Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 161

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும், கடற்படைக்கு ஆலோசணை வழங்கி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கடற்றொழில் அமைச்சு தயார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக பாராளுமன்றத்தில் கடற்படை, பொலிஸ், இராணுவம் உள்ளிட்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. சட்டவிரோத மீன் பிடியால் எமது சொத்துக்கள் அழிக்கப்படுவதோடு எதிர்கால சந்ததிக்கு இல்லாது போகின்றது. இந்த சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை என தெரிவித்தார்.

மேலும் கடற்படை மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்களோடு விரிவாக பேசியிருக்கின்றோம் எனவும், விரைவாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

கொவிட் குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இன்று (27) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான நிலையப் பகுதியில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். 

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தில் நடந்தது போன்ற அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்தே அந்த விடயம் தொடர்பில் தலையிடப்பட்டு வருகிறது.” என்றார். 

இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான இந்தியாவில் இருந்து புதிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,009 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு பயிற்சி!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு பயிற்சி தொடர்பான ஒத்திகை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (26.05.2025) காலை 10.00மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வினைப் மாவட்ட செயலக உற்பத்தித் திறன் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கட்டடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளினை அனர்த்த காலங்களில் உடனடியாக களத்தில் எல்லோரும் பயன்படுத்துதல் மற்றும் குறித்த கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக செயன்முறை ரீதியாக விழிப்புணர்வூட்டும் நோக்கில் இது நடைபெற்றது.

இதன்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, விபத்து ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்பு கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் கையாளுகை தொடர்பாக தெளிவூட்டல் பற்றி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா அவர்கள் ஒத்திகையின் மூலம் விளக்கினர்.

தொடர்ந்து தீயணைப்பு கொள்கலன்களை கையாளுகின்ற முறைமை தொடர்பாக செயன்முறை ரீதியாக விளக்கமளிக்கப்பட்டு, உத்தியோகத்தர்களும் கையாளுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டு தெளிவூட்டப்பட்டுள்ளது.

இச் செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள், உற்பத்தித்திறன் பிரிவின் உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆனையிரவு உப்பளம் முன்பாக போராட்டம்!

ஆனையிரவு உப்பளத்தில் கடந்த 14.05.2025 ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஒரு அடிமைகள் போல் நடாத்தப்பட்டு தமக்கு உப்பளத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்கப்படுவதில்லை எனவும் அங்கு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக தமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறான நடவடிக்கை தமது வாழ்வாதாரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து இன்று 26.05.2025 வரை எந்த வித வேலையும் வழங்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வை தமக்கு வழங்குவார்கள் என எதிர்பார்த்துள்ளதாகவும், உரிய தீர்ப்பு கிடைக்கும் எதிர்பார்ப்புடன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடி எமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தந்து எம்மை வலமை போன்று பணியில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவ சேவைக்கு 179 பேர் இணைப்பு!

0

துணை மருத்துவ சேவைக்கு 179 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதுடன், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆடியோலஜிஸ்ட் டெக்னீஷியன் பதவிக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துணை மருத்துவ சேவையில் நான்கு பதவிகளை உள்ளடக்கிய 179 பேருக்கு பாடநெறிக்கான ஆட்சேர்ப்பு கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (28) காலை இலங்கை மன்ற (Srilanka Foundation) கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற உள்ளது. 

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (MLT) பதவிக்கு 41 பேரையும், கதிரியக்க நிபுணர் பதவிக்கு 74 பேரையும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு 53 பேரையும், ஆடியோலஜிஸ்ட் டெக்னீசியன் பதவிக்கு 11 பேரையும் நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக இன்று 179 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடியோலஜிஸ்ட் டெக்னீசியன் பதவிக்கான இந்த ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அந்தப் பதவிக்கான கடைசி ஆட்சேர்ப்பு 2014 இல் செய்யப்பட்டது. அதேபோல், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கான கடைசி ஆட்சேர்ப்பு 2020 இல் நடந்தது, மேலும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான கடைசி ஆட்சேர்ப்பு 2023 இல் நடந்தது.

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட படிப்புக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். 

அந்த காலியிடங்களை நிரப்பிய பிறகு, ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (MLT) பதவிக்கு மேலும் 245 காலியிடங்களுக்கும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு மேலும் 144 காலியிடங்களுக்கும் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) II சாமிகா எச். கமகே தெரிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா?

0

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே.

இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் சில பொதுவான விடயங்களுமே பேசப்பட்டன.

மேலும், முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவைக் களமிறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவிப்பது தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

கனடாவில் மற்றுமொரு நினைவுத்தூபி!

0

கனடாவில் மற்றுமொரு தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமன்றி இலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த மண்ணில் நீதி மறுக்கப்பட்டு தாம் புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் அதனை வெளிப்படுத்தி ஆறுதலை அடைந்துகொள்வதாக புலம்பெயர் இலங்கை தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், கனடாவில் ஸ்காப்ரோவில் மற்றும் ஒரு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமாவின் ராணியின் இறுதிக் கிரியை இன்று!

0

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) இடம்பெறவுள்ளது. 

அதன்படி, இறுதிக் கிரியை அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

‘இலங்கை சினிமாவின் ராணி’ என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா கடந்த சனிக்கிழமை தனது 78ஆவது வயதில் காலமானார். 

மாலினி பொன்சேகாவின் பூதவுடல் இன்று காலை 8 மணிக்கு கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலே கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது. 

பின்னர் மத சடங்குகள் நிறைவுற்ற பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்து கலைஞர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன. 

பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இதேவேளை, மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ள காரணத்தால் சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

அதற்கமைய, கிரியை நிகழ்வுகள் மற்றும் இறுதி ஊர்வலம் இடம்பெறுவதை முன்னிட்டு எந்தவொரு வீதியும் மூடப்படாது எனவும், இறுதி ஊர்வலம் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து சுதந்திர மாவத்தை வழியாக சுதந்திர வளாகம் வரையில் பயணிக்கும் போது, சுமார் 15 நிமிடங்களுக்கு சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர மாவத்தை வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதிக் கிரியை நிகழ்வுகள் நடைபெறும் போது, ​​அருகிலுள்ள சுதந்திர மாவத்தை மற்றும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் செல்லும் பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு!

0

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. 

இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், தற்போது சந்தையில் 245 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தரின் உயிரை பறித்த சொகுசு ரயில்!

புகையிரத கடவையை கடக்க முயன்றவர் விபத்தில் பலியாகியுள்ளார். விபத்தினால் புகையிரத சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.

குறித்த விபத்து இன்று காலை 11.50 மணியளவில் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த புகையிரதம் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

புகையிரத ஊழியர்கள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்ததுடன், கிளிநொச்சி பொலிசாரும் மக்களும் புகையிரத ஊழியர்களுடன் பேசி சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு மலர்ச்சாலை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

தானியங்கி சமிக்கை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.