Saturday, November 15, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 110

பற்றி எறிந்த சமூக செயற்பாட்டு மையம்!

0

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. 

இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும்  பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன. 

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆலயங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் வான வேடிக்கைகள் நிகழ்த்துபவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பண்பாட்டு மலச்சிக் கூடத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டு நிகழ்வுகளும், அரங்க செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்!

0

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று (10) முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இதற்கு இணையாக, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இன்று முதல் தொடங்கவுள்ளது. 

இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவத்தை ஏற்பாடு செய்கின்றன. 

“நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவம் வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இதற்கு இணையாக, நுவரெலியா மற்றும் பதுளை சாசன பாதுகாப்பு மன்றங்கள் இணைந்து தொடங்கிய தாய்லாந்து மகா சங்கத்தினரின் “சியம் இலங்கை தர்ம யாத்திரை” திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று நுவரெலியா நகரில் நிறைவடையவுள்ளது. 

இந்த யாத்திரை பண்டாரவளையில் இருந்து நுவரெலியா வரை நடைபெற்றது. 

அத்துடன், இந்த காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் இன்னும் முடிவடையாத சில விகாரை அபிவிருத்தி திட்டங்கள் முப்படைகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளன. 

இதற்கிடையில், வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு முழுவதிலுமுள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் இடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும். 

மேலும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பேசும்பொருளாகிய மாணவியின் தற்கொலை!

0

16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இரண்டாம் கட்ட ஏலம் ஆரம்பம்!

0

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இதில் அடங்கும். இந்த வாகனங்களில் இரு BMW வாகனங்கள், 02 போர்ட் எவரெஸ்ட் ஜீப் வண்டிகள், ஒரு ஹூண்டாய் டெரகன் ஜீப், இரு லேண்ட் ரோவர் ஜீப் வண்டிகள், 01 மிட்சுபிஷி மொன்டெரோ, 03 நிசான் பெற்றோல் வகை வண்டிகள், 02 நிசான் கார்கள், ஒரு போர்ஷே (Porsche) கெய்ன் கார், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப் வண்டிகள், 01 லேண்ட் குரூசர் சஹரா ரக ஜீப், 06 வீ 8 ஜீப் மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பஸ் அடங்கும்.

இது தொடர்பான விலைமனு ஆவணங்களை மே 14 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஜனாதிபதி செயலக செமா கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள நிதிப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

மே 14 ஆம் திகதி வரை, இலக்கம் 93 ,ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள சலுசல நிறுவன வளாகத்தில் இந்த வாகனங்களை பரீட்சிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் முதல் கட்டத்தின் கீழ் முன்னதாக, 14 சொகுசு வாகனங்கள், பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் ஏலம் விடப்பட்டன.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட ஏலத்தில், 9 டிபெண்டர் ரக ஜீப் வண்டிகள் உட்பட பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்கப்பட்டன.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரத்தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அல்ல என்பதோடு அரசியலமைப்பின் 41 (1) வது பிரிவின் கீழ் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களினால் பயன்படுத்தப்பட்டவையாகும்.

ஐ.பி.எல் போட்டிகள் பாதியில் ரத்து!

0

2025ஆம் ஆண்டு இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை இரு நாடுகளின் கிரிக்கெட் தொடர்களுக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, மைதானத்திலுள்ள மூன்று ஒளிவிளக்கு கம்பங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

இந்திய எல்லைப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள், இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததால், இந்திய எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து வரும் மே 11ல் தர்மசாலாவில் நடக்கவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, ஐபிஎல் தொடரில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன் 12 ஆரம்ப சுற்றுப் போட்டிகளும், 4 ஃப்ளே ஓப் போட்டிகளும் , இறுதி சுற்று போட்டியும் நடைபெறவுள்ளன. 

இதேவேளை பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளை இடைநிறுத்தி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

டில்லி விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து!

0

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பதால் டில்லி விமான நிலையத்தில், கடந்த 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.

இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மே 10ம் தேதி வரை அமிர்தசரஸ், பதிண்டா, புஜ், பூந்தர், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிராசா (ராஜ்கோட்), ஜம்மு, ஜாம்நகர், ஜெய்சால்மர், ஜோத்பூர், காங்க்ரா-ககல், காண்ட்லா, கேஷோத், கிஷன்கர், லே, லூதியானா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் மே 10ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை வந்த பிரான்ஸ் கடற்படைக் கப்பல்!

0

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ இன்று (2025 மே 09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது,

இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Hydrographic vessel வகைக்கு சொந்தமான ‘BEAUTEMPS BEAUPRE’ என்ற கப்பலானது 80.65 மீற்றர் நீளமும், மொத்தம் 58 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் BERTHEAU Dimitri பணியாற்றுகிறார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ‘BEAUTEMPS BEAUPRE’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் குழுவினர்கள், தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்திய பின்னர், நீரியல் வரைபட சேவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துறையாடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் 2025 மே 13 ஆம் திகதி அன்று கப்பளானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.

வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளதுடன், சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படுகின்ற செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில், வாழைக்குலைகளை மரத்துடன் அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பாப்பரசருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

0

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வௌியிட்டுள்ளார். 

அதில், “உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன். உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

69 வயதான பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். 

அவருக்கு பாப்பரசர் லியோ XIV என பெயரிடப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச சபைக்கு நாணய சுழற்சியில் ஒருவர்!

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். 

இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. 

குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்த தேர்தலில் வன்னாத்தவில்லு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group