மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (24) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வடமாகாண பேண்தகு அபிவிருத்திக்கான கொள்கை ஒத்திசைவை மேம்படுத்துவதற்கான துறைசார்ந்தவர்களின் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல், சுற்றாடல் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குறித்த கொள்கை திட்டத்தை தயாரிக்கவுள்ளன.
இன்றைய கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ரெ.சுவந்தினி, பேராசிரியர் க.கஜபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறுபோக செய்கையில் கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் – விவசாயிகள் பாதிப்பு.
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை நாசம் செய்துவருகின்ற விடயம் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டு, பயிர்கள் தற்போது முளைக்க ஆரம்பித்து வெறும் 15-25 நாட்கள் கடந்த நிலையில், அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த பெரும்போக நெற்ச்செய்கையிலும் நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அதாவது சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை மட்டத்திலும் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் (David Sislen) தெரிவித்துள்ளார்.
உலக வங்கியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் SRI LANKA DEVELOPMENT UPDATE அறிக்கையை வெளியிட்டு டேவிட் சிஸ்லன் இந்தக் கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாகவும், முன்னர் கணிக்கப்பட்ட 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்வதன் மூலம் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தொழில்துறை மற்றும் சேவைகளில், குறிப்பாக கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளின் வலுவான செயல்திறன் காரணமாகியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தனது பாடசாலையில் உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஆவார்.
கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற திலிண விராஜ் என்ற மாணவன் சென்றிருந்தான்.
திலிண செல்லும் வழியில், அதே பாடசாலையில் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகைமையை காரணமாகக் கொண்டு அவனைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது, பாதுகாப்பு தலைக்கவசங்களால் மாணவனின் தலையில் தாக்கப்பட்டதால், அவர் மயக்கமடைந்து, முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தெரியவந்ததும், வெளிநாட்டில் இருந்த திலிணவின் தாய் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
மாணவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இன்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக அமைதிக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு, பல்வேறு முற்போக்கான முடிவுகளை எடுத்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிராசின்ஸ் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக நித்திய இளைப்பாறினார்.
அவருக்கு வயது 88 ஆகும். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் தென் அமெரிக்காவை நாடுகளில் இருந்து முதன்முதலில் போப் ஆண்டவரானது இவர்தான். இவர் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவராக செயல்பட்டார். இவர் தனது 22 வயதில் இருந்து கிறிஸ்துவ சமூகத்திற்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ ஆகும். ஜார்ஜ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு, தனது 12 வயதில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் வசித்து வந்தார். அப்போது, ஜார்ஜ் அவரது பக்கத்துவீட்டு பெண்ணான அமாலியா டாமோன்ட் என்ற பெண்ணை காதலித்து, அவருக்கு காதல் கடிதமும் எழுதியுள்ளார்.
சிறுவயதில் அந்த பெண்ணுடனான நட்பு அவருக்கு ஆழமான காதலாக வளர்ந்திருக்கிறது. உடனே அந்த பெண்ணிடம் சென்று காதலை வெளிப்படுத்தியது மட்டுமின்றி திருமணம் செய்யும் விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜார்ஜ், போப் ஆண்டவராக பொறுப்பேற்ற பின்னர் அவரது அமாலியா டாமோன்ட் என்ற அந்த பெண்மணி அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து நேர்காணல் அளித்திருந்தார்.
அதில் அவர்,”ஜார்ஜ் என்னிடம்,’நீ என்னை திருமணம் செய்ய ஒப்புகொள்ளாவிட்டால், நான் பாதிரியராகி விடுவேன்’ என சொன்னான்.
அவன் அப்போது பெரியவனாக, முதிர்ச்சி பெற்றவனாக, அற்புதமான பையனாக இருந்தான். நாங்கள் நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் நடனமாடினோம், விளையாடினோம். அது மிகவும் அழகான நேரம். நாங்கள் இருவரும் பணிவாகவும் ஏழைகளை பற்றி அக்கறையுடனும் இருந்தோம்” என்றார்.
ஆனால், அந்த அமாலியாவின் வீட்டில் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை கண்டித்த அவரது தந்தை,’எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஆணுக்கு நீ கடிதம் எழுதுவாய்’ என்று கூறி அடித்துள்ளார்.
அதன்பின் அமாலியா – ஜார்ஜ் இருவரும் பல மாதங்களுக்கு சந்திக்கவே இல்லையாம். இறுதியில் ஜார்ஜ் பாதிரியாகும் நிகழ்வில்தான் அமாலியா அவரை பார்த்தாராம்.
இவரின் பாதையும் வெகு தொலைவில் சென்றவிட்ட பின்னரும், ஜார்ஜ் – அமாலியா இடையே ஒரு நட்பான, மரியாதையான உறவு நீடித்துள்ளது. இருவருக்கும் பல ஆண்டுகளாக கடித போக்குவரத்தும் இருந்திருக்கிறது. நல்ல வேளை அன்று நான் அவனுக்கு ஓகே சொல்லவில்லை என்றும் அமாலியா ஒருமுறை ஜோக் அடித்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
சமையல் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக குடும்பப் பெண் பலி!
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் 20.04.2025 அன்று சுமார் 3.30 மணியளவில், பரசுராமன் பரமேஸ்வரி 59 வயதுடைய பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவுகாரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்தார்.
ஆடையில் தீப்பரவல் ஏற்பட்டதன் காரணமாக பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 22.04.2025 உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.
88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார்.
நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.