Home Blog Page 171

திறமையால் விளங்கும் தலைவர் – எஸ்.எம். ஹுஸைமத்!

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்தின் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

நோக்கமும், நெறிமுறையும், நேர்மையும் கொண்ட கல்வியாளர்கள் யாரென்றால், அவர்களில் முதன்மையாகத் தோன்றும் பெயர் எஸ்.எம். ஹுஸைமத் அவர்களது பெயரே. தனது கல்விச் சேவையை மனதார அர்ப்பணித்துக் கொண்டு, கல்வியின் ஒளியை மாணவர்களின் உள்ளங்களில் பரப்பும் உன்னத பணியில், இவர் ஒரு பரிசுத்தத் தோழனாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

தன்னலமின்றி, மாணவர்களின் வளர்ச்சி மற்றும் பாடசாலையின் மேம்பாட்டிற்காக இடைநடுவிலே நிற்கும் இவரது சேவை, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தில் நிலையான அடித்தளமாக அமைந்துள்ளது. கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், மரியாதை, சமூக பணி, ஒற்றுமை போன்ற தத்துவங்களையும் மாணவர்களுக்கு உறுதியாகப் போதிக்கிறார்.

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை நுட்பமாகத் தூரம் கொண்டு செல்லும் இந்தத் திறமைசாலி முதல்வர், ஆசிரியர் குழுவுடன் நல்ல ஒத்துழைப்புடன் வேலைசெய்வதோடு, பெற்றோர்களுடனும் ஒரு நல்ல புரிந்துணர்வை பேணுகிறார். இதன் விளைவாக, எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் இன்று சமூகத்தில் மதிப்பிடப்பட்ட கல்வி நிலையமாக உயர்ந்துள்ளது.

அவருடைய வழிகாட்டுதலால் இந்தப் பாடசாலை கல்வி, விளையாட்டு, கலாசார துறைகளில் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எம். ஹுஸைமத் அவர்களின் பொற்கரங்கள் பல புதியதையும், பயனுள்ளதையும் படைக்கும்.

இவ்வாறு மாணவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக கட்டியமைக்கச் செய்கிற எஸ்.எம். ஹுஸைமத் அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள் மற்றும் தொடர்ந்த வெற்றிகள் நிலைத்திருக்க வாழ்த்துகள்!

S.M. ரிஜாஜ் – MA
புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்.

இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயார்!

இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாஆசிஃப் தெரிவித்துள்ளார்.

எல்லையில் இந்தியா அத்துமீற வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட கவாஜா, அதற்கு பதில் அளிப்பதற்கான உத்திகளை பாகிஸ்தான் ஏற்கனவே வகுத்துள்ளதாகவும் கூறினார். எனினும் இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது எனவும், எந்தவொரு சூழ்நிலைக்கும் தாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், சட்டவிரோத குடியேறிகள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 50 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் அனைத்து ஆட்சியாளர்களும் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாக குறிப்பிட்ட கவாஜா, ஆனால் அவர்கள் யாரும் பாகிஸ்தானின் உதவியை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்றார்.

ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்கு, பயங்கரவாதத்தை தவிர ஆப்கானியர்கள் வேறு எதையும் தரவில்லை என்றும் கவாஜா விமர்சித்தார்.

ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு!

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கலைப் பிரிவு மாணவிகளுக்கு இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.

இன்றைய (18) தினம் சாய்ந்தமருது  கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஸ்மார்ட் வகுப்பறையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் கலை உயர் பிரிவு மாணவிகளுக்காக புவியியல் பாடத்தின் சிறப்பு இலவச கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி ரிப்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கமூட்டும் உரையினையும் ஆற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கான் கிரிக்கட் வீரர்கள் மூவர் பலி!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று ஒரு சோகமான செய்தியை பகிர்ந்துள்ளது. அந்த செய்தியில், பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் பதிவில், பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததாகவும், அதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளது.

இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்தில், உர்குன் மாவட்டத்தைச் 3 கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் உட்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், வீரர்கள் நட்பு ரீதியிலான போட்டியில் பாக்டிகா மாகாணத்திற்கு விளையாடசென்று உர்குனுக்கு வீடு திரும்பிய போது கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் 3 கிரிக்கெட் வீரர்களின் இழப்பை பெரிதாக மதிப்பதாக தெரிவித்துள்ள வாரியம், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்தாண்டு நவம்பரில் பாகிஸ்தானில் நடக்கவிருந்த பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

2025 ஒக்டோபர் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப.1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இளைஞர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க புதிய திட்டம்!

இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கான விசேட குழுவொன்றை நியமித்தது.

குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் கலந்துகொண்டார்.

அதற்கமைய, இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள், நிதியமைச்சு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இந்தக் குழு கூடி நாடளாவிய ரீதியில் இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் தயாரிப்பார்கள் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சு ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இளைஞர் தொழில்முனைவோருக்கான விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என இங்கு தெரிவித்தார். அத்துடன், இளைஞர் தொழில்முனைவோர் தெரிவுசெய்யப்படும்போது அதற்கான அளவுகோல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்முனைவு தொடர்பில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்டும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்முனைவுகள் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஹஷிஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்!

சூட்சுமமான முறையில் 500.011 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் மறைத்து கொண்டு சென்ற இருவர் விஷேட அதிரடிப்படையால் கோணஹென பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வென்னப்புவ நகரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொன்வேவ, நாகொல்லாகமவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், தெற்கு ரத்மலை, நாகொல்லாகமவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

ஹஷிஸ் போதைப்பொருள், முச்சக்கர வண்டி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்க சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திறக்கப்பட்ட தெதுரு ஓயா, ராஜாங்கனை வான்கதவுகள்!

ஜூட் சமந்த

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இன்று 18 ஆம் தேதி அதிகாலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட இந்த வான்கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 2800 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலும் 04 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 02 வான்கதவுகள் தலா 02 அடி திறக்கப்பட்டுள்ளன, மற்ற 02 வான்கதவுகள் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட இந்த வான்கதவுகளிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3010 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும்.

இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 தானியங்கி வான் கதவுகளும் தலா 04 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2384 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் சேரும் என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறுகிறது, எனவே அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

தவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனாமீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடந்த கிளர்ச்சியின்போது ஏற்பட்ட மரணங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.

தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம், “கடந்த ஆண்டு நடந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பின்னணியில் இருந்தவர் ஹசீனா. அவரது வழிகாட்டுதலின்கீழ் நடத்தப்பட்ட 1,400 கொலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டிக்கப்பட வேண்டுமானால், அவர் 1,400 மரண தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் அது மனிதரீதியாக சாத்தியமற்றது என்பதால், குறைந்தபட்சம் ஒரு மரண தண்டனையாவது அவசியம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அது அநீதியாக இருக்கும்” என்று என்று அவர் கூறியதாக தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் மரண தண்டனை விதிக்க வலியுறுத்தினார்.

மடகாஸ்கர் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!

மடகஸ்கார் நாட்டின் உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகவும், நாடாளுமன்றத்தின் கீழ் சபையைத் தவிர அனைத்து அரசியல் நிறுவனங்களையும் கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்டகாலமாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் மடகாஸ்கரில் நகர்ப்புற வறுமை ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் 75% குடியிருப்பாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது. போராட்டத்திற்கு பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெருகியது. இதனால் நாடு முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.

இதற்கிடையே, ராஜோலினாவின் 2009 ஆட்சிக் கவிழ்ப்பில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த ஓர் உயரடுக்கு இராணுவப் பிரிவான CAPSATவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியது. அதேபோல், மடகாஸ்கரின் தேசிய துணை ராணுவப் படையான ஜென்டர்மேரியும் போராட்டக்காரர்களுடன் இணைந்தது. இப்படி, CAPSAT மற்றும் ஜென்டர்மேரி இரண்டும் எதிர்ப்பாளர்களுடன் இணைந்ததால், மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவின் அதிகாரம் சிதைந்தது. அவர், நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றார்.

அதேநேரத்தில், ”தாம் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் மடகாஸ்கரை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” எனவும் அவர் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார். மறுபுறம், போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரப்பூர்வ ராஜினாமாவிற்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில்தான் CAPSAT அதிகாரிகள் முறையான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகவும், நாடாளுமன்றத்தின் கீழ் சபையைத் தவிர அனைத்து அரசியல் நிறுவனங்களையும் கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மடகாஸ்கரின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றம், ராண்ட்ரியானிரினாவை அதிபர் பதவி ஏற்க முறையாக அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, ஆண்ட்ரி ராஜோலினா ஆட்சி முற்றிலும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் ராண்ட்ரியானிரினா பதவியேற்கக்கூடும் என்று நெருக்கமான வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. இராணுவத் தலைமையிலான நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும், பின்னர் இடைக்கால அரசாங்கத்தின்கீழ் புதிய தேர்தல்களை நடத்தும் என்றும் ராண்ட்ரியானிரினா அறிவித்தார்.