோகத்தரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக திக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடந்த (06) இரவு கடும் மதுபோதையில் பொலிஸ் நிலையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் நித்திரை செய்துகொண்டிருந்தபோது, மற்றைய உத்தியோகத்தர் கூர்மையான ஆயுதத்தால் அவரது வயிற்றுப் பகுதியில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார் என ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட சில அதிகாரிகள் மாணிக்கக்கல் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவர்கள் இரவு நேரங்களில் அதிகளவில் மது அருந்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொலிஸ் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே சக உத்தியோகத்தர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம், பொலிஸ் துறையினரின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமிதிரிகலவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!

தல்துவ – அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். 

விபத்துக்குள்ளான குறித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். 

குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த தாராபுரம் அணி!

வட மாகாண விளையாட்டுத் துறையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சாதனையை தாராபுரம் மண் பதிவு செய்துள்ளது. வட மாகாண ரீதியிலான கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து, மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழக வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை (06) மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

முப்பதாண்டு கால காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி

கடந்த 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர், வட மாகாண ரீதியிலான கரப்பந்தாட்டத் தொடரில் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது. சுமார் 34 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, தாராபுரம் கிராமத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த மன்னார் மாவட்ட விளையாட்டு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

வெற்றி வீரர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (06) தாராபுரத்தில் விமர்சையாக நடைபெற்றது. ஊர் எல்லையிலிருந்து வீரர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது, பேண்ட் வாத்தியம் முழங்க, ஊர்மக்கள் திரண்டு நின்று பூத்தூவி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைய தலைமுறையினருக்கு இந்த வெற்றி ஒரு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளதை அந்த இடத்தின் உணர்வுபூர்வமான சூழல் பிரதிபலித்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீரர்களைக் கௌரவித்தார்.

“எமது பிரதேச இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் கொண்டுள்ள திறமைக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். வளங்கள் குறைந்த சூழலிலும் அர்ப்பணிப்புடன் போராடி வட மாகாணத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஜின்னா விளையாட்டுக்கழக வீரர்களின் சாதனை போற்றத்தக்கது,” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஜப்ரான், முன்னாள் தவிசாளர் முஜாஹீர், இணைப்பாளர் முனவ்வர், அல்-மினா மகா வித்தியாலயத்தின் அதிபர் பழீல் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், விளையாட்டுக்கழக நிர்வாகிகளும், ஊர் பெரியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் இந்த வெற்றி, வெறும் விளையாட்டுத் துறையோடு நின்றுவிடாமல், ஒற்றுமையினாலும் விடாமுயற்சியினாலும் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வடபுல இளைஞர்கள் மத்தியில் விதைத்துள்ளது.