Saturday, November 15, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 121

அதிவேக நெடுஞ்சாலைகள் படைத்த சாதனை!

0

சித்திரைப் புத்தாண்டு பருவக்காலத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 10 கோடியைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 297,736 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய தெரிவித்தார். 

அதன்படி, மேற்படி காலகட்டத்தில், அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 10 கோடியே 23 இலட்சத்து 78,800 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஏப்ரல் 11 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 163,541 வாகனங்கள் பணித்ததாகவும், அதன் ஊடாக 54,066,450 ரூபா வருமானம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், ஏப்ரல் 12 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 134,195 வாகனங்கள் பயணித்ததாகவும், அதன் வருமானம் 47,012,350 ரூபா எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய சுட்டிக்காட்டினார்.

இன்றைய வானிலை நிலவரம்!

0

2025 ஏப்ரல் 13ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலையில் மழை பெய்யலாம். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் போது, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ம் திகதி வரை இலங்கையை அண்மித்து காணப்படும் மத்திய தரைக் கோட்டின் உச்சத்தில் காணப்படும். இன்று (13) நண்பகல் 12:11 மணிக்கு துணுக்காய், ஓலுமடு, ஒட்டு சுட்டான், குமுலமுனை, மற்றும் செம்மாலை போன்ற பிரதேசங்களின் மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவித்தல்!

0

மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்.

2025 ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணி வரை தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை செயலிழக்கச் செய்யுமாறு நாடு முழுவதும், கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களைப் பயன்படுத்துபவர்களிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த முக்கியமான காலகட்டத்தில் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிக்க, கூரை சூரிய மின் சக்தி அமைப்பை பயன்படுத்துவோரிடம் தமது ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

சிக்கிய 2554 கிலோ பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கலால் துறை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியிலும் மாவனெல்ல பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து நான்கு (2554) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், இரண்டு (02) லொறிகள் மற்றும் ஒரு (01) வேன் கைப்பற்றப்பட்டது.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில், நீர்கொழும்பு கலால் துறை அலுவலகத்துடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொறி (01) அப்பகுதியில் அவதானித்து சோதனையிடப்பட்டது.

அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு லொறியில் கொண்டு செல்வதற்காக தயார்படுத்தப்பட்ட முப்பத்திரண்டு (32) பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து இரண்டு (992) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் குறித்த லொறியொன்றும் (01) இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு, இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று மாவனெல்ல பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு ஒரு கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று ஏழு (697) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் எண்ணூற்று அறுபத்தைந்து (865) கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள், ஒரு (01) லொறி மற்றும் வேன் ஒன்றும் (01) கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 58 வயதுக்குட்பட்ட நிட்டபுவ, வரகாபொல மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொச்சிக்கடை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவனெல்ல பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள், வேன் மற்றும் லொறி ஆகியவை கேகாலை கலால் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

களைகட்டிய வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல்!

வரலாற்று சிறப்பு மிகு கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடார்ந்த பங்குனி உத்தரப்பொங்கல் நிகழ்வுகள் நேற்று சிறப்பாக ஆரம்பமானது.

பகல் இரவு பொங்கலாக இடம்பெறுகிற குறித்த பங்குனி உத்தரப்பொங்கல் நிகழ்வுகளில் பங்குகொள்ள வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமாளவான அடியவர்கள் தங்களுடைய நேர்த்திகளை காவடிகளாகவும், பாற்ச்செம்பாகவும், தூக்கு காவடி, பறவைக்காவடி, பொங்கலாகவும் நிறைவேற்றி வருகை தந்தனர்.

அடியவர்களின் நலன் கருதி போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியிலிருந்து புறப்பட்ட பண்டவண்டில்கள் நேற்று மாலை ஆலயத்தை வந்தடைந்தவுடன் பண்டகங்கள் எடுக்கப்பட்டு வளுந்து வைத்தலுடன் பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் ஆரம்பமானது.

கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வில் கடந்த 04.04.2025 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் புத்தூர் சென்று அங்கிருந்து மாட்டு வண்டில்கள் மூலம் பண்டம் எடுத்து, பண்ட வண்டில்கள் 11.04.2025 நேற்றைய தினம் ஆலயத்தை வந்தடைந்தது.

இதனை பாரம்பரிய முறைப்படி பண்ட வண்டில்கள் அழைத்து வரப்பட்டு பூஜை நிகழ்வுகள் நடைபெற்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தமை விஷேட அம்சமாகும்.

90 நாட்கள் தடுப்புக்காவலில் பிள்ளையான்!

0

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்திருந்தனர். 

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது.

நாகவில்லுவிலிருந்து இரு பிரதேச சபை உறுப்பினர்கள்!

0

நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான, புத்தளம் பிரதேச சபையின் பொத்துவில்லு வட்டாரத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயம் நேற்று புத்தளம் நாகவில்லுவில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

நடைபெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான புத்தளம் பிரதேச கள விஜயத்தின்போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயம், கட்சியின் தலைவரினால் திறந்துவைக்கப்பட்டது.

மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் குறித்த காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிழ்வில் பங்கேற்று கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், சென்ற முறை நாகவில்லுவில் இருந்து பிரதேச சபைக்கு ஒருவரை அனுப்பி இருந்தோம், ஆனால் இம்முறை இன்ஷா அல்லாஹ் பிரதேச சபைக்கு இருவரை அனுப்ப உள்ளோம் என உறுதியளித்தார்.

நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள ரசூல் நகர் கிராமம் ஒரு போதும், நாகவில்லு எருக்கலம்பிட்டியில் தமது ஊர் வேட்பாளர்களை களமிறக்க ஆசைப்படவில்லை எனவும், அவர்களின் நல்ல எண்ணத்திற்காக அவர்களுக்கு போனஸ் வழங்க கட்சி முன் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தளம் பிரதேச சபையில் போட்டியிட்டு கட்சி பெற்றுக்கொள்ளும் அதிகப்படியான வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு, ரசூல் நகர் கிராம மக்களுக்கு தமது கட்சி ஒரு போனஸ் ஆசனத்தை வழங்க முயட்சி செய்துள்ளதாகவும், இதன்மூலம் நாகவில்லு எருக்கலம்பிட்டி மற்றும் ரசூல் நகர் மக்களுக்கிடையில் சிறந்த உறவை மேலும் வலுப்படுத்த தமது கட்சி பாடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளர் NTM தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், ஊர் ஜமாத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நானும் மஷூரும் ஒன்றாகத்தான் தேநீர் குடித்தோம்!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார பணிக்காக புத்தளத்திற்கு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் புத்தளம் பிரதேச சபை, பொத்துவில் வட்டார எருக்கலம்பிட்டி, நாகவில்லு தேர்தல் பிரச்சார அலுவலகத்தை இன்று அவர் (11) திறந்துவைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாகவில்லு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கட்சியின் தனித்துவத்தை காக்கும் ஒரு முன்மாதிரி புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமம் என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

காத்தான்குடிக்கும், மன்னார் எருக்கலம்பிட்டிக்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

கல்வித்தந்தை cww கன்னங்கரா அவர்களினால் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய கல்லூரி அன்றைய காலகட்டத்தில் மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கும், அதே போன்று காத்தான்குடி பாடசாலைக்கும் மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக நினைவுகூர்ந்தார்.

அதே போன்று முன்னாள் வன்னி பாராளுமன்ற அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் தனது பாராளுமன்ற நண்பர் எனவும், கட்சிக்காக அரும்பாடுபட்ட ஒரு கட்சியின் முக்கியஸ்தர் எனவும் தெரிவித்தார்.

கடந்த முறை பொத்துவில்லு தொகுதியில் இழந்த கட்சி ஆசனத்தை இம்முறை நிச்சயமாக ஈடுசெய்யவேண்டும் எனவும், அதற்காக ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியத்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமாய் குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய்!

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி வௌிநாட்டில் இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த பணியகம் அறிவித்துள்ளது. 

இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டில் உள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என அந்த வீடியோவில் கூறப்படுகிறது. 

எனினும் பணியகம் இதுபோன்ற ஒரு அறிக்கையை ஒருபோதும் வெளியிட்டதில்லை என்றும், இந்த மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் பணியகம் பொதுமக்களை வலியுறுத்துகிறது. 

இதுவரை இதுபோன்ற ஒரு திட்டத்தை பணியகம் செயல்படுத்தவில்லை என்றும், இது புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்ட பிரச்சாரம் மட்டுமே என்றும் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் புலம்பெயர்ந்த சமூகத்தை பணியகம் கேட்டுக்கொள்கிறது. 

மேலும், இதுபோன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பரப்புவதற்கு அங்கீகாரம் இல்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டொக் மூலம் மட்டுமே பணியகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ரணிலின் பரபரப்பு அறிவிப்பு!

0

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாக தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார். 

2016 ஆம் ஆண்டு அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறி, சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெறுகிறது. 

இது தொடர்பாக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) கருத்து வௌியிட்டிருந்த நிலையில், அதன் ஊடாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களை ரணில் விக்கிரமசிங்க அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான சம்பவத்தில் அவர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தலையிட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, அவர் வௌியிட்ட கருத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.