Friday, September 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 173

கணவனை பழிவாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்

0

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் தாயொருவரை கைதுசெய்துள்ளதாக உடப்பு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடப்பு, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே, தமது ஒன்றரை வயதான பெண் குழந்தையை இறால் வளர்க்கப்படும் தொட்டியில் தள்ளியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென காவல்துறையினர் கூறுகின்றனர்.

குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் குறித்த பெண், எதுவும் தெரியாததைப் போல குழந்தையை தேடியுள்ளார்.

எவ்வாறாயினும்,  குழந்தை தள்ளிவிடப்பட்டதை அவதானித்த ​​அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றுமொரு தொழிலாளி, அதில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்றியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  அங்கிருந்து குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபரான பெண்ணுக்கு தமது கணவருடன் சில காலமாக குடும்பத் தகராறு நிலவிவந்தமை காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொபேகனே பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் குடும்ப தகராறு தொடர்பில் கொபேகனே காவல்நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இருவரும் குழந்தையுடன் தகராறின்றி வாழுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பெண் தனது கணவனுடனும் குழந்தையுடனும் கட்டகடுவ இறால் பண்ணையில் உள்ள தங்குமிடம் ஒன்றில் வசித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை பழிவாங்குவதற்காக குழந்தையை இறால் தொட்டியில் தள்ளியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேநபரான 20 வயதுடைய தாயை உடப்பு காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவரை புத்தளம் நீதிமன்றம்  முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

முதுமானி கற்கையை நிறைவுசெய்த எருக்கலம்பிட்டி மைந்தன்

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் (மாவட்ட வைத்தியசாலை) கணக்குப்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிபவருமான அமீர் ஹம்சா இன்ஸாத் தனது முதுமானி கற்கை நெறியை (MPA) பூர்த்தி செய்துள்ளார்.

பொது நிர்வாகத்தில் முதுநிலை (Masters in Public Administration – MPA) கற்கையை ஆங்கில மொழி மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நிறைவுசெய்த அமீர் ஹம்சா இன்ஸாத் 2004 ஆம் ஆண்டு தனது உயர்தர படிப்பை பூர்த்தி செய்தார்.

சாதாரண குடும்ப பின்னணயில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வணிகப்பிரிவில் கல்விகற்ற அமீர் ஹம்சா இன்ஸாத் 2010 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.

மன்னார் பிரதேச சபையில் பணியை ஆரம்பிப்பதற்கான தனது முதலாவது நியமனக்கடித்ததை 2011 நவம்பர் 14 ஆம் திகதி பெற்றுக்கொண்டு தனது கடமைகளை ஆரம்பித்தார்.

2017 ஜூலை 2 ஆம் திகதி வரை சுமார் ஐந்தரை வருடங்கள் மன்னார் பிரதேச சபையில் உயரிய சேவை வழங்கிய அமீர் ஹம்சா இன்ஸாத் மன்னார் பொது வைத்தியசாலைக்கு (மாவட்ட வைத்தியசாலை) மாற்றப்பட்டார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் (மாவட்ட வைத்தியசாலை) கணக்குப்பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இன்றுவரை கடமையாற்றிவரும் அவருக்கு ஊர் மக்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரது கல்வி எம் சமூகத்துக்கு பிரயோசனம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து அதிகரித்துவரும் ரூபாவின் பெறுமதி

0

அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது.

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க உயர்வினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் விற்பனைப்பெறுமதி 356.73 ரூபாவாகவும் சாதகமான மட்டத்தில் பதிவாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (03)  ரூபாவின் பெறுமதி கணிசமானளவினால் உயர்வடைந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 334.50 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 348.03 ரூபாவாகவும் நேற்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய செயற்படுவதில் நிதி அமைச்சிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினமாகும் என்று ஏற்கனவே திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நீதிமன்ற தீர்ப்பிற்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும். நிதி அமைச்சானாலும் , அரசாங்கமானாலும் , அரச நிறுவனங்களானாலும் , தனியார் நிறுவனமானாலும் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று அதற்கமைய செயற்பட வேண்டியது அவசியமாகும். அதற்கமைய நிதி அமைச்சு என்ற அடிப்படையில் நாம் பொறுப்புடன் செயற்படுவோம்.

எனவே நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை ஏற்க வேண்டியேற்படலாம். நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்படுவதில் நிதி அமைச்சிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றார்.

கல்பிட்டியில் ஒருதொகை கடத்தல் பொருட்கள் மீட்பு

0

கல்பிட்டி மொஹொத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடல் மார்க்கமாக கடத்தப்பட்டதாக நம்பப்படும் கடத்தல் பொருட்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழியாக கடத்தல் பொருட்கள் வருவதைத் தடுக்க, கடற்படை அடிக்கடி ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையை தீவின் கடலோர மற்றும் கடல் பகுதிகளில் நடத்துகிறது.

வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை ஸ்தாபனமான SLNS விஜயா கடந்த மார்ச் 03 ஆம் திகதி மொஹொத்துவாரம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவைகள் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான 02 டிங்கி படகுகளை கடற்கரையில் சோதனையிட்டதுடன், கடல் வழியாக கடத்தப்பட்டதாகக் கருதப்படும் கடத்தல் பொருள்கள் ஒரு தொகுதியையும் மீட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில், 15 கிலோ காய்ந்த கடல் அட்டை, 01 கிலோ ஏலக்காய், 14 கிலோ காய்ந்த முந்திரி, 10 கிலோ அரிசி, 248 கிலோ சர்க்கரை, 100 கிலோ கோதுமை மா, 03 கிலோ உலர் மீன், 270 பேக் கோப்பி, 680 அழகுசாதனப் பொருட்கள். மற்றும் 2930 சவற்கார கட்டிகள் உள்ளடங்குகிறன.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 02 டிங்கி படகுகள் மற்றும் கடத்தல் பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

முதுமானி கற்கையை நிறைவுசெய்த ஷரபிய்யா கல்லூரி அதிபர்

0

புத்தளம், மதவாக்குளம் ஷரபியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரும் தற்போதைய அதிபருமான அஷ் ஷேக் M.T.M. இம்ரான் (ஷரபி) மனித உரிமைகள் துறையில் முதுமானி (MHR) கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார்.

புத்தளம், மதவாக்குளம் ஷரபியா அரபுக் கல்லூரியின் கௌரவ அதிபர் அஷ் ஷேக் M.T.M. இம்ரான் (ஷரபி) (அஸ்ஹரி) அவர்கள் கொழும்பு பல்கலைகழகத்தில் மனித உரிமைகள் துறையில் முதுமானி (MHR) கற்கை நெறியை ஆங்கில மொழியில் நிறைவு செய்து நேற்று (02.03.2023) வியாழக்கிழமை BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றார்.

இவர் தற்போது அதிபராக கடமையாற்றும் ஷரபியா அரபுக் கல்லூரியில் 2008 ம் ஆண்டு மௌலவி கற்கையை நிறைவு செய்து பின்பு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய சட்டக் களை துறையில் இளமானி (BA) கற்கையை நிறைவு செய்தார்.

2014ம் ஆண்டு தான் கற்ற கல்லூரியில் விரிவுரையாளராக 3 வருடம் கடமையாற்றி 2018ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக தான் கற்ற ஷரபியா அரபுக் கலலூரியில் அதிபராக கடமையாற்றுவதுடன், அரசாங்க பாடாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரபுக் கலாசாலைகளுக்கு சென்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவரது கல்வி எம் சமூகத்துக்கு பிரயோசனம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எருக்கலம்பிட்டியில் விஷேட துஆ பிரார்த்தனை

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதித் தலைவரும் வன்னியின் மைந்தனுமான நூர்தீன் மஷூர் அவர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனை ஒன்று நேற்று மன்னர் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஸ்ரப், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதித் தலைவரும் வன்னியின் மைந்தனுமான நூர்தீன் மஷூர் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முரை மன்னார் பிரதேச சபை சிறுத்தோப்பு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்த மன்னார் பெரிய கரிசலைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் கரீம் ராசிக் ஆகியோர்களுக்கான துஆ பிரார்த்தனை மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன் தலைமையில் மன்னார் எருக்கலம்பிட்டி முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலில் நேற்று 26.02.2023 மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கலாநிதி ஹுனைஸ் பாரூக் அவர்கள் நினைவுப் பேருரையாற்றியதோடு, காட்டுபாவா ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் அத்ஹர் மௌலவியினால் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

பெரும்திரளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மற்றும் ஊர் மக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மர்ஹூம் நூர்தீன் மஷூர் அவர்களின் சேவைகள் நினைவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், சயீதியா அறபிக் கல்லுாரி மாணவர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி நுழைவாயல் திறந்து வைப்பு

0

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மைதான நுழைவாயில் பழைய மாணவர்களான IDEAL FREINDS 1974 BACH அமைப்பினரால் நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் (05.02.20223) ஞாயிற்றுக்கிழமை பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாளான நேற்றைய தினம் குறித்த மைதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவர்களான IDEAL FREINDS 1974 அமைப்பின் பூரண அனுசரணையுடன் 100 அடி நீளமான மதில் சுமார் 15 லட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டு IDEAL FREINDS 1974 அமைப்பின் தலைவர் ஐயூப் சபாஹி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கட்டுமான பணிகள் பல தடைகளையும் தாண்டி பாடசாலையின் நலன் கருதி நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

கட்சியின் உயர்பீட உறுப்பினராக எஸ்.எம். ரிஜாஜ் தெரிவு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (member of high command) புத்தள பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ். சதக்கத்துல்லாஹ் றிஜாஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கலுபோவில றொஸ்வூத் சிலோன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் ஜனாப் எஸ். சதக்கத்துல்லாஹ் றிஜாஜ் கட்சியின் உயர்பீட உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவராக ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, செயலாளராக Y.L.S. ஹமீட்  தெரிவுசெய்யப்பட்டார்.

கட்சியின் இன்றைய பேராளர் மாநாட்டில் 40 உயர்பீட உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தின் உயர்பீட உறுப்பினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்களும், கல்பிட்டி தொகுதியை பிரதிநிதித்துவப்பப்டுத்தி கல்பிட்டி பிராதேச உறுப்பினர் ஆஷிக் அவர்களும்  தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

புத்தளம் பி.சபை உறுப்பினரால் பொத்/பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு

0

புத்தளம் பி.சபை உறுப்பினர் ஜனாப் S.M. ரிஜாஜ் அவர்களினால்  பு/பொத்துவில்லு சிங்கள பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

பு/பொத்துவில்லு சிங்கள பாடசாலையில் நீண்டகால தேவையாக காணப்பட்ட, மாணவர்களுக்கான  துவிச்சக்கரவண்டி கூடாரம் அமைப்பது  தொடர்பான முறைப்பாடு  பாடசாலை அதிபர் திரு ADUS குமார அவர்களினால் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் S.M. ரிஜாஜ் அவர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனை அடுத்து மாணவர்களுக்கான  துவிச்சக்கரவண்டி கூடாரம் அமைப்பதற்காண வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு புத்தளம் பிரதேச சபை உறுப்பினரால் நிதி உதவி வழங்கப்பட்டது.

இன்றைய இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் S.M. ரிஜாஜ், பாடசாலை அதிபர் திரு ADUS குமார, வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் M S நாஸர் (Ret AO), மற்றும் பாடசாலை ஆசிரியல்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.