Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தி இலங்கையில் சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.
AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என கணனி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு!
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுத் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், வளச்சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அமைப்புப் பிரதிநிதிகள் அடங்கலாக பல்வேறு வகையில் இன அழிப்பிற்குள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்பட்டு வருகின்ற, பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு. திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் உட்பட 08 மாவட்டங்களிலும் உள்ள நாம் 26 யூலை 2025 ஆகிய இன்றைய தினம் ஒன்று கூடி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
அரசே, இங்கு “நாங்கள்” யாரென்றால்:
வடக்கு கிழக்கின் இராணுவமயமாக்கப்பட்டுள்ள எந்திரத்தின் மிருகத்தனத்தின் கீழ் வாழ்ந்து வரும் தமிழர்கள் (அரசு கூட பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது),
அரசு புரிந்த பன்னாட்டுக் குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைத்த உயிருள்ள சாட்சிகள்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவினர்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் “நாங்கள்” என்பதில் முப்படைகள், அரச தொல்பொருள் துறை, வனவிலங்குகள், கடலோர பாதுகாப்பு, வனத்துறைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டுள்ள தங்களின் தாய்நிலத்திற்காகப் போராடும் மக்கள், தெற்கிலிருந்து வந்த மீனவர்களால் கடற்படை மற்றும் மீன்வளத் துறையின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மூதாதையர் மீன்பிடித்த தளங்களை மீட்டெடுக்கப் போராடும் தமிழர்கள், இறுதியாக “நாங்கள்” என்பது ஐ.நா. மீதும், சர்வதேச சமூகத்தின் மீதும் இன்றுவரை நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள்.
சிங்கள அரச பொறிமுறை முன்னெடுத்த போரானது தமிழர்களின் இருப்பிடங்களையும் சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் திட்டமிட்ட வகையில் முற்றாக அழித்து தமிழர்களை வக்கற்ற நிலைக்குள்ளாக்கியது.
பல்லாயிரக்கணக்காணோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்
இராணுவமயமாக்கல் இடம்பெற்றதுடன் திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்புக்களும் சிங்கள் குடியேற்றங்களும் அதிகரிக்கப்பட்டன.
அரச பாதுகாப்புப் பொறிமுறையின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.
உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான திர்வினை இலங்கையின் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதனால் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுச் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே நீதியை வேண்டுகின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பன்னாட்டு சமூகத்திடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்தனர்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பள்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல்வண்டும்
ஈழத் தமிழ் மக்களுக்கு இடப்பெற்ற இனப்படுகொலைகளுக்கான நீதிப் பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சாவதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.
இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.
தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும், (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)
தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
பயங்கரவாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 4:15 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி விஜயம்!
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்றைய தினம் 25.07.2025 கிளிநொச்சி தெற்கு வளைய கல்வி பணிமனைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி வளைய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வளையங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதில் விசேடமாக விஞ்ஞானம், ஐ.சி.டி போன்ற பாடங்களுக்கு அதிகமாக பற்றாக்குறை நிலவுகின்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றினை தெரிவித்தார்.
காளிசநொச்சி வளையத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ள போதிலும், 35 புதிய ஆசிரியர்கள் மாத்திரமே திரும்பி வந்துள்ளனர் எனவும், இதேபோன்று முல்லத்தீவு, துணுகாய் கல்வி வளையங்களில் இதேபோன்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும், வடமாகாண ஆளுனறுக்கே இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் இருப்பதாகவும், இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் இன்றைய தினம் 25.07.2025 குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விசாரணைகளுக்காக போலீஸ் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.20 மணயளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய இரத்தினம் ராசு என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில், குறித்த தாய் ஒருவரும் அவரது 2 பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக இன்று (24) மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கான் பேக் ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது 38) தாய் மற்றும் மிக்சா (வயது 11) மகள் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (55-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.