Tuesday, November 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 163

வீட்டுத்திட்டம் குறித்த புதிய அப்டேட்!

0

பல்வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டு கட்டம் கட்டமாக முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரம் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாத சுமார் 48,000 வீடுகள் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக வீடமைப்பு அதிகார சபையுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் வீடுகளை கட்டி முடிப்பதற்கான கடன்களை வழங்குவது குறித்து அரச வங்கிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்று கைதான பெண் இன்று மரணம்!

0

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய இந்தப் பெண் நேற்று (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.00 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் வங்கப் பிரதமருக்கு லொக்!

0

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவோம்; தேவையெனில் இதற்காக சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடுவோம்’ என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது.

அவருக்கு எதிராக கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி கடந்த ஆண்டே துாதரகம் வாயிலாக மத்திய அரசிடம் அந்நாடு வலியுறுத்தியது.

இந்நிலையில், வங்கதேச அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளோம்.

”ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப மறுத்தால், அது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல். இந்த விவகாரத்தில் தேவையெனில் சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவோம்,” என்றார்.

1.5 மில்லியன் மாணவர்களுக்கு நன்மை!

0

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை 2025 இல் நடைமுறைப்படுத்தல்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று (20.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

(IMF) ஒப்பந்தத்தில் கை வைக்கவுள்ள அரசாங்கம்!

0

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். 

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். 

பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

புதிய நிர்வாகத்தின் கீழ் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரிச் சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளதை விட மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைகளின் கடினமான விடயங்களை ஓரளவுக்குக் குறைக்கத் தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார். 

வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி எல்லையை 150,000 ரூபாயாக உயர்த்துவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய பால் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு, பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு மாணவர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆகியவையும் இதில் அடங்கும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்தனை மில்லியன் தேங்காய்கள் இறக்குமதியா?

0

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.

மேலும், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கூறிய விடயங்களை தெரிவித்தார்.

நாட்டின் மாதாந்திர தேங்காய் தேவை 250 மில்லியன் என்றும், அதில் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கும், 100 மில்லியன் தேங்காய்கள் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டின் வருடாந்திர மொத்த தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் கொட்டைகளாக இருந்த போதிலும், கடந்த ஆண்டு அது 2,680 மில்லியன் கொட்டைகளாகக் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி 2,400 முதல் 2,600 மில்லியன் கொட்டைகளாகக் குறையும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200 மில்லியன் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக ஜயந்த சமரகோன் மேலும் தெரிவித்தார்.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நேர்ந்த கதி!

0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவை சிறைச்சாலை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ஈ-விசாக்கள் வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியமையால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் கடந்த செப்டம்பர் மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த மனுக்கள் இன்று (22) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ள நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹர்ஷ இலுக்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு உயிரிழந்த யானைகள் இத்தனையா?

0

கடந்த 2024 ஆம் ஆண்டில் 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 81 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ரயிலில் மோதி 11 யானைகளும், நீரில் மூழ்கி 10 யானைகளும், கிணற்றில் தவறி விழுந்து 07 யானைகளும்,  யானை வெடி வெடித்ததில் 51 யானைகளும் உயிரிழந்துள்ளன.

இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

டிரம்ப் விழாவில் இந்தியாவுக்கு முன்னுரிமை!

0

டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாகை சூடிய டொனால்டு டிரம்ப், அதிகாரப்பூர்வமாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் ஒன் உள் அரங்கத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு (ஜன.20) 10.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான வரவேற்பும், உபசரிப்பும் அளிக்கப்பட்டது.

பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில், முதல் இருக்கை அளிக்கப்பட்டது. அவருக்கு அருகில் ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோ அமர்ந்திருந்தார்.

2 வரிசைகள் பின்தள்ளி ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டகேஷி ஐவாயா, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோருக்கு இடம் தருவிக்கப்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிரம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலகில் அதிகம் பேரை கவர்ந்துள்ள சமூக வலைதளம் என்ற பெயர் பெற்றது இன்ஸ்டாகிராம். இளையதலைமுறையினர், திரையுலகத்தினர், பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் 90 விநாடிகள் கொண்ட ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவை வெளியிடலாம். அதற்கு மேலான கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட முடியாது.

ஆனால் இனி அந்த கட்டுப்பாடு கிடையாது. 3 நிமிடங்கள் வரை கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடலாம், பகிரலாம் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசைரி வெளியிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது; இனி பயனர்கள் அதிகபட்சம் 3 நிமிடங்கள் கால அளவு கொண்ட வீடியோக்களை பதிவிடலாம். இதற்கு முன்னர் இந்த அளவு 90 விநாடிகள் கொண்டதாக இருந்தது. கால அளவை நீடிக்க வேண்டும் என்று பயனர்களின் கோரிக்கையை தொடர்ந்து 3 நிமிடங்களாக நீடிக்கப்படுகிறது என்றார்.

இன்ஸ்டாகிராம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.