Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 12

இணையவுள்ள ரணில் – சஜித்!

0

பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. 

இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். 

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது. 

இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது. 

இந்தநிலையில் இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுக்கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டது. 

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – மஹியங்கனை வீதிக்கு பூட்டு!

0

கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொடர்ந்து தெரிவித்த மாவட்ட செயலாளர், 

“கஹட்டகொல்ல பகுதியில் உள்ள பிரதான வீதியில் தற்போது பாறைகள் வீழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால், வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆபத்தான பாறைகள் அகற்றப்பட்ட பிறகு வீதியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், பகல் வேளைகளில் கூட வீதியில் பாறைகள் விழுவதற்கான அபாயம் காணப்படுவதால், பகலில் இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படவும்” என்றார்.

குற்றம் நடந்தது என்ன – அர்ச்சுனா எம்.பியின் புதிய அப்டேட்!

0

போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

WHO இருந்து அதிரடியாக வெளியேறும் அமெரிக்கா!

0

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் நாள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

*அமெரிக்கா பார்லிமென்ட் கலவர வழக்கில், தொடர்புடைய 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

* உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது கடமையை செய்யவில்லை.

* கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்புத் தளத்தை திடீரென நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன். டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்களுக்கு தாமதப்படுத்தும் நிர்வாக நடவடிக்கை எடுப்பேன்.

* அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்.

* சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்.

* பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.

* மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்.

* துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.

* கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன். இவ்வாறு டிரம்ப் அறிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர்!

0

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தர அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட இவர், முன்னர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளராகவும், சுகததாச உள்ளக விளையாட்டரங்க அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், அவர் சிறிது காலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசிய இளைஞர் படையணியின் புதிய பணிப்பாளர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இன்று புரட்டிப்போடவுள்ள காலநிலை!

0

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வவுனியா, பாவற்கு வான் கதவுகள் திறப்பு!

0

வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதன் 4 வான் கதவுகளும் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் ஒரு வான் கதவுகள் இரண்டரை அடியும், மூன்று வான் கதவுகள் இரண்டு அடியும் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் குளத்து நீர் நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவ் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று உள்ளே, ஆனால் இன்று?

0

கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீண்ட 30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கை அடுத்த மாதம் 6 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டார்.

ராஜாங்கனையில் 17000 கன அடி வேகத்தில் பாயும் நீர்!

0

கலா ஓயா ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா நீர்மட்டம் வெள்ள எச்சரிக்கையை நெருங்கியுள்ளது. மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது 17000 கன அடி வேகத்தில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீர்த் தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவுக்கு இணங்க எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டியேற்படலாம்.

இந்நிலை காரணமாக ஆற்றுப்படைகையை அண்மித்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலை குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பிரதேச மக்களையும் அந்தப் பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதிக்கு பூட்டு!

0

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி நேற்று (19) மாலை 5.00 மணிக்குப் பிறகு கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையிலான பகுதியில் அனைத்து வாகனங்களுக்கும் முழுமையாக மூடப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, வெலிகந்த – திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வீதியின் நிலையை இன்று காலை பரிசீலனை செய்த பின்னர், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.