Wednesday, September 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 13

மனித உயிரை பலியெடுத்த காட்டு யானை

0

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அந்த நபர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் எம்.பி சுமந்திரனை கிழித்த அமைச்சர் பிமல்!

தற்பொழுது வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் பலர் முன்னைய காலங்களில் போலவே தமது செயற்பாடுகளை தற்போதும் மேற்கொண்டு வருகின்றார்கள் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பேசியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;

தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள், முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு 18.08.2025 நாளைய தினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இவர் பல பதவிகளை வகித்த காலப்பகுதியில் இதற்கு முன்னர் முத்தையங்கட்டு பகுதிக்கு சென்றுள்ளாரா, அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்புபடுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

வடக்கில் 40,000 தென்னை செய்கை ஆரம்பம்!

தேங்காய் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், வடக்கு கிளிநொச்சி மக்களின் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும், வடக்கில் சுமார் 40,000 தென்னை செய்கையினை மேற்கொள்ள ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பேசியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;

எதிர்வரும் இரண்டாம் திகதி அளவில் புது குடியிருப்பு பகுதிக்கு எமது நாட்டின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அவர்கள் வருகை தர உள்ள நிலையில், இதன் முதற்கட்டமாக இவ்வருடத்தில் 16 ஆயிரம் தென்னை செய்கையை மேற்கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தென்னை செய்கை தொடர்பான சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடனும், தென்னை செய்கையாளர்களுடன் பெருந்தோட்ட அமைச்சர் கலந்துரையாடி ஆலோசனைகளை பெற்றுச் சென்றுள்ளார்.

அதில் முதல் கட்டமாக வருகின்ற 02.09.2025 புது குடியிருப்பு பகுதிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, புது குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்களுக்கான ஆவணங்களை வழங்குவதுடன், ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதுகுடியிருப்பு வட்டு வாகல் பாலத்தின் புனரமைப்பு ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

சட்ட மாஅதிபர் அலுவலகம் நீதிக்கு ஒரு முக்கிய தடையா?

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வழங்கவேண்டிய பதிலை, சட்ட மாஅதிபர் திணைக்களம் தற்போது தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் இலங்கை குறித்த தனது அண்மைய அறிக்கையில் சட்ட மாஅதிபர் அலுவலகத்தை நீதிக்கு ஒரு முக்கிய தடையாக விபரித்துள்ளார். 

அதே நேரத்தில் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். 

இதனையடுத்தே குறித்த கருத்துக்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து பதில் வரைவு செய்யப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் அறிக்கையில் அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கு, இலங்கை அரசாங்கத்தின் பதிலின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடந்த செவ்வாயன்று, வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடுமையான மனித உரிமை மீறல்களைத் தொடர ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்ட மாஅதிபர் அலுவலகத்திற்குள் சீர்திருத்தம் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். 

இலங்கையில் சட்ட மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள வழக்குத் தொடரும் விருப்புரிமை, காவல்துறையின் வரையறுக்கப்பட்ட புலனாய்வுத் திறன், தகுதிவாய்ந்த தடயவியல் நிபுணர்கள் இல்லாமை மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் வெற்றிடங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதைக் கூட்டாகத் தடுக்கின்றன மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கின்றன என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் அரசாங்கம் தனது கொள்கை அறிக்கையில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இருந்து சுயாதீனமான பொது வழக்குத் தொடரும் பணியகத்தை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது என்பதையும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. 

ஏற்கனவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா அனுமதிக்கு டயனா கமகே பாராட்டு!

0

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை தான் வரவேற்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தின் போது, கஞ்சாவை சட்ட ரீதியாகப் பயிரிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என டயனா கமகே யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

எனினும் அந்த விடயம் நாட்டில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது கஞ்சா பயிரிடுவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 07 பேருக்கு அனுமதிவழங்கி, தான் அன்று முன்வைத்த கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளமை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் டயனா கமகே தெரிவித்தார்.

அத்துடன், முன்னதாக இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த விஜித ஹேரத் உள்ளிட்டோர் தற்போது அமைச்சரவையில் இதற்கு அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக நாடுகளில் இவ்வாறான விடயங்கள் நடைமுறையில் இருப்பதால் அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன. ஆகவே இலங்கையிலும் அவற்றை முன்னெடுக்கும் போதே பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டினார்.

இதனை தற்போதாவது புரிந்துகொண்டு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கசினோவுக்கும் தற்போது இலங்கையில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் டயனா கமகே கூறினார்.

இந்த நிலையில் தான் முன்வைத்த கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கான தூங்கா நகரத் திட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்தினால் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிறந்த முதலீட்டாளரைக் கொண்டு ஜனாதிபதி மாளிகையை அபிவிருத்தி செய்து ஜனாதிபதி ஹோட்டல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, வத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா!

0

கொழும்பு, வத்தளை, பங்களாவத்தை பகுதியில் நேற்று 2025.08.15 மாலை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 309 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

வத்தளை, பங்களாவத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டை சோதனை செய்தபோதே 309 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பணிப்புறக்கணிப்புக்கு வைக்கப்பட்ட அதிரடி ஆப்பு!

0

நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.

அந்த வகையில் குறித்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்யும் வகையில் நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 வருடத்தில் ஊருக்குள் முதல்முறை வந்த குப்பை வண்டி!

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள ரசூல் நகர் கிராமத்திற்கு முதல் முறையாக நேற்றைய தினம் குப்பை வண்டி குப்பைகளை சேகரித்து சென்றுள்ளது.

ரசூல் நகர் கிராமம் உருவாகி சுமார் 20 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், ஊருக்குள் முதல் முறையாக குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்த விடயம் அப்பகுதி மக்களை பெரும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசூல் நகர் கிராம பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரசூல் நகர் இணைப்பாளர் ஜனாப் அலி அஸீம் ஆகியோர், புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினரும், புத்தள பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவருமான ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, ரசூல் நகர் கிராமத்துக்கு நேற்று (15.08.2025) குப்பை வண்டி அனுப்பிவைக்கப்பட்டு குப்பைகளை சேகரித்துச் சென்றுள்ளது.

ஊரின் நீண்ட கால பிரச்சினையாக இருந்த குப்பை கழிவு விடயத்திற்கு நேற்றைய தினம் உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும், இதனை மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் பெற்றுத்தந்த பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களுக்கு தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புத்தள பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த குப்பை வண்டி சுழட்சி முறையில் ரசூல் நகர் கிராமத்துக்கு தொடர்ச்சியாக வருகை தரும் எனவும், ரசூல் நகர் கிராம மக்களினால் ஊரின் ஏனைய அத்தியாவசிய குறைபாடுகள் குறித்து தம்மிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள் படிப்படியாக பூர்த்திசெய்யப்படும் எனவும் புத்தள பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவர் ஜனாப் ஷாஹீன் ரீஸா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரசூல் நகர் கிராமத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த குப்பை வண்டி, ஜனாப் அலி அஸீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு,கிழக்கில் நாளை மறுதினம் கடையடைப்பா?

கடந்த வாரம் முத்தையங்கட்டு பகுதியில் அப்பாவி இளைஞன் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு, இளைஞனுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 18.08.2025 அன்றைய தினம் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எமது பகுதியில் அநியாயமாக கொல்லப்பட்ட முத்தையங்கட்டு இளைஞனுக்கு நீதிவேண்டி அன்றைய தினம் 18.08.2025 தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க உதவுமாறு வேண்டியுள்ளார்.

குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என தெரிவித்து இன்றைய தினம்16.08.2025 ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு சண்முகம் ஜீவராசா இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்!

0

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு புதிய பொலிஸ்மாஅதிபர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்றுள்ளதுடன், இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் படிப்படியாகக் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.