நேபாள முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனல் இல்லத்துக்கு போராட்டக்காரர்கல் தீ வைத்தனர். ஜாலா நாத் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிரிழந்தார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பல கட்டடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. கண்டிப்பூரில் உள்ள தொலைக்காட்சி அலுவலக கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்கள் இல்லம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கிடையே பிரதமர் மாற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள்.
நேபாளத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கையை போன்றே நேபாளத்தில் புரட்சி வெடித்துள்ளது. 2022ல் இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
இலங்கையில் 2022 மார்ச்சில் தொடங்கிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் கோத்தபய ராஜபக்ச. இலங்கையில் போராட்டத்தின்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதுப்பித்தல் பணிகள் காரணமாக, கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகம் நாளை மறுதினம் (11) முதல் மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
குறித்த பணிகள் முடியும் வரை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (09) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் கையெழுத்தானது.
மேற்கூறிய நடவடிக்கைகள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவுவதாக இந்த நிகழ்வு அமைகிறது.
சுகாதார செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு செலவிடும் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 600 மில்லியன் மற்றும் திட்ட காலம் 03 ஆண்டுகள் ஆகும்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை நிர்மாணித்தல் மற்றும் வழங்குவதற்கான இலங்கை அரசின் குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வில் துணை இயக்குநர் ஜெனரல் (திட்டமிடல்) டாக்டர் எஸ். ஸ்ரீதர்ன், கூடுதல் செயலாளர் (மேம்பாடு) சுனில் கலகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நேபாளம் தலைநகர், காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கோதத்தார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகள், மோசமடைந்து வரும் விமானப் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றுடன், மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்திற்கு பாதுகாப்பை வழங்க நேபாள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா செய்துள்ளார்.
அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் ஊழல் எதிர்ப்புப் போராட்டமாக மாறியிருந்தது.
இந்த சூழலில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்ற நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் அவரது இராஜினாமாவைக் கோரி வந்தனர்.
குறிப்பாக, பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டத்தில் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் நேபாள பிரதமர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. நேற்று போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலியான நிலையில், 300 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தினர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார்.
நேபாள உள்துறை அமைச்சர் பதவி விலகினால் போதாது, பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இளைஞர்கள் போராட்டம் காரணமாக நேபாளத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகினர். இந்த நிலையில், இன்றைய தினம் நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள நாட்டில் உள்ள சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இத்தகைய இணையதளங்கள் நேபாள நாட்டு சட்டப்படி பதிவு செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் உரிய நிபந்தனைகள்படி பதிவு செய்யப்படாத பேஸ்புக், யூடியூப் உள்பட 26 சமூக ஊடகங்கள் செப்.4ஆம் தேதி முதல் நேபாள நாட்டில் தடை செய்யப்பட்டன.
இந்த இணையதளங்கள் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்படும் வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நேபாள ஜென் இசட் தலைமுறைைய சேர்ந்த இளைஞர்கள் நேற்று நாடு முழுவதும் இணையதள தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறி போகவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ளனர். நேபாள நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கிய பிறகும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ராமோட்டின் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு பாதுகாப்பு அதிகாரியும் ஒரு குடிமகனும் குற்றவாளிகளை சுட்டுக் கொன்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
குற்றவாளிகள் ஒரு வாகனத்தில் வந்து ஒரு பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இடையிலான அனைத்து சோதனைச் சாவடிகளையும் இஸ்ரேலியப் படைகள் மூடியதாக தெரிவித்தன.
குற்றவாளிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வந்ததாக காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் அந்தப் பிரதேசத்தில் உள்ள ஜெருசலேம் கவர்னரேட்டில் உள்ள நான்கு கிராமங்களான கட்டானா, பிட்டு, பெய்ட் இனான் மற்றும் பெய்ட் டுகு ஆகிய இடங்களில் இராணுவச் சுற்றி வளைப்பை ஏற்படுத்தி அங்கு சோதனைகளை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் பரந்த ஜெருசலேம் பகுதியில் தனது படைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் “உடந்தையாக இருந்தவர்கள்” என்று விவரித்தவர்களைத் தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து ‘போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு’ என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (09.09.2025) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆளுநர் தனது உரையில், வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணிகளையும் கருத்திலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது.
கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே?
அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் – ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன. அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன், என்றார் ஆளுநர்.
இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.