Monday, November 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 171

மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்!

0

மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் கிரீன்லாந்து நாட்டிற்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அந்நாடு தக்க பதிலடி கொடுத்தது.

தற்போது கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் ஆக்குங்கள் என கூறியிருந்தார். இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைத்திருக்கும், அகண்ட அமெரிக்கா வரைப்படத்தை வெளியிட்டு டிரம்ப் பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்நிலையில், அவர், மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், அவர், ‘இது அழகான பெயர். பொருத்தமானது என்று கூறியிருந்தார். இதற்கு, பதில் அளித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது: மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்த பகுதிகளை, மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்; அதுவும் நன்றாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர் 17ம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

62 வயதான மெக்சிகோவில் அதிபர் கிளாடியா ஷீன்பாம் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வரி விதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக டிரம்ப் மெக்சிகோவுடன் பலமுறை மோதிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி!

0

அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் குழு தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த போது, பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பாஸ்மதி அரிசியாக சந்தைப்படுத்தப்படுவது தெரியவந்ததுள்ளதாக தெரன ஊடகம் தெரிவித்துள்ளது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்பதோடு,  ஒரு கிலோ அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் ரூ.220 முதல் 250 வரை விற்கக்கூடிய பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி, ஒரு கிலோவுக்கு ரூ.65 வரி செலுத்தி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்த விடயம், தொடர்பாக ‘அத தெரண’ சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோடவிடம் வினவியது.

நாட்டிற்கு வரும் அரிசி இருப்புகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பப்பட்டால் மாத்திரமே அவை பாஸ்மதி அரிசியா இல்லை என்பது தொடர்பில் அடையாளம் காணமுடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க சுங்கத் துறைக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமே உள்ளது என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Clean Sri Lanka வலுக்கட்டாயமான திட்டமல்ல!

0

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

முன்மாதிரியை வழங்குதல், ஊக்குவித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றத்தின் தேவையை உணரச் செய்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும். இதன்மூலம் இலங்கை சமூகத்திற்குள் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அபிவிருத்தியடைந்த தேசமாக இலங்கையை மீள ஸ்தாபிப்பதற்கென சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் பூரணத்துவம் என்பவற்றுடன் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபடுத்தி அதற்கான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று நல்லதொரு ஆட்சி நிர்வாக எண்ணக்கருவை உறுதிப்படுத்தி, இலங்கை மக்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த உள்ளார்ந்த செயற்பாடுகள் மற்றும் மனித தொடர்புகளுக்கென அடையாளம் காணப்பட்ட விழுமியம் மற்றும் நெறிமுறைகளை ஸ்தாபிப்பதன் ஊடாக புன்னகை நிறைந்த மக்கள் வாழும் நாட்டை உருவாக்குவதே நோக்கமாகும்.

அதற்கென Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைக்கென தேசிய மட்டத்திலான எண்ணக்கரு மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல்யமானோர் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்களுடன் கூடிய 19 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணுதல், மக்களை தெளிவுபடுத்துதல், வளங்கள் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு, முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உரிய நோக்கத்தை அடையும் வகையில் இடம்பெறுகின்றதா என பின்தொடர்தல் மற்றும் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் உரிய நிறுவனங்களை தெளிவுபடுத்தல், வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேறியுள்ளதா என ஆராய்ந்து பார்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னர் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படவில்லை. ஏதாவதொரு செயற்பாட்டை சட்டரீதியாக மாத்திரம் நடைமுறைப்படுத்த அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கவே எமது நிறுவனங்களும், அதிகாரிகளும் பழக்கப்பட்டுள்ளனர். தனிநபரின் அகத்திலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த வேலைத்திட்டமாகும். இது சற்று உணர்வுபூர்வமானது. இதனை நடைமுறைப்படுத்தும் போது சில குறைபாடுகள் நிகழக்கூடும். சிலர் தவறான நோக்கத்தில் இதனை சீர்குலைக்க முயற்சிக்கலாம். வேலைத்திட்டத்தின் எண்ணக்கருவை புரிந்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாம் வழக்கம் போன்று பணிகளை மேற்கொள்ளும் போது சில சில விடயங்கள் இடம்பெறக்கூடும். எனினும் நாம் எதிர்பார்க்கும் பரிணாமத்தை கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்படுத்த முடியாது. அனைவரினதும் ஒத்துழைப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள முடியுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

மு.பா.உ டயான கமகேவுக்கு கடும் சிக்கல்!

0

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கொழும்பு மேல்ர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரிகை  வாசிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதிவாதியான டயானா கமகே, தான் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்று கூறினார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷனக ரணசிங்க, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பி, இந்த வழக்கு அடிப்படையாகக் கொண்ட ஆவணம் 2003 இல் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.

இருப்பினும், இந்த வழக்கு 2024 இல் தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், குறித்த ஆவணம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று வாதிட்டார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இது குறித்த வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, வழக்கை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

எனக்கே இந்த நிலை. மிகவும் வேதனையாக இருக்கிறது!

0

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. எனவே, ஏனையவர்களைப் போன்று, நீங்களும் பொடுபோக்குத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதில், மக்கள் உன்னிப்பாக இருக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றது. இன்னும் நாட்டில் சாதகமான சூழல் ஏற்படவில்லை. அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியமான சில பொருட்களின் விலைகளையாவது, குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி விலையில் கூட மக்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. 

அன்றாட வயிற்றுப் பசிக்கான உணவைக் கூட சாதாரண விலைக்கு வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உப்புப் பிரச்சினை உட்பட சில துரிதமாக தீர்க்கக் கூடிய விடயங்கள்  இருப்பினும், அவற்றை ஏன் காலதாமதப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

அதேபோன்று, தலைமன்னார் பங்குத் தந்தை டெனி கலிஸ்ரஸ் எமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். பிரதமருக்கு முகவரியிட்ட கடிதத்தின் பிரதியே அது. அதாவது, மன்னாரில் 18,990 ஹெக்டெயர் நிலப்பரப்பானது, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனவிலங்கு திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல்யமான மன்னார் தீவில் இவ்வாறான வர்த்தமானி பிரகடனங்கள் மூலம், சுற்றுலாத்துறை மற்றும் இன்னோரன்னை துறைகளை கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகின்றேன்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், 2009 – 2010 ஆண்டு பயிற்சிகளை நிறைவு செய்த 237 ஆசிரியர்களுக்கு, இதுவரையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. கல்வி அமைச்சர் ஹரினி அவர்கள், இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, அவசரமாக அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

அதேபோன்று, இலங்கையிலே 400 இற்கு மேற்பட்ட நூலக உதவியாளர்கள் பணியாற்றுகின்றார்கள். அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக உதவியாளர்கள் உட்பட பலர் சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 2012 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு, பல்கலைக்கழக நூலக உதவியாளர்களை, சிற்றூழியர்களின் தரத்துக்கு பதவி இறக்கம் செய்ததன் மூலம், நூலக உதவியாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர். 

எனவே, 2012 இற்கு முன்னர் இருந்த அதே பதவி நிலையில், அவர்களது நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், மன்னார் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள பாதைகளை சீரமைப்பதுடன், முறையான வடிகான் அமைப்பு உள்ளிட்ட இன்னோரன்ன உள்கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் எந்தவொரு நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்த விடயத்தையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, வவுனியா, சாளம்பைக்குளத்தில் குப்பைகூளங்களைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள். அந்தப் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியில், வைத்தியசாலை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனது அருகில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத் அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்தவரே. கடந்த கால கோட்டாவின் அரசாங்கம், இவற்றையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே, இந்த அரசாங்கத்திலாவது மேற்படி பிரச்சினைக்கு, மாற்றுவழி ஒன்றை கண்டறிந்து, விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும், அண்மையில் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவில் கரையொதுங்கி, திருமலையில் வைக்கப்பட்டிருந்தபோது, நான் அவர்களை பார்வையிட சென்றிருந்தேன். அவர்களுடன் கலந்துரையாடுவதை பொலிஸார் தடுத்து, எமக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது. 3 இலட்ச அகதிகளுக்கு, அரசாங்கத்தின் உதவியுடன், பல மாதங்கள் மூன்றுவேளை உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டேன். 

எனவே, ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை மன வருத்தத்தை தோற்றுவித்தது. படுப்பதற்கு பாய், தலையணை கூட அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நான் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்தேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எங்களுடன் இரண்டு தசாப்தகாலமாக இந்த பாராளுமன்றில் இருந்தவர் என்ற வகையில், அவரது நற்பண்புகளை கண்டிருக்கின்றோம். அவரது பேச்சு மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டுதான், மூவின மக்களும் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இவ்வாறு எமது நாட்டுக்கு அகதிகள் வருகின்றபோது, சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அந்தவகையில், இந்த மியன்மார் அகதிகள் விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுங்கள். 

மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.  

அதுபோலவே,  எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.

 எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில்  மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர். எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள். 

மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்தார்.

ஆரம்பமானது ஜனாதிபதியின் துரித வேலைத்திட்டம்!

0

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் – ஜனாதிபதி

ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கல் ஊடாக நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான அணுகுமுறை ஏற்படுத்த nirdc.gov.lk என்ற புதிய இணையதளம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயல்முறை, (Research and Development) மற்றும் பெறுமதி சேர் (value added) பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தி என்பன நாட்டின் பொருளாதாரத்தை எழுச்சி பெறச் செய்து ஒட்டுமொத்த மனித மற்றும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும்.

நாட்டில், புத்தாக்க திறன் கொண்டவர்கள் கிராமிய அளவில் உருவெடுத்தாலும், அவர்களின் யோசனைகள் மற்றும் ஆக்கங்களை உள்வாங்க அல்லது அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டன. இந்த மனித வளத்திற்கு சுதந்திரமாக சிந்திக்க தேவையான சூழலை உருவாக்குவதன் ஊடாகவும், அவர்களின் புதிய யோசனைகளை ஆராய்ச்சி மற்றும் அவதானிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொறிமுறையின் ஊடாக வழங்குவதன் மூலமும் இலங்கையை எதிர்காலத்தில் ஒரு புத்தாக்க மையமாக மாற்ற முடியும்.

இதுவரை, இலங்கை வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் 0.12%க்கும் குறைவாகவே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கியது.

இலங்கையில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தாலும், அவற்றின் முறையான முகாமைத்துவம் மற்றும் இந்த பெறுமதியான ஆராய்ச்சி என்பன இன்னும் பொருளாதார பிரதிபலன்களுக்காக பயன்படுத்தப்படவில்லை.

புதிய அரசாங்கம் தெரிவான பின்னர், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவை அனைத்தையும் தாமதமின்றி முகாமைத்துவம் செய்து நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும். அதற்கமைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தற்போது நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்ற நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பொறிமுறையை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.

எனவே, பொருளாதாரத்திற்கு விரைவான ஊக்கத்தைப் பெறுவதற்காக ஏற்கெனவே ஆராய்ச்சியை நிறைவு செய்திருக்கும் அல்லது நிறைவடையும் தருவாயில் உள்ள திட்டங்களை, பெறுமதி சேர்த்து சந்தைப்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் சேவையாக விரைவாக மாற்றியமைப்பதே பயனளிக்கும் உபாயமாகும். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரதிபலன்களை அறிந்துகொள்ளல்,பாராட்டுதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் செயல்படுத்தலுக்காகவும் விரைவாக வணிகமயமாக்கவும் “ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை” [National Initiative for R&D Commercialization (NIRDC)] என்ற புதிய வேலைத்திட்டம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் கோமிக உடுகமசூரிய ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்துடன் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்துறை,பொருளாதாரம், சட்டம்,கலை,தேசிய மரபுரிமைகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

மனிதர்களின் தேவைகள் மாறாதவை எனவும், அந்த தேவைகளை பெற்றுக்கொள்ளும் முறை மாத்திரமே மாறும் என்றும், புத்தாக்கங்கள் ஊடாக அதற்கான மாதிரிகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக இலங்கையில் காணப்பட்ட கொள்கையினால், உலக சந்தையில் தனக்கான சரியான இடத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும், உலகில் தொழில்நுட்பத்துடன் கூடிய சந்தை மாதிரியில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை இன்னமும் தேயிலை, தேங்காய் மற்றும் ரப்பர் போன்ற பழைய பாரம்பரியங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பத்துடன் இணைந்து புத்தாக்கங்களை செய்த நிறுவனங்களே உலகை வெற்றிகொண்டுள்ளதாகவும், உலகில் முதல் 10 நிறுவனங்களில் 05 நிறுவனங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலான நிறுவனங்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தொழில்நுட்பத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பத் துறைக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தியை நோக்கி நகர்வதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு சமூக அவலங்களை ஒழிப்பதற்கானது மாத்திரமல்ல. மாறாக உரிமைகள் இன்றி மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்ற காரணத்தினால், புத்தாக்கங்கள் ஊடாக அந்த மக்களுக்கு பொருளாதார செயற்பாடுகள் மற்றும் புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்குவதற்காகவே கிராமிய வறுமை ஒழிப்பு அவசியப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கோமிக உடுகமசூரிய

இதுவரை இலங்கையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரதிபலன்கள் பொருளாதாரத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை உருவாக்குவதன் மூலம் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரசல் அபோன்சு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறை ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதானிகள், முதலீட்டாளர்கள், தொழில்

முயற்சியாளர்கள், கைதொழில் உரிமையாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025.01.08

வைரஸ் தொடர்பில் வெளியாகும் தகவல் பொய்யானது!

0

சீனாவில் எச்.எம்.பி.வி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்”  வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. சீனா மாத்திரமல்ல இலங்கை உட்பட உலகில் உள்ள பல நாடுகளிலும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகையால் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை பெறுவது பாதுகாப்பானது என இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார்.

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்றுக் குறித்து புதன்கிழமை (8) இலங்கை மருத்துவ சங்கத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமீபகாலமாக சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று காரணமாக, இலங்கை உட்பட பல உலக நாடுகள் மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்படவுள்ளதாக வீண் அச்சமடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் தகவல்கள் மக்களை இவ்வாறு பீதியில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையில் சீனாவில் எச்.எம்.பி.வி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்” வைரஸ் தொற்று மாத்திரமல்ல, மேலும் பல வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றன. ஆகையால் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.

சீனா மாத்திரமல்ல இலங்கை உட்பட உலகில் உள்ள பல நாடுகளிலும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகையால் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை பெறுவது பாதுகாப்பானது. குளிர்காலங்களில், அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவ்வாறான பல வைரஸ் தொற்றுக்களும் சுவாச நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. கோவிட் – 19 பரவிய காலத்தில் அது உலகுக்கு புதிய வைரஸ் வகையாக இருந்தது. எனினும் எச்.எம்.பி.வி புதிய வைரஸ் வகை அல்ல.

இது 2001 ஆம் ஆண்டு முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல நாடுகளிலும் மேற்படி வைரஸ் பரவலாக பரவியுள்ளது. இலங்கையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இவ்வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவ்வாண்டு கண்டியிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இரு தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இந்த வைரஸ் இலங்கையிலும் ஏனைய வைரஸ்களை போல குறிப்பிட்ட காலப்பகுதியில் மாத்திரம் பரவியுள்ளது.

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், இக்காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏனைய தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு பெறுமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுருத்தியுள்ளது. எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றாளர் ஒருவரிடம் வைரஸ் காய்ச்சலுக்கான தடிமன், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். சிறுவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றார்.

இலங்கையில் இஸ்ரேலியர்களின் வழிபாட்டுத் தலமா?

0

யூதர்கள் இலங்கையில் தங்கள்வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை  என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பௌத்தசாசன அமைச்சோ, அல்லது அதன் திணைக்களங்களோ இதற்கான அனுமதியை வழங்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வழிபாட்டுநிலையங்களிற்கு அனுமதி வழங்கவில்லை, இந்த விடயத்தில் நாங்கள் விரைவில் தலையிடுவோம், என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் அருகம் குடா விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம்,இது சுற்றுலாப்பயணிகள் குறித்த நாடொன்றின் கடப்பாடு,என அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் எம்பி ஜனாதிபதிக்கு எழுதிய அவசர கடிதம்!

0

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ரோஹிங்கியா ஏதிலிகளின் நல்வாழ்வை கருத்திற் கொண்டு, சர்வதேச மனிதாபிமான கொள்கைகளை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என கோரியுள்ளார். 

மியன்மாரில் நிலவும் கடுமையான வன்முறை காரணமாக அந்த மக்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அவர்களின் அவலநிலையை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் குறித்த ஏதிலிகளை மீள்குடியேற்றக் கூடிய பொருத்தமானதும் பாதுகாப்பதுமான மூன்றாவது நாட்டை அடையாளம் காண்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து இலங்கை ஒத்துழைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த ஏதிலிகள் மனித கடத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருக்கலாம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

அவர்கள் இலங்கையை அண்மித்த பிராந்தியத்தின் ஊடாக ஐரோப்பாவில் உள்ள தங்களது இலக்கை நோக்கி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான அலுவலகமும் தற்போது இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

இதேவேளை, விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா ஏதிலிகள் நேற்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த மியன்மார் ஏதிலிகள் 12 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்தநிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறையினரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திபெத் நிலநடுக்கத்தில் இதுவரை 126 பேர் பலி!

0

திபெத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 126 பேர் பலியாயினர்; 188 பேர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான நேபாளத்திலும், இது பெரிதும் உணரப்பட்டது.

சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் டிங்கிரி பகுதியில், நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில், 6.8 அளவுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீனவின் மண்டல பேரழிவு மீட்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், 7.1 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக, அமெரிக்க புவியியல் சேவை துறை தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த டிங்கிரி பகுதி, திபெத்தின் புனித இடமாக கருதப்படுகிறது. திபெத்திய புத்த மதத்தின் தலைவரான தலாய் லாமாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாக கருதப்படுகிறது.

உடனடி நிவாரணம்

இங்கு, 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதில், 126 பேர் உயிரிழந்ததாகவும், 188 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சீன அரசு கூறியுள்ளது.

நிலநடுக்கத்தில் அதிகமானோர் உயிரிழந்ததற்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி, சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, மீட்பு பணிகளில், 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில், 2015ல் 8.1 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது, திபெத்திலும் அதன் தாக்கம் இருந்தது. திபெத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர், 55 பேர் காயடைந்தனர்.

பாதிப்பில்லை

இந்நிலையில், திபெத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடான நேபாளத்திலும் உணரப்பட்டது. அங்கும் பல கட்டடங்கள் குலுங்கியதாகவும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கத்தின் அதிர்வு, நம் நாட்டின் பீஹார் மற்றும் டில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.

சீனாவில் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கங்கள்:

2008, மே — சிசுவான்; 7.9 ரிக்டர் அளவு; 90,000 பேர் பலி2010, ஏப்., – கின்காய்; 7.1 ரிக்டர் அளவு; 2,698 பேர் பலி2013 ஏப்., – சிசுவான்; 7 ரிக்டர் அளவு; 196 பேர் பலி2013, ஜூலை – கான்சு; 6.6 ரிக்டர் அளவு; 95 பேர் பலி2014, ஆக., – யூனான்; 6.1 ரிக்டர் அளவு; 617 பேர் பலி2022, செப்., – சிசுவான்; 6.8 ரிக்டர் அளவு; 93 பேர் பலி2023, டிச., – குயின்காய்; 6.2 ரிக்டர் அளவு, 126 பேர் பலி.