Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 146

மன்னார் பிரதேச சபை மயில் கட்சி வசம்!

0

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில்  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி  உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன் போது சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் ஆதரவாக 09 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் அவர்களுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தியும் ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது. இதன் போது 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் அவர்களுக்கு 15 வாக்குகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில், மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்ததா?

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. 

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. 

இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கட்டாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. 

இந்த நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், 12 நாள்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்றுவந்த இஸ்ரேல் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சண்டை நிறுத்தத்தை ஈரான் அறிவித்திருப்பதாகவும், இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் ஈரான் இன்னும் அதிகாரபூர்வமாக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

ஈரான், தனது அணு உலை வசதிகள் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளது. 

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடனான தொலைபேசி உரையாடலில், நேற்று நடந்த இந்தத் தாக்குதல்களை சர்வதேச குற்றமாக குறிப்பிட்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமைதி காலத்தில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாட்டின் அணு உலை வசதிகளைத் தாக்குவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அமைதி மற்றும் உரையாடலை விரும்புவதாகக் கூறப்படும் உரிமைகோரல்களின் வெறுமையை அம்பலப்படுத்துவதாகவும் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார். 

ஈரான் தனது அணு உலை திறனை பூஜ்ஜியமாகக் குறைக்காது என்றும், ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக ஈரானின் ஆரம்பத் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் மக்ரோனிடம் எச்சரித்தார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுடனான உரையாடல்களிலும், அணு உலை வசதிகளை இலக்கு வைப்பது சட்டவிரோதமானது என்று பெசெஷ்கியான் மீண்டும் கூறியுள்ளார்.

இதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து உலகின் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக டோக்கியோ, ஏதென்ஸ், மணிலா, கராச்சி, நியூயார்க், டொரொன்டோ ஆகிய உலகின் மிக முக்கிய நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடெம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி!

0

ஈரானின் மத்திய நகரமான இஸ்ஃபஹானில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மஜித் மொசய்யேபி என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம், மஜித் மொசய்யேபியை “கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தல்” (முஹாரேபா) மற்றும் எதிரிகளுடன் ஒத்துழைத்து உளவு பார்த்ததற்காக “பூமியில் ஊழல்” செய்த குற்றங்களுக்காக தண்டித்தது.

பாரசீக வளைகுடா நாடு ஒன்றில் டேவிட் என்ற பெயரில் அறியப்பட்ட மொசாட் முகவருடன் தொடர்பில் இருந்த இவர், வாரந்தோறும் அறிக்கைகளை அளித்து வந்தார்.

ஈரானின் முக்கியமான இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் பற்றிய ரகசிய தகவல்களை கிரிப்டோகரன்சி பணம் பெறுவதற்கு ஈடாக மொசாட்டுக்கு வழங்கும் பணியை மொசய்யேபி மேற்கொண்டார்.

கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் போர் தொடங்கிய பின்னர், எதிரிகளுக்கு சேவை செய்ததாக ஈரான் பாதுகாப்பு படைகள் ஏராளமானவர்களை கைது செய்தனர்.

ஈரானின் நீதித்துறை தலைவர் கோலாம் ஹொசைன் மொஹ்சேனி எஜெய், உளவு வழக்குகளை உடனடியாக விசாரித்து, நீண்ட நிர்வாக தாமதங்களை தவிர்க்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் மாஸ் காட்டிய தமிழரசுக் கட்சி!

தெரிவின்றி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த சுப்பிரமணியம் சுரேன் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய தெரிவு இல்லாத நிலையில் சுப்ரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 06 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உப தவிசாளராக சிவகுரு செல்வராசா தெரிவு செய்யப்பட்டார்.

சிரியாவில் தற்கொலை தாக்குதல்; 20 பேர் பலி!

0

சிரியா – டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. 

இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்றையதினம் இடம் பெற்ற ஞாயிறு ஆராதனையின் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. 

இதுவரையிலும் குறித்த குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபை SJB வசம்!

0

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. 

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. 

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேவேளை மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 

மாத்தளை மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், மத்திய மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் சமிலா அதபத்துவின் தலைமையில் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (23) மாத்தளை மாநகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. 

வாக்களிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து, மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

உள்ளூராட்சி சட்டத்தை மீறி பதவி வகிக்க தகுதியற்ற பெண் உறுப்பினருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு வௌியேறியதாகவும், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் சபையிலிருந்து வௌிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 10 உறுப்பினர்களை வென்றிருந்தது. 

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினரையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 உறுப்பினரையும், சர்வஜன பலய 1 உறுப்பினரையும், ஐக்கிய தேசியக் கூட்டணி 1 உறுப்பினரையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

கற்பிட்டி வீதியில் மற்றுமொரு கோர விபத்து!

0

கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இரு வாகனங்களும் வீதியில் கவிழ்ந்து விபத்துள்ளாகின. 

விபத்தில் மோட்டார் ஓட்டுநரும் லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் மரணித்தவர் 38 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

சடலம் கற்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மிக முக்கிய பாதையை மூடவுள்ள ஈரான்!

0

ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெற்றோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது. 

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

0

ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார். 

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார். 

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார். 

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார் செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி 

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். 

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார் 

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார். 

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது. 

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது. 

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.