மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மொணராகலை, வெலியாய பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ் ஒன்றின் சாரதி மரணமடைந்துள்ளார்.
பொத்துவில் – வெல்லவாய வீதியில் 255km மைல்கல் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் (SLTB) ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இ.போ.ச. பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, இரு பஸ்களிலும் பயணித்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பகல திசையிலிருந்து மொணராகலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்று எதிர்த் திசையில் யாத்திரிகர்களுடன் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிறிகல, மற்றும் மொணராகலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் உத்தேசித்த காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படுமா?
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மின் சக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டின் ஊடாக 70 சதவீத மின் உற்பத்தியை மேற்கொள்வதே எமது இலக்காகும். அதனடிப்படையில் 5 வருடங்களுக்குள் அதாவது 2030ஆம் ஆண்டாகும் போது மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
இந்த இலக்கை அடைவதற்கு மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ஸ்திரத்தன்மை ஆகியவையே அந்த மூன்று பிரதான காரணிகள் ஆகும். இவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை கிடைத்த பின்னரே வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் சுற்றாடல் அமைச்சன் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அதிகார சபை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவி சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவுக்கு ஒரு வாரம் காலம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் இக்குழுவுடனான முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளது. ஒரு வாரத்துக்குள் பிரச்சனைகளை இனங்ண்டு அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் அதற்கு எடுக்கும் காலம் என்பவற்றை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
காத்தான்குடி பிரதான வீதியில் வீதி சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 02.07.2025 அன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பெருந்தெருக்கள் அமைச்சர் கெளரவ பிமல் ரத்னாயக்க அவர்களிடம் நாடாளுமன்ற உருப்பினர் கலாநிதி எம.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக காத்தான்குடி பிரதான வீதியில் ஒளிராமல் பயண்பாடின்றி காணப்படும் வீதி சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கலாநிதி எம.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டதற்கிணங்க, குறித்த விடயத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் மற்றும் உத்தியேகத்தர்கள் அடங்கிய குழு இன்று (15.08.2025) காத்தான்குடிக்கு விஜயம் செய்து, குறித்த இடம் மற்றும் அதனை சூழவுள்ள இடம் தொடர்பான கள மதிப்பீட்டை மேற்கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகரசபை உருப்பினர் இ.எம். றுஸ்வின் LL.B மற்றும் நகர சபை உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இச்சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!
செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் ‘அக்கமஹா பண்டிதர்’ கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் முறைகேடான அதிபர் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்து இன்றைய தினம் 14.08.2025 இலங்கை சிவசேன அமைப்பு மற்றும் திரு. மாதவன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடக சந்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வட மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சீன் செயலாளரால் 2025.03.04. திகதி இடப்பட்ட கடிதப்பிரகாரம், வடமாகாணத்தின் 7 பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அவற்றுள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியும் ஒன்றாகும் (IAB). குறித்த பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அதிபர் தரம் 1ஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் 2-1ஐ சேர்ந்தவர்கள் இருவரும், அதிபர் தரம் IIIஐ சேர்ந்தவர்கள் இருவருமாக அறுவர் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தனர். (இணைப்பு | கிளிநொச்சி தெற்கு வலய RTI தகவல்)
யாழ் கல்வி வலயத்தில் இருந்து யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி தேவகுமார் உதயகலா மட்டும் விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு || யாழ் கல்வி வலய RTI தகவல்)
எனினும் தற்பொழுது கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள, யாழ்/ நல்லூர் சென்பெனடிக் றோ.க.த.க. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியவசந்தி யாழ் கல்வி வலயத்தில் இருந்து விண்ணப்பித்து இருந்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நேர்முகத் தேர்வுப் பட்டியலில் அருட்சகோதரி மரியவசந்தியின் பெயர் இடம் பெற்றுள்ளதுடன், புள்ளிகள் இடப்பட்டுள்ளன.
மேலும் நேர்ர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், புள்ளிகள் அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு III RTI தகவல் மாவட்ட கல்வி அமைச்சு)
இத்தகைய தகவல்களின் அடிப்படையில் பின்வரும் வினாக்களை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து நாம் கேட்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விண்ணப்பித்திருக்காத அதிபர் ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு எந்த அதிபர் நியமன சுற்று நிருபப் பிரகாரம் செயலாளர் அழைத்துள்ளார்?
அதிபர் பதவிக்கு விண்ணப்பித்திருக்காத ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் அதிகாரத்தை செயலாளருக்கு யார் வழங்கியது?
இந்த முறைகேடான கல்வி நிர்வாக செயற்பாட்டின் மூலம் நேமுகத் தேர்வுக்கு அழைக்காது புறக்கணிக்கப்பட்டுள்ள அதிபர் தரம் 1,2 – 11 வகையைச் சேர்ந்த தகுதியான அதிபர்களின் தொழில் கௌரவம், தொழில் உரிமை மீறப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்புக் கூறுவது?
ஒரு IAB பாடசாலைக்கு அதிபர் தரம் Iஐ சேர்ந்தவர்களே நியமிக்கப்பட வேண்டும் என 2023/3 இலக்க சுற்று நிருபம் தெரிவிக்கின்ற போது, குறித்த சுற்றுநிருபத்தை மீறி தரம் III அதிபரை எவ்வாறு நியமிக்க முடியும்? GCE O/L கல்வித்தரம் உடைய அதிபரினால் IAB பாடசாலை ஒன்றை நடாத்த முடியுமா? அறிவு குறைவான அதிபரின் செயற்பாடுகள் மாணவர் கல்வியை பாதிக்காதா?
2023/3 1.10 சுற்றுநிருபப் பிரகாரம் மிகை அதிபர் அணி என தரம் I, II அதிபர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது படுமோசமான முறைகேடாகும். காரணம் 2012.10.05 இல் இருந்து மேற்குறித்த மிகை அதிபர் அணி என்பது நீக்கப்பட்டு இவர்களுக்கும் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் வழங்கலாம் என நிரல் அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிந்திருக்கவில்லையா? அத்தகைய ஒருவர் செயலாளராக பதவி வகிக்கலாமா?
குறித்த அருட்சகோதரியை குறித்த பாடசாலைக்கு திட்டமிட்ட வகையில் முறைகேடாக, அவசர அவசரமாக நியமித்ததன் மர்மமான பின்னனி என்ன? குறித்த பாடசாலையில் முன்னைய அதிபரினால் மேற் கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.
95% இந்துசமய பிள்ளைகளைக் கொண்டுள்ள குறித்த பாடசாலைக்கு தகுதியினமான தரம் II அதிபரை நியமித்ததன் திட்டமிடப்பட்ட பின்னனி யாது?
இத்தகைய முறைகேடான, கல்வி நிரவாகச் சட்டத்திற்கு விரோதமான அதிபர் நியமனத்தை மேற் கொள்வதற்கு பின்னால் இருப்பவர்கள் யாவர்?
மேற்படி வினாக்களுக்கான விடைகளைத் தேடும் போது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது முறைகேடான கல்வி நிர்வாக செயற்பாடுகள், கல்வி நிர்வாக சட்ட மீறல்கள், அவரது கள்ளத்தனங்கள், கபடத்தனங்கள், மதவாத அடிப்படையிலான செயற்பாடுகள் வெளிவரும் என என்னுகின்றோம்.
எனவே குறித்த முறைகேடான அதிபர் நியமனம் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிவாரணங்களை வழங்குமாறு வடமகாகாண ஆளுநர், பிரதம செயலாளர் என்ற வகையில் தயவுடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.
கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தகுதியீனமான அதிபரை அகற்றி தகுதியான அதிபரை நியமிக்க பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டு உதவுக.
95% இந்துசமய பிள்ளைகளை உடைய குறித்த பாடசாலைக்கு இந்து சமயம் சார்ந்த அதிபரை நியமனம் செய்து உதவுக.
2023/3 சுற்றுநிருபப் பிரகாரம் தரம் 1ஐ சேர்ந்த அதிபரை நியமித்து உதவுக.
மதவாத அடிப்படையில் முறைகேடாகவும், பக்கச் சார்பாகவும், திட்டமிட்ட வகையில் செயற்பட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள செயலாளர் மீது இலங்கை தாபன விதி கோவை 2ம் தொகுதியின் 48ம் அத்தியாயத்தின் 13.1 பிரிவின் கீழ் முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற் கொண்டு நீதி வழங்கவும்.
அவ்வாறே செயலாளரின் சட்ட மீறல்களுக்கு துணை நின்ற அருட்சகோதரி மீதும் வலயப் பணிப்பாளர்கள் மீதும் முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டு தண்டனை வழங்கும்.
இத்தகைய குளறுபடிகள் செய்து முறைகேடான கல்வி நிர்வாகத்தை மேற் கொண்டுள்ள செயலாளரின் சுயவிபரக் கோவையை பரிசீலித்து கல்வித்தமைகள், தொழிற் தகமைகளை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும்.
அவ்வாறே GCE O/L தரத்துடன் அதிபர் தரம் IIIஐ சேர்ந்த அருட்சகோதரி மரியவசந்தியின் சுயவிபரக்கோவையில் உள்ள கல்வித்தரம், தொழிற்தரம், சான்றிதழ்களையும் பரிசீலித்து போலியானதா? சரியானதா? என உறுதிப்படுத்தவும். நேர்முகத் தேர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் பரிசீலிக்கவும்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது கல்வி நிர்வாக முறைகேடுகள், கல்வி நிர்வாக சட்ட மீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டு குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் அவரது பதவியினை சட்டப்படி பறித்து வெறிதும் வெற்றும் ஆக்குவதற்கு பொருத்தமான சட்ட நிடவடிக்கையை மேற் கொண்டு உதவுக.
எல்லாவற்றுக்கும் மேலாக தகுதி இருந்தும் மதவாத அடிப்படையிலும் கபடத்தனமாகவும் செயலாளரினால் நிராகரிக்கப்பட்டு பாதிக்கப் பட்டுள்ள தரம் I,II அதிபர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஆவன செய்யவும். என தெரிவித்தனர்
விளையாட்டு சங்கங்களில் பதவிக் காலத்தைக் வரையறுக்கும் ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக குழுவின் தலைவரும் விளையாட்டு அமைச்சருமான சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இந்த ஒழுங்குவிதிகள் ஒரு புதிய விளையாட்டு கலாசாரத்தின் ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் சிக்கலான விடயங்களை தவிர்ப்பதற்கு புதிய ஒழுங்குவிதிகளைத் தயாரித்துள்ளதாகவும், பொதுவாக அனைத்து விளையாட்டுச் சங்கங்களினதும் விளையாட்டினதும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
விளையாட்டுச் சங்கமொன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை வகிக்கும் காலத்தை அதிகபட்சம் 8 வருடங்களுக்கு வரையறுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சர்வதேச சங்கங்களின் தரநிலைகளை கருத்திற்கொண்டு இந்தக் காலவரையறை தீர்மானிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் சங்கங்களில் நீண்டகாலம் பதவிகளை வகித்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பில் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிலைமையை தடுப்பதற்கு இது காரணமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், பெண்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்களுக்கு குறைந்தது இரண்டு பெண்கள் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த ஒழுங்குவிதிகள் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் புதியதொரு விளையாட்டுக் கலாசாரம் ஏற்படுவதாகவும் விளையாட்டுடன் தொடர்புபட்ட சகல தரப்பினரதும் நேர்மறையான பதில்கள் இதற்குக் கிடைத்துள்ளதாகவும் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அடுத்த பாராளுமன்ற வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய அரச பேரவையின் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 2437/24 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் 2025.08.07 ஆம் திகதி கூடிய அந்தக் குழுவின் கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர் விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டுத்துறை கௌரவ பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அதற்கமைய, அவற்றுக்கான தீர்வுகள் வழங்குவது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.