Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 111

வடக்கில் 140 கோடி செலவில் பாலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக முக்கியமான பாலமான வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் என மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த வட்டுவாகல் பாலத்தின் அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு வட்டுவாகலில் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) நடைபெற்றது.

“புனருதயதட மங” திட்டத்தின் கீழ் 140 கோடி ரூபா செலவில் குறித்த பாலம் அமைக்கப்படவுள்ளது. இரு வழிப் பாதையாகச் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் நாளையிலிருந்து ஆரம்பமாகும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க .

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் புனரமைப்புக்கான பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

மன்னார் ஒரு சொர்க்கம் அல்ல என கூறிய அமைச்சர்!

0

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதே நாளில் பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தீவில் இரண்டு புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஓகஸ்ட் 2, 2025 அன்று மன்னார் நகரில் ஆரம்பமான போராட்டத்தில் இணைந்த சிவில் ஆர்வலர் எஸ்.ஆர். குமரேஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என நேற்றைய தினம் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

“இந்த காற்றாலையால் மன்னார் தீவு இன்று அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீவில் வாழும் 75,000 மக்களும் இடம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்படப்போகிறது.

அந்த மக்கள் இடம்பெயர்ந்து பெரு நிலப்பரப்பில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இவ்வாறான அழிவுகளை நிறுத்த வேண்டும். காற்றாலைக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும்.”

மன்னார் தீவில் மேலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டால், ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தீவின் மக்கள் வேறு இடங்கனுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டும் சிவில் சமூக ஆர்வலர், இது போர் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்கனவே காணிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள வடக்கு மக்களுக்கு இடையில் ஒரு மோதலை ஏற்படுத்தும் என வலியுறுத்துகின்றார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், அதில் எந்த விதமான  அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனவும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மன்னார் ஒரு சொர்க்கம் அல்ல என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரலின் பின்னர் மன்னார் தீவில் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் காற்றாலைத் திட்டம் இரண்டு ஆகியவற்றிள் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.  

மன்னார் தீவில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக ஓகஸ்ட் 11ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த பிரதேச மக்கள், மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர்.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தி நிலைய விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மன்னார் பிரதான பாலத்தின் அருகே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு, மேலும் அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்க பொலிஸார் நிறுத்தப்பட்டதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மன்னார் பகுதியில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதோடு, கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.

ஒரு மாதத்தைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பொது அமைப்புகள் காற்றாலை திட்டங்களை மீளப்பெறும் வரை போராட்டை நிறுத்தப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.

வழக்கில் சிக்கிய மற்றுமொரு அரசியல் பிரபலம்!

0

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி உள்ளிட்ட  பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

2014 டிசம்பரில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6.1 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தொகையை சட்டவிரோதமாக செலவழித்து, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது,பிரதிவாதிகள் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

அதன்படி, அழைப்பாணை விடுக்கப்படும்போது பிரதிவாதிகள் மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதவான் உத்தரவிட்டார். பின்னர், வழக்கு நடவடிக்கைகளை நிறைவு செய்ய  உத்தரவிடப்பட்டது.

புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்!

0

“Dream Destination” முதல் புகையிரத நிலைய நவீனமயமாக்கல் தல்பேயில் ஆரம்பம்.

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் “Dream Destination” தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் புகையிரத நிலையங்களை தற்போதைய உலகத்திற்கு ஏற்ற வகையில் புதிய அடையாளத்துடன் நவீனமயப்படுத்துவதற்காக அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம் ஆகியவை தனியார் துறையின் ஆதரவுடன் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

புகையிரத சேவையை நவீனமயப்படுத்தல் என்பது தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு இராட்சதனை விழித்தெழச் செய்தல் ஆகும் என்று சுட்டிக்காட்டிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பொதுப் போக்குவரத்தை தரமான சேவையாக மாற்றும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் கைவிடாது என்றும் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தை முன்னேற்றுவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டை ஒரு செயற்பாட்டுத் தளமாக மாற்றுவதன் மூலம் இலங்கை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய,’Clean Sri Lanka’ செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத், பணிப்பாளர் (ஒருங்கிணைப்பு) தசுன்விஜேசேகர, ஸ்டார் கார்மென்ட்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. சுகுமாரன், ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ புஞ்சிஹேவா, NIO Engineering அழைப்பாளர் லக்மின சமரசேகர ஆகியோருடன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 1,100 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

ஜலாலாபாத் நகரில் இருந்து 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற குறைவான ஆழம் கொண்ட நிலநடுக்கங்களே கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குனார் மற்றும் நங்கஹார் மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

6 புள்ளிகள் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்தடுத்து பல நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகின. நள்ளிரவு நேரம் என்பதால் பலரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீடுகள் இடிந்து இடிபாடுகளில் சிக்கினர்.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலச்சரிவில் ஒரு கிராமமே அழிந்தது

ஆப்ரிக்க நாடான சூடானின் மாரா என்ற மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் அழிந்த கிராமத்தில் இருந்து ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்கு சூடானில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொட்டிய பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு போரால் சீரழிந்துள்ள சூடானில் இயற்கை பேரழிவால் மக்கள் பெருந்துயரம் அடைந்துள்ளனர்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ஐ.நா., சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ வேண்டும் என சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சூடானில் உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில் மக்கள் மாரா பகுதியில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வடக்கில் ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன.

சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், துறைசார் கௌரவ அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமனம்!

0

புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றப்பட்டதை அடுத்து, புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை (01) தனது உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) புபுதிகா எஸ் பண்டார, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சதுரக ஜயசிங்க, உதவி மாவட்ட செயலாளர் நிமேஷா ஜயபத்ம, பிரதம கணக்காளர் ஏ.எம்.டபிள்யூ. கே.பிரசன்ன, கணக்காளர் எஸ்.அருண் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

2004 ஆம் ஆண்டு நொச்சியாகம பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக அரச துறையில் தனது பணியை ஆரம்பித்த இவர், 2007 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலாளராக பதவியுயர்த்தப்பட்டார்.

பின்னர் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் சுங்கத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகவும், விமான நிலைய சுங்கப் பிரிவு பணிப்பாளராகவும், அரச கைத்தொழில் சபையின் (நிர்வாக) பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தரத்தை பெற்றுக் கொண்ட இவர், அதே ஆண்டு செப்படம்பர் மாதம் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு சுமார் ஒரு வருடங்களாக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த வை.ஐ.எம்.சில்வா, இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து புத்தளம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் கடந்த 22 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், நுவரெலியா காமினி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!

0

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பெருமை சேர்த்த காத்தான்குடி மாணவன்!

சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற காத்தான்குடி மாணவனை நேரில் சென்று வாழ்த்தினார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்ற தரம் 8 மாணவன், 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

புதிய காத்தான்குடி 03 பகுதியைச் சேர்ந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி பாத்திமா பாலிகா பாடசாலையில் கற்றதுடன், தற்போது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.

31 நாடுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், அதில் 2 மாணவர்கள் மாத்திரமே இலங்கை சார்பாக வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதுடன், அதில் ஒருவராக ஜனூஸ் ஆரிஸ் வெற்றிபெற்று திகழ்கிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவின் லக்ணோவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவன் தான் பிறந்த மண், பாடசாலை, கிழக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இச் சாதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று வாழ்த்தி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.