இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் இம்முறை புதிதாக தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று (31) அம்பாறை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருட்களின் விலைகள் அதிகரித்து, வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் சூழ்நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களித்து, சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதரத்தைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாட்டில், தற்போது அரிசிக்கு நியாயமான விலை கூட இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு சரிந்துள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்.
இன்று, நெல் விவசாயிகள் முதல் சகல விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். விவசாயிகளை கோலோட்சுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த வினைதிறன்ற்ற அரசாங்கம், இன்று விவசாயிகளை நிர்க்கதிக்கு ஆக்கியுள்ளது. இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் வைத்துக் கொண்டிருக்கும்.
இந்த அரசாங்கம் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. இது தொடர்ந்தால், 2022 ஆம் ஆண்டு போலவே, நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2028 ஆம் ஆண்டிலும் மீண்டும் வங்குரோத்து நிலையை எட்டும்.
2028 ஆம் ஆண்டு முதல் 5.5 பில்லியன் டொலர் வருடாந்த வெளிநாட்டுக் கடனை அடைக்க வேண்டுமானால் 2025 ஆம் ஆண்டு முதல் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும். புள்ளிவிவரங்களின்படி, இந்த இலக்கை தற்போது அடைய முடியாது. மீண்டும் வங்குரோத்துயடையக் கூடாது என பிரார்த்திக்கின்றேன்.
மக்களின் அழுத்தத்தையும் அதிருப்தியையும் சுரண்டி தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு நான் தயார் இல்லை. IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை திருத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டாலும், புதிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. நாட்டு மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னார், வன்காலை பகுதி மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு (02) டிங்கி படகுகள், ஐந்து (05) சந்தேக நபர்கள் மற்றும் நூற்று இருபத்தொரு (121) கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
அதன்படி, 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் ரணவிக்ரம நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் பயணித்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும், குறித்த டிங்கிகளுக்குள் இருந்த நூற்று பத்தொன்பது (119) கிலோகிராம் ஐநூறு (500) கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 27 ஆம் திகதி மன்னார் வன்காலை பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல்களான புஸ்ஸதேவ மற்றும் கஜபா, மன்னார் காவல் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) சந்தேக நபர் இரண்டு (02) கிலோகிராம் முன்னூறு (300) கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட நூற்று இருபத்தொரு (121) கிலோகிராம் எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சா மொத்த மதிப்பு இருபத்தேழு (27) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 51 வயதுக்குட்பட்ட மாதம்பே மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மன்னார் வன்காலை பகுதியில் சிக்கிய சந்தேக நபர், வன்காலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த, ஐந்து (05) சந்தேக நபர்கள், கேரள கஞ்சா தொகை மற்றும் இரண்டு (02) டிங்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வன்காலை காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது சவால்கள், அழுத்தங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்பட்டால் எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மறைந்த ரகுநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், ரட்ணம் பவுண்டேசனின் ஏற்பாட்டில், விஷன் குளோபல் எம்பவமன்ர் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வவுனியாவிலுள்ள மாகாண தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக்கல்வி மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) விஷன் குளோபல் எம்பவமன்ர் தலைவர் ந.தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கான புலமைப்பரிசிலுக்குரிய சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அங்கு அவர் தனது உரையில்,
பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்றவர்களில் பெரும்பான்மையானோர் புத்தகப்பூச்சிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் சமூகத்துக்கும் உதவுவதில்லை. ஆனால் இன்று உங்களுக்கு கற்கின்ற காலம் முழுவதுக்கும் புலமைப்பரிசில் நிதியை வழங்குகின்றார்கள். அத்துடன் வெறுமனே நிதியை வழங்கிவிட்டுச் செல்லாமல், உங்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியையும் தந்திருக்கின்றார்கள். நிச்சயம் அது உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கல்வி கற்றிருந்தால் மாத்திரம் போதாது. ஒவ்வொருவரும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உங்களுக்கு நிதியுதவியுடன் அந்தத் திறனை வளர்ப்பதற்கு ஏதுவான களத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்கள்.
நாம் மற்றையவர்களுக்கு இரங்குதல் – உதவி செய்தல் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏழை எளியவர்கள் எங்களை நாடி வந்தால் அவர்களுடன் நாம் கதைப்பதால் அவர்களுக்கு உதவி செய்வதால் ஒருபோதும் நாம் சிறுமைப்பட்டு போகமாட்டோம். ஆனால் எங்கள் அதிகாரிகளில் சிலர் தாம் கதிரைகளிலிருந்தால், தங்களைப் பெரியவர்கள் என நினைத்துக்கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உதவுவதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. எதிர்காலத்தில் அத்தகைய பதவிகளுக்கு வர இருக்கும் நீங்களாவது சரியான திசையில் வளரவேண்டும். எங்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பதவிகள் சேவை செய்வதற்கானது. அத்தோடு நீங்கள் ஒவ்வொருவரும் நேரிய சிந்தனையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். எதையும் எங்களால் செய்ய முடியும். முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. இதை நீங்கள் ஒவ்வொருவரும் மனதிலிருத்தவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, உதவிப் பதிவாளர் ஜெயக்குமார், விஷன் குளோபல் எம்பவமன்ர் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ரனி ஜீவரட்ணம் மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில் கருத்துரைத்த ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையே முதல் படியாக இருக்கும் என்று குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிதியைப் பயன்படுத்தித் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிப்பதாகக் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, குறித்த மாநாட்டை பொதுவான ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பிளவுக்குப் பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உறவு வலுவடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எல்ல 9ஆர்ச் பாலத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இன்று (31) தீ பரவி வருவதாக பதுளை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த வன காப்பீட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மையம் தெரிவித்துள்ளது.
விடுமுறை நாள் என்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்களில் எல்ல பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று மையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறண்ட வானிலையால் தீ வேகமாக பரவி வருவதாகவும், யாரோ ஒருவரால் பற்றவைக்கப்பட்ட தீ இந்த வழியில் மலையை நோக்கி பரவி வருவதாகவும் பதுளை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்கவை நாளை திங்கட்கிழமை (01) முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத்,
“அடிமட்ட அளவில் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்த, மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்கள் கிராமங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
அதிகாரிகள் அங்கு சென்று திரும்புவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு சில வாகனங்கள் தேவை.
நாட்டில் உள்ள ஒவ்வொரு அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை செயல்படாத உள்ளூராட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்த பல புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
கிராமப்புறங்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்ட அரசுக்கெதிரான நடவடிக்கையை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண் நோயியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம் தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்;
கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும். பாதாள உலகக் குழுக்களை இயக்கியவர்கள் இவர்கள் இன்று வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவை சுயாதீனமாக இயங்க விட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்ய மாட்டார்கள். இவர்களின் கைதுக்கு பின்பு பல அரசியல்வாதிகளின் பெயர்கள் தெரியவரவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் போது இந்த கூட்டங்கள் இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.
இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவமை. ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய அலை போல எழுந்து, அரசியல் கரையை மாற்றியமைக்கிறது. சில அலைகள் உயர்ந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, சில அலைகள் கரையை மட்டும் வருடி மறைந்து விடுகின்றன.
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன சிறிய, சிறுபான்மைக்கட்சிகளோடு கூட்டிணைந்து ஆட்சியமைத்து வந்திருக்கிறது. இனவாத அலைகளை தோற்றுவித்து ஆட்சியைப்பிடித்ததன் விளைவுகள் தான் இலங்கையில் இன முரண்பாட்டைத் தோற்றுவித்து யுத்த சூழ்நிலைக்கு சென்று பேரழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது என்பதை யாரும் மறப்பதற்கில்லை.
இவ்வாறான தொடரில் அரசியலில் ஏற்பட்ட அலைகளை நாம் பார்க்கும் போது முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க குடும்ப அரசியல் முடிவுக்கு வந்து ராஜபக்ஷ குடும்ப அரசியல் ஆரம்பமான காலத்திலிருந்து இதுவரை ஏற்பட்ட அரசியல் அலைகளைப் பார்க்கலாம்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்து அலை (2005 – 2015)
மஹிந்த ராஜபக்ஷவின் எழுச்சி 2005 தேர்தலில் தொடங்கி 2009 இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் அது போருக்குப்பிந்தைய “வெற்றி அலை”யாக இருந்தது. போரை வெற்றி கொண்டு, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கியதால், அந்த அலை வலிமையுடன் எழுந்த போதும், காலப்போக்கில் அதே அலை ஊழல், குடும்ப ஆட்சி, அதிகாரக்குவிப்பு போன்ற பல்வேறு விடயங்களால் மக்கள் மனதில் சோபை இழந்தது.
அதன் விளைவாக கூட்டு எதிரணியினர் ஒன்று சேர்ந்து மஹிந்த அணியிலிருந்த மைத்திரியை பிரதான எதிர்கக்ட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உள்வாங்கி ஏனைய எதிர்க்கட்சிகளையும் சிவில் சமூக அமைப்புகளையும் ஒன்று சேர்த்து சர்வதிகார குடும்ப ஆட்சிக்கெதிரான மைத்திரி அலையைத் தோற்றுவித்தார்கள்.
மைத்திரி அலை (2015)
2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, ஒரு “மாற்றத்தின் அலை”யாக மக்களால் பார்க்கப்பட்டது. சிறிய படகில் புயலை எதிர்கொண்டு வந்தவர் போல, எதிர்பாராதவிதமாக மஹிந்தவின் வலிமையான அலைக்குப் பின்பு வெற்றியடைந்தார்.
நல்லாட்சிக்கான எதிர்பார்ப்பு, ஜனநாயக சீர்திருத்தம் போன்ற கனவுகள் அந்த அலையில் மிதந்தன. ஆனால் செயற்பாட்டில் பலவீனமும், அரசியல் உடன்படிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்குமிடையில் ஏற்பட்ட அதிகார மோதல், 52 நாள் அரசியல் குழப்பம் என்பன தளர்வை ஏற்படுத்தின.
இவ்வாறு நல்லாட்சி பலவீனப்படுத்தப்பட்டதால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அரசியலில் ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் நல்லதொரு வாய்ப்புக்கிடைத்தது.
கோட்டாபாயே அலை (2019)
ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பிந்தைய அச்சமும் பாதுகாப்புத்தேவையை முன்னிலைப்படுத்தி “கோட்டா அலையை” உருவாக்கினார்கள். 2019 இல் கோட்டாபய ராஜபக்ச இனவாதத்தைத் தூண்டி வெற்றி பெற்றார்.
மக்கள் பாதுகாப்புக்காகத் தேடிய வலிமையான அலை என நம்பினார்கள். ஆனால், ஆட்சி நடத்தும் திறமையின்மை, COVID-19 நிர்வகிப்பதில் தோல்வி, பொருளாதாரச்சரிவு ஆகியவை அந்த அலையை மிக வேகமாக பின்வாங்கச் செய்தன. அது கோட்டா அலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பு அலையாக சுனாமி அலை போல வந்து ஜனாதிபதி கோட்டாபாயவை நாட்டை விட்டே விரட்டியடித்தது.
ஆட்சியின் மீதி காலத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அன்று ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளைக்கண்டு வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை மீட்ட தலைவர் என ஒரு அலையை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என முயற்சித்தாலும் அந்த தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்பட்டதாலும், கடந்த ஆட்சியின் போக்கில் மக்கள் அதிர்ப்தியில் இருந்ததாலும், நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் எழுச்சி போராட்டங்களில் அனுர குமாரதிசாநாயக்கவின் பங்கு என்பவற்றோடு, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்திய விதம் என்பவற்றால் மக்களிடத்தில் பெரிதும் அனுர குமார திசாநாயக்க கவரப்பட்டதால் அனுர அலை தோற்றம் பெற்றது.
இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு அலை உண்டானதான ஒரு பிரம்மை ஏற்படுத்தப்பட்டாலும் ரணிலுக்கு 22 இலட்சம், சஜீத் 45 இலட்சம், நாமல் 3 இலட்சம் எனை வாக்குப்பிரிப்பு அனுரவுக்கு அலை உருவானதான பிரம்மை உருவாக தோற்றப்பாட்டை உருவாக்கியது எனலாம். மொத்தத்தில் பார்க்கும் போது எதிரணி கணிசமான வாக்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பாராளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் வெற்றி என்பது அனுரவுக்கான அலை எனக்கொள்ள முடியாவிட்டாலும், மக்கள் மனோநிலையில் எதிரணியினர் மீதான அவநம்பிக்கை, ஒற்றுமையின்மை என்பன அனுரவுக்கான வெற்றியை இலகுபடுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.
அனுர அலை (2024)
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) நீண்ட நாள் போராட்டத்தோடு, தேசிய மக்கள் சக்தியாக மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து இடைவிடாத முயற்சியின் பலனாக அனுர அலை எழும்பியது.
அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) நீண்ட காலமாக “மாற்றத்தின் புது அலை” என மக்கள் மத்தியில் தோன்றிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள், நடுத்தர மக்கள், ஊழல் எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் இவரது அலையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கை தரும் வாக்குறுதிகளை அளித்ததன் விளைவாக பாராளுமன்றத்திலும் 2/3 பெரும்பான்மைக்கு அதிகமான பிரதிநிதிகளை மக்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த அலை இன்னும் முழுமையாகக் கரையை அடையவில்லை; அது கரையோரத்தில் சேமித்து வைக்கப்பட்ட சக்தி போலத் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.
ஆனாலும், ஆட்சியைப் பிடிப்பதற்கு முதல், கடந்த அரசாங்கங்களால் முன்னெடுத்த ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவற்றை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து விட்டு, ஆட்சியை பிடித்த பின்னர் அதனைத்தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பதும், அதனை மேலும் ஆதரிப்பதென்பதும் ஆட்சியைப்பிடிக்க மக்களை ஏமாற்றிய செயலா? என கேள்விகளும் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளை அனுர அரசாங்கம் இழந்திருப்பதும், இது ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்திருப்பதும் அரசாங்கத்தின் போக்கில் மக்களின் அதிருப்தி வெளிப்படுவதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இலங்கை அரசியலில் சூடுபிடித்திருக்கும் செய்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரமாகும்.
இவ்விவகாரம் ரணில் மீதான அனுதாப அலையை தோற்றுவித்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவை சாத்தியப்படுத்தும் நிலை உருவாக்கியுள்ளது. அத்துடன், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி ரணில் என்ற ஆளுமையிடமே உள்ளதெனலாம்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியும் ரணிலைக் கண்டு பயங்கொள்வதைத்தான் ரணிலின் கைது பின்னணி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ரணிலை வெளியில் விட்டிருப்பதால் தேசிய மக்கள் சக்திக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற ஒரு காரணமும், ரணிலை கைதுசெய்து ஜெயில் வைத்தியசாலையில் முடக்க காரணமாக அமைகின்றது.
அத்தோடு, பட்டலந்தைக்கு பழிவாங்க சுமார் 40 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், இன்று அரச நிதி துஸ்பிரயோகம் என்ற வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில்.
அடுத்து மத்திய வங்கி பிணைமுறி என தொடர் குற்றச்சாட்டுக்களால் ரணிலின் அரசியல் வாழ்வு முடித்து வைக்கப்படும்.
தேசிய மக்கள் சக்திக்குள்ள ஒரே சவால் ரணிலே தவிர வேறு யாருமில்லை. ரணிலைக் கண்டு அச்சங்கொள்வதால் தான் அவரை முடக்கத்திற்கு கொண்டு வர அரசு எத்தனிக்கிறது.
2022ல் பொருளாதார சுனாமி இலங்கையைச் சிதறடித்த போது, அதிர்ச்சி மற்றும் குழப்பத்தின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அரசைப் பொறுப்பேற்றார். பலரால் நிராகரிக்கப்பட்டாலும் நாட்டை நிலைநிறுத்தும் முயற்சியில் வெளிநாட்டுத்தொடர்புகள், கடன் மறுசீரமைப்புகள், தற்காலிக பொருளாதார நிலைத்தன்மை போன்றவையில் குறிப்பிட்டளவு வெற்றி கண்டார். அதன் காரணமாக மக்கள் மத்தியில் தற்போது அவருடைய கைது விடயத்தில் அனுதாப அலை உருவாக்கியுள்ளது.
ஆனால், இது உண்மையான மக்கள் எழுச்சியால் வந்த அலையல்ல. மாறாக, சிதைந்த கடலில் மூழ்காமல் காப்பாற்றும் தற்காலிக அலை போன்றது. இதனை எதிர்க்கட்சிகள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றது என்பதில் தான் இதன் வலிமை தங்கியிருக்கிறது.
எதிர்வரும் தேர்தலில் இந்த அலையின் வலிமை சோதிக்கப்படும். அது மக்களின் மனதில் நம்பிக்கை அலையை பாயச் செய்யுமா? அல்லது மக்கள் மீண்டும் மாற்றத்திற்காக அனுர அலையை அல்லது மாற்றத்திற்கான வேறு அலையை தேடுவார்களா? என்ற கேள்வி திறந்த நிலையிலுள்ளது.
இந்த அலை எதிர்கால அரசியலுக்கான அலை என ஒரு சில தரப்பு காட்டிக்கொள்ள முனைந்தாலும், வழக்கு, நீதிமன்றம் என தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான கூடாரமாக இதனைப்பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர் என்பது வெளிப்படை.
ரணிலையே வழக்கு, நீதிமன்றம் என அலைய விடும் அரசு, ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டு கோவைகளை தூசு தட்டி சங்கிலிக்கோர்வையாக எடுக்கும் போது ஓரணியில் திரள்வதை தடுக்கும் என்பது நிச்சயம்.
இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொள்ளும் போது எதிர்காலத்தில் இலங்கை அரசியல் மூன்று சாத்தியமான அலைகளை எதிர்கொள்கிறது:
ரணிலின் அனுதாப அலை – நிலைத்தன்மை, சர்வதேச ஆதரவு என்ற அடிப்படையில் ஒரு குறுகிய கால அலையை நீண்ட அலையாக எதிர்கட்சிகள் மாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
அனுர அலை – ஊழல் எதிர்ப்பு, இளைஞர் சக்தி, மாற்றம் என்ற அடிப்படையில் வலுவான அலையாக மாற முயற்சிக்கலாம்.
பழைய குடும்ப அலைகள் (மஹிந்த – கோட்டா வகை) – சில பகுதிகளில் இன்னும் நிலைத்து நிற்கலாம், ஆனால், அதன் வலிமை குறைந்துள்ளது. ஆனாலும், நாமலூடாக வலுப்படுத்த முயற்சிக்கலாம்.
எனவே, இலங்கை அரசியலில் ஒவ்வொரு தேர்தலும் ஏதொவொரு அலையை ஏற்படுத்துகின்றது. மஹிந்த அலை மக்களை வெற்றிக்குப்பின் கொண்டு சென்றாலும் ஊழலில் கரைந்தது; மைத்திரி அலை நம்பிக்கையைத் தூண்டியும் நீண்டு நிற்கவில்லை; கோட்டா அலை பாதுகாப்பின் பெயரில் நாட்டைச் சிதைத்தது; அனுர அலை இன்னும் கரையைக்காண விழைகிறது. தற்போது ரணில் அனுதாப அலை அரசியலில் தற்காலிக அமைதியை வழங்குகிறது.
ஆனால், இறுதிக்கேள்வி ஒன்றே. எந்த அலை மக்கள் நம்பிக்கையை நிரந்தரமாகத் தாங்கிச்செல்லும்? அதற்கான விடை வரவிருக்கும் தேர்தலில் மட்டுமே வெளிப்படும்.
மக்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்பான நிலை தான் அலையாக மாற்றம் பெற்று அரசியல் மாற்றமாக வலுப்பெறுகின்றது. மக்கள் சுய பரிசோதனை என்பதைத் தாண்டி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் அரசியல் மாற்றத்துக்கான எண்ணப்பாடுகள் தோற்றம் பெறுவதுடன், மக்கள் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இன, மதவாத அரசியலுக்கும் முக்கியத்துவம் பெற்று இனவாத, மதவாத ஆட்சியாக மாற்றம் பெறுகின்றன.
மக்கள் சுய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமையினால் கடந்த கால அரசியல் மாற்றங்க்களுக்கு இன, மதவாத சிந்தனை துணை போனது என்பது வரலாறாகும்.
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது.
இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று, யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கை சந்தையில் இருந்து முழுமையாக விலகியதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தங்களின் வெளியேறும் முடிவை அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த இலாபத்தை அடைவதற்கு இலங்கை சந்தை பொருத்தமாக இல்லை என்பதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறித்த நிறுவனம் அறியப்படுத்தியுள்ளது.