இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார்.
இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த சபைகளின் பணிகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.
ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவொன்றால் பெரும்பான்மை அதிகாரத்தை கொண்ட 161 உள்ளூராட்சி சபைகளின் பணிகளை இன்று ஆரம்பிக்க முடியும் என்றும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் குறித்து உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் கூடும் உள்ளூராட்சி சபைகளால் தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைகளில் ஆளும் கட்சி எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்தார்.
பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்திற்கு இணங்க உள்ளூராட்சி சபைகன் அதிகாரத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்தார்.
நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், அதன் பிறகு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக பணிப்பாளராக தனது கடமைகளை ஏற்றுக்கொள்வார் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மஹிந்த சிறிவர்த்தனவின் ஓய்வு குறித்து தொடர்ந்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி,
அவர் கூறியது போல சமீப கால வரலாற்றில் மற்றும் உலக வரலாற்றிலும் மிகக் குறைந்த வரி விதிக்கும் அரசாக நாம் மாறிவிட்டோம். இது நமது நாட்டை மீண்டும் ஒரு சாதாரண வரி முறைக்கு மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும், மேலும் ஏராளமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் நிதி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் மஹிந்த சிறிவர்தன மேற்கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் அவர் நமது நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விடைபெறுவார் என்று நினைக்கிறேன். இலங்கை உட்பட 7 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் மாற்று நிர்வாக பணிப்பாளராக கடமையாற்ற இந்த மாத இறுதியில் அவர் புறப்படவுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவருக்கு எனதி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவர் வகித்த பங்கை நாம் பாராட்ட வேண்டும்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் குறித்த சத்தியபிரமாணம் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ஓய்வு நிலை அதிபர் நாகலிங்கம் சோதிநாதன் ,மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை சின்னராசா, முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் முன்னிலையில் தமது சத்தியபிரமாணத்தை செய்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையும் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையும், மட்டக்களப்பு இரண்டு சபைகளுமாக மொத்தம் ஆறு பிரதேச சபைகளில் சுகந்திரமாக எந்தவித இடையூறுகளும் இன்றி ஆட்சி அமைக்கவுள்ளது.
அதேநேரம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒரு ஆசனம் போதாது உள்ள நிலையில் அந்த ஒரு ஆசனம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடம் உள்ளது. அந்த ஆசனத்தை கொள்கை ரீதியாக ஆதரவு வழங்க இனங்கி இருக்கின்றனர்.
மேலும் நெடுந்தீவிலும் இவ்வாறு இனங்கியுள்ளனர். ஊர்காவற்துறை பிரதேச சபையில் தமிழ்க்காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
பூநகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் நேற்று 01.05.2025 மாலை ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்ளால் சரமாரியாக வாழ்வெட்டுக்கு இலக்காகி குறித்த இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கந்தசாமி பிரணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பூநகரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.
வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார்.
இதற்கிடையில், 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யு.டி.என். ஜயவீர தெரிவித்தார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி 22 மாவட்டங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பெறுபான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த பதவிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த கொவிட் திரிபு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொவிட் வைரஸின் புதிய திரிபுகள் அவ்வப்போது பரவுவதுடன், இது தொடர்பாக சுகாதார துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் சமீபத்தில் இறந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குழந்தையின் உயிரியல் மாதிரியை கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிய பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நவீனக் காலத்தில் பக்காவாக திட்டமிட்டு ஒரு காரியத்தைச் செய்தால் அது நிச்சயம் வெற்றி அடையும். அப்படி தான் இங்குச் சீன இளைஞர் செய்த காரியத்தால் ஓவர் நைட்டில் அவர் ரூ.13,700 கோடி சம்பாதித்து இருக்கிறார்.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சமூக வலைத்தளத்தின் ஆதிக்கமே இருக்கிறது. இதனால் எப்போது எந்த நேரத்தில் எது டிரெண்டாகும் என்பதை யாராலும் துல்லிமயாக சொல்ல முடிவதில்லை..
திடீரென டிரெண்டாவதால் ஓவர்நைட்டில் புகழின் உச்சிக்குப் போகும் பலரை நாம் பார்த்து இருக்கிறோம்.
அப்படி தான் இங்கே சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு ஜாக்பாட் அடித்துத் தூக்கி இருக்கிறது. இவர் தயாரித்த பொம்பை தாறுமாறாக ஹிட் அடித்ததே இதற்குக் காரணமாகும். இது விற்பனைக்கு வந்தபோது ஒரே நேரத்தில் பலரும் இதை வாங்கக் கடைகளில் முந்தி அடித்தனர். இதனால் பல இடங்களில் கிட்டதட்ட வன்முறை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.
ஒரே நாளில் ரூ.13,700 கோடி இந்த பொம்மையைக் கண்டுபிடித்ததன் மூலம் இதைத் தயாரித்து விற்கும் பாப் மார்ட் இன்டர்நேஷனலின் தலைவரும் சிஇஓவுமான வாங் நிங், ஒரே நாளில் 1.6 பில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறார். அதாவது ஒரே நாளில் இவரது செல்வம் ரூ.13,700 கோடி அதிகரித்துள்ளது. இப்படி ஓவர் நைட்டில் அவரை கோடீஸ்வரன் ஆக்கிய பொம்மையின் பெயர் லாபுபு பொம்மைகள்.
சீனாவின் ஹாங்காங்கை சேர்ந்த கேசிங் லுங் என்பவர் கடந்த 2015ல் தனது புத்தகம் ஒன்றில் வரைந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாபுபு பொம்மை உருவாக்கப்பட்டது. தனித்துவமான முயல் காதுகள் மற்றும் முகத்தில் ஒரு நக்கல் சிரிப்பைக் கொண்ட இந்த பொம்மை இளசுகள் மனதைக் கொள்ளை கொள்வதாக அமைந்தது. மக்களிடையே வரவேற்பு கேசிங் லுங் இந்த பொம்மைகளை விற்க பாப் மார்ட்டுடன் கூட்டணி அமைத்தார். அந்த பாப் மார்ட் இவரது பொம்மைகளைச் சீனாவின் மூலை முடுக்கிற்கும் எடுத்துச் சென்றது. இந்த பொம்மை குறிப்பாக 2கே கிட்ஸ் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது.
ஒரே நபரே பல கலர், பல மாடல்களில் இந்த பொம்மைகளைச் சேர்த்து வைக்கும் அளவுக்கு வை டிரெண்ட் ஆனது. பல பிரபலங்கள் கூட இந்த பொம்மையை ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்த பொம்மை அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. சீனாவுக்கு இணையாக அமெரிக்காவிலும் இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது. பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் கூட பலரும் இந்த லாபுபு பொம்மைகளை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் 1.6 பில்லியன் டாலர் பணக்காரரானார். அதாவது இவரது செல்வம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி அதிகரித்துள்ளது.
இப்படி ஒரே நாளில் பல கோடி சம்பாதித்தது எனச் சிலர் சொன்னாலும்.. அதன் பிறகு இவரது நீண்ட கால உழைப்பு இருக்கிறது என்பதே உண்மை. பல ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்பின் பலனாகவே இவருக்கு ஒரே நாளில் பல ஆயிரம் கோடி வருமானம் கொட்டி இருக்கிறது. அமெரிக்கா சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 1.5 மாதங்கள் வர்த்தக போர் இருந்தது அனைவருக்கும் தெரியும். முதலில் டிரம்ப் வரிகளை அறிவிக்க அதற்குச் சீனாவும் பதிலடியாக வரிகளை அறிவித்தன. இப்படி இரு நாடுகளும் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்தன. இந்தளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே குழப்பம் இருந்தபோதிலும், இந்த லாபுபு பொம்மைகளின் விற்பனை மட்டும் குறையவே இல்லையாம். தாறுமாறாக விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 23,404 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
காய்ச்சல் குறையாமல் நீடிக்குமாயின் நோயாளர்கள் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டடங்கள் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் மதஸ்தலங்களில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவும் நிலை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தை, டெங்கு நுளம்புகள் பாரியளவில் பரவக்கூடிய இடமாக மாறியுள்ளது என கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெங்கு மற்றும் சிகுன்குனியா நோய்கள் விரைவாகப் பரவி வருகின்றன.
சுற்றுப்புறச் சூழலை டெங்கு நுளம்புகள் பரவாமல் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.