Home Blog Page 173

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு!

அடுத்த 24 மணித்தியாலத்துக்கு செல்லுபடியாகும் வகையில் நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று 2025 ஒக்டோபர் 16ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேலைவாய்ப்பு மோசடி செய்த வழக்கறிஞர் உற்பட மூவர் கைது!

ஜூட் சமந்த

இங்கிலாந்து, மால்டா, ஜப்பான் மற்றும் துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 மில்லியனுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாகக் கூறப்படும் மூன்று பேரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காவல் பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு வழக்கறிஞர் மற்றும் முன்னாள் மேயர் ஒருவரின் மகன் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து மற்றும் மால்டாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று பேரிடம் ரூ.94,10,000 மோசடி செய்த மொரட்டுவையைச் சேர்ந்த ஒருவர் மீது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காவல் பிரிவுக்கு புகார் வந்துள்ளது.

வழக்கறிஞரான அந்த நபர் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், அதன் உரிம பதிவு காலாவதியாகிவிட்டதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் மால்டாவில் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்கான எந்த உத்தரவையும் அந்த நபர் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேற்படி புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காவல் பிரிவுக்கு வந்தபோது சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று 15 ஆம் தேதி மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 தனிப்பட்ட பிணைகளில் விடுதலை செய்து, ஜனவரி 27 ஆம் தேதி வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதே நேரத்தில், துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி தலவாக்கலையைச் சேர்ந்த ஒருவரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜா-எல, கல்-எலிய பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளது.

முன்னாள் மேயரின் மகன் என்று கூறப்படும் சந்தேக நபர், தனது வீட்டிலும் அதைச் சுற்றியும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியதால், சிறப்பு முகவரைப் பயன்படுத்தி விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர், சந்தேக நபரின் வீடு சோதனை செய்யப்பட்டபோது, ​​அதை சோதனை செய்த அதிகாரிகள் வேலை விண்ணப்பங்கள் மற்றும் விசாக்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களையும் கைப்பற்றினர்.

ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நீர்கொழும்பில் உள்ள கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் அவரது வீட்டில் கைது செய்தனர்.

செல்லுபடியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதி இல்லாமல் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப பணம் வசூலித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களும் மஹர மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சிறுபான்மை அதிகார அரசியலில் ரவூப் ஹக்கீமின் அவசியம்!

சிறுபான்மை அதிகார அரசியலும் : ரவூப் ஹக்கீமின் அவசியமும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

இலங்கை அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவமும் அதன் தலைவர்களின் நிலைப்பாடும் எப்போதும் கூர்மையான விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அண்மைய அரசியல் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிலரது விமர்சனங்களையும் பலரது ஆதரவுக்குரல்களையும் ஒரு சேர எழுப்பியுள்ளன.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் சுட்டிக்காட்டும் போது, ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவதும் அரசாங்க ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இச்சூழலில், கடந்த கால நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு ஹக்கீமின் அரசியல் நிலைப்பாட்டின் நியாயத்தன்மையையும் எதிர்காலத் தேர்தல் களத்தில் அதன் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தையும் கண்டிப்பாக பார்க்கவேண்டி உள்ளது.

ஒரு பலமான ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கூட்டணிக்கு வெளியே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது அல்லது மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்துவது ஒரு அத்தியாவசிய கடமையாகும்.

ரவூப் ஹக்கீம் மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கும்போதெல்லாம் அவருக்கெதிராக ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகப் பதிலடி கொடுப்பது ஒரு வழக்கமான காட்சியாக மாறியுள்ளது.

இக்கண்டனங்கள் பெரும்பாலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பேசுவதை விட, ஹக்கீம் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதிலேயே கவனஞ்செலுத்துகின்றன.

இது, சிறுபான்மைச்சமூகத்தின் உரிமைகளுக்காக உண்மையாகக் குரல் கொடுப்பவர்களை மௌனிக்கச் செய்யும் அல்லது அவர்களைச் சமூகத்திலிருந்து பிரித்துக்காட்டும் ஆளுங்கட்சியின் தந்திரோபாயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு தலைவரைத் தனிமைப்படுத்துவதன் மூலம், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களின் தாக்கத்தைக் குறைக்கவும் தமது விசுவாசத்தை பெரும்பான்மை அரசியல் தலைமைக்கு நிரூபிக்கவும் முயல்கிறார்கள். இருப்பினும், இந்த அரசியல் நாடகம் வாக்காளர்கள் மத்தியில் உண்மையான தலைமை யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது.

ரவூப் ஹக்கீமின் விமர்சனங்களைப் புறக்கணிக்கும் ஆளுந்தரப்பினரும் சமூக வலைத்தள விமர்சகர்களும் ஒரு முக்கியமான அரசியல் நிதர்சனத்தை மறந்து விடுகிறார்கள். எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவும் தேவையற்றதென்று ஒரு போதும் கூற முடியாது.

கடந்த காலங்களில், தற்போதைய ஜனாதிபதி உட்பட பல முக்கிய தலைவர்கள் குறிப்பாக, அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான கட்சி, ரவூப் ஹக்கீம் அவர்களைத் தேடிச்சென்று சந்தித்து, ஆலோசனை கேட்டதும் ஆதரவு கோரியதும் பகிரங்கமான உண்மையாகும்.

இவ்வாறான ஆதரவுகளைக் கோருவதற்கு முன்பே தேர்தல் காலங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்திருந்தாலும் தேவை உணரப்படும் போது தேடிச்செல்வார்கள் என்பதற்கு இத்தகைய நிகழ்வுகளை உதாரணங்களாகப் பார்க்கலாம்.

இத்தகைய நிகழ்வுகள், ஹக்கீமின் அரசியல் செல்வாக்கையும் சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் அவரது திறனையும் ஆழமாக அங்கீகரிக்கின்றன.

அரசியல் என்பது நிரந்தர நண்பர்களோ அல்லது நிரந்தர எதிரிகளோ இல்லாததொரு களம். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பலதரப்பட்ட சக்திகளின் ஆதரவு தேவைப்படும். கடந்த காலத்தில் எதிர்த்தவர்கள், அதிகாரத்தின் தேவைக்காக ஆதரவு தேடி வந்ததற்கும் வருங்காலத்திலும் அவ்வாறு வரக்கூடியதற்கான வாய்ப்புகளுக்கும் இச்சந்திப்புகள் அசைக்க முடியாத ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

அண்மையில் நடைபெற்ற கூட்டுறவுச்சங்க தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு எந்த நிலையிலுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டின. சில இடங்களில் ஓர் ஆசனத்தைக் கூடப்பெற முடியாமல் போனமை இந்த அரசாங்கத்தின் பலவீனத்தையும் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேலும், பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகள் கூட உள்ளூராட்சித்தேர்தலில் குறைந்திருப்பது, அடுத்து வரவிருக்கும் தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் வெற்றிக்கு மிகப்பாரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையின் தேசியத் தேர்தல்களில் வெற்றி பெற 2019 மற்றும் 2020 தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டது போல, வெறும் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு எளிதில் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது.

ஒரு வலுவான தேசிய வெற்றிக்கு சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு அத்தியாவசியமான ஒன்றாகும். சிங்கள மக்களின் வாக்குகளில் வீழ்ச்சியைக்காணும் நிலையில், இந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்பட்டால், நிச்சயமாக அது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை நாடித்தான் ஆக வேண்டும்.

ரவூப் ஹக்கீமின் முக்கியத்துத்தையும் சிறுபான்மை வாக்குகளின் பலத்தை நன்கறிந்த அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கும் போது, தங்கள் விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு ரவூப் ஹக்கீமின் கதவுகளைத்தட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும்.

இது, ரவூப் ஹக்கீம் தனிப்பட்ட முறையில் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் அரசியல் களம் அவரை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக அங்கீகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.

உதாரணமாக, கடந்த காலங்களில் எதிர்த்த அரசியல்வாதிகள் கூட, தேர்தல் சமயத்தில் சிறுபான்மை வாக்கு வங்கியை தம் பக்கம் திருப்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நாடியுள்ளனர். அதேபோல், எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைத் தலைவர்கள் இருப்பார்கள்.

அனுரகுமார திசாநாயக்க போன்ற தலைவர்கள் தமது அரசியல் அறிவால், அனைத்துத்தரப்பினரின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே செயற்படுகிறார்கள்.

ஆனால், அவர்களை ஆதரிக்கும் சிலர் ஆழமான அரசியல் அறிவின்றி, தற்காலிக உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அதே தலைவர்கள் ஹக்கீம் அவர்களைச் சந்திக்கும் போது, தாம் முன்பு விமர்சித்ததற்காக ஏமாற்றமடையப் போகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

ரவூப் ஹக்கீம் மீதான விமர்சனங்கள், தற்காலிக அரசியல் இலாபத்திற்காகவும் அதிகாரத்தரப்பினரின் விசுவாசத்தை நிரூபிக்கவும் செய்யப்பட்டாலும் அவர் எழுப்பும் மக்கள் பிரச்சினைகள் உண்மையானவை.

இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், எந்த அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சியைத் தக்கவைக்கச் சிறுபான்மைக்கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை உணர முடியும். உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் இத்தேவையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எனவே, விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ரவூப் ஹக்கீம் அவர்களின் அரசியல் நகர்வு சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகளை ஒரு பேரம்பேசும் சக்தியாக நிலைநிறுத்துவதாகும். காலம் வரும் போது, இன்று அவரைக்குறை சொல்பவர்களும் புறக்கணிப்பவர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தவிர்க்க முடியாத தேவைக்காக, அவரது ஆதரவைத்தேடி நிற்பார்கள் என்பது அரசியலின் அடிப்படைக் கோட்பாடாகும்.

சிறுபான்மைத் தலைவர்களை விமர்சிப்பவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களின் நீண்டகால வியூகத்தையும் தேர்தல் காலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். சிறுபான்மை ஆதரவென்பது அதிகார அரசியலில் ஒரு அச்சாணி என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

இன்று கொண்டாடப்படும் உலக உணவு தினம்!

உலக உணவு தினம் இன்று!

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாள் உலகின் சுவையான உணவுகளை குறித்து பேசுவதற்காக மட்டுமில்லாமல், சாப்பிட வாய்ப்பில்லாத பசி, பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது.

பல நாடுகளில், குறிப்பாக உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளில், பட்டினி என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த சிக்கலை தீர்க்க அது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது.

மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட அரச பேருந்து!

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து

கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து நேற்று (15) பகல் 1.30 மணியளவில்
கிளிநொச்சி நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான
பேருந்து ஒன்று, ஊற்றுப்புலம் சந்தியை கடந்து மிகவும் ஆபத்தான நிலையில்
அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேருந்தின் இரண்டு
வாசல்களிலும் பயணிகள் தொங்கிய நிலையில் பயணம் செய்ததோடு பேருந்தின் பின் பகுதியிலும் நின்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இதே போன்று குறித்த வழியாக தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக குறித்த பேருந்தின் வழி அனுமதி சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தனியார் பேரூந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள்
பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

போதையில் போலீசாருடன் தகராரில் ஈடுபட்ட (SLPP) அமைப்பாளர்!

ஜூட் சமந்த

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) அமைப்பாளர் ஒருவர் மது அருந்திவிட்டு, ஆனமடுவ பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று 16 ஆம் தேதி அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

SLPP-யின் ஆனமடுவ அமைப்பாளரும், ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான உதார மதுசங்க என்ற நபரே இவ்வாறு தகராரில் ஈடுபட்ட நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று 16 ஆம் தேதி அதிகாலையில் வீதியில் அதிக சத்தம் எழுப்பிச் சென்ற மோட்டார் காரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். சோதனை செய்தபோது, ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரே அதை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

அப்போது, ​​சந்தேகத்திற்குரிய முன்னாள் தலைவரும் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கையும் களவுமாக சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்!

ஜூட் சமந்த

மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்த நபர் ஒருவரை சிலாபம் காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிலாபம் தபால் நிலையம் அருகே நேற்று 15 ஆம் தேதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரையே இவ்வாறு போலீசார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் அம்பகடவில பகுதியைச் சேர்ந்த ஒருவர், நோயாளி ஒருவரைப் பார்க்க சிலாபம் பொது மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவருடைய மோட்டார் சைக்கிள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

அவர் தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனையின் முன் நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளைத் திருடி அதை இயக்க முடியாமல் தள்ளிக்கொண்டு சென்றவேளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைக்கு உள்ளான போவல கிராமம்!

மத்திய மலை நாட்டின் கம்பளை நகரின் போவல கிராமம் இயற்கை விவசாயத்திற்கு பெயர்போன ஒரு கிராமமாகும். இக்கிராமம் இயற்கை நீரூற்றிலிருந்து வரும் நீரை நம்பி விவசாயம் பயிரிடப்பட்டு வந்தது.

குடியிருப்பாளர்களின் அன்றாட நீர் தேவைகள் ஊற்று நீரால் பூர்த்தி செய்யப்பட்டன. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலைமை ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக, போவால கிராமத்தில் நீரூற்றுகள் படிப்படியாக வறண்டு போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது விவசாய நடவடிக்கைகள் மற்றும் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊற்றுகள் வறண்டு போனதால், கிராம மக்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திடம் உதவி பெற வேண்டியிருந்தது, மேலும் நீண்ட காலமாக இயற்கை நீர் ஆதாரங்களை நம்பியிருந்த கிராம மக்கள், பணத்திற்கு தண்ணீரைப் பெற வேண்டியிருந்தது, இது அவர்களின் பொருளாதார நிலைமையையும் பாதித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் பேராதனை, கட்டம்பே மேலாளரிடம் நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், போவாலா கிராமப்புற மக்களுக்குத் தேவையான நீர் வசதிகளை வழங்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் முன்வந்திருந்தாலும், அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக, மலைப்பகுதி சூழலுக்கு ஏற்றவாறு தேவையான நீர் அழுத்தத்தை பராமரிப்பதிலும், விவசாய நிலங்களுக்கும், கிராம மக்களின் அன்றாட நுகர்வுக்கும் தேவையான தண்ணீரைப் பெறுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விவசாயத் துறையின் விதிமுறைகளின்படி, தரம் A என நியமிக்கப்பட்ட சேற்று நிலங்களை மீட்டெடுக்க அனுமதி இல்லை, மேலும் இந்த சேற்று நிலங்கள் நீர் பற்றாக்குறையால் பாழடைந்து வருவது போவல கிராமத்தின் பாரம்பரிய பொருளாதாரத்திற்கு பெரும் அடியாகும்.

கம்பளை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி திரு. லக்சிரியிடமிருந்து பெற்ற தகவலின்படி, 2013 முதல் 2022 வரை போவல கிராமத்தின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையைக் கருத்தில் கொள்ளும்போது மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியே காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இது ஒப்பீட்டளவில் மந்தமான வளர்ச்சியாகும், மேலும் 2022 க்குப் பிறகு மக்கள் தொகை வளர்ச்சியில் குறைவு ஏற்பட்டுள்ளது.

கிராமத்தின் பிரதான சாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஐந்து மர ஆலைகள் தற்போது இயங்கி வருகின்றன, இது சுற்றுச்சூழல், குறிப்பாக வன வளங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய போட்டியில் சாதித்த கல்பிட்டியை சேர்ந்த 5 வயது சிறுமி!

ஆங்கிலக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று சம்பியன் பட்டம் வென்றார் கல்பிட்டியின் சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம்

The American Federation of festivals – Srilanka வினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற 5 வயதிற்குற்பட்டவர்களுக்கான ஆங்கில கவிதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றார் கல்பிட்டியைச் சேர்ந்த சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கன் பெடரேசன் ஒப் பெஸ்டிவல்ஸ் நிறுவனத்தின் இலங்கைக் கிளை ஏற்பாடு செய்திருந்த ஆங்கில இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளில் 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆங்கிலக் கவிதைப் போட்டியில் சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம் பங்கேற்று மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியிலான போட்டியில் மீண்டும் முதலிடத்தை தன் வசப்படுத்திக் கொண்ட சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம், 2025 ஆம் ஆண்டின் 5 வயதிற்குட்படோருக்கான ஆங்கிலக் கவிதைப் போட்டியின் சம்பியன் பட்டத்தினை தனதாக்கினார்.

மேலும் இவ் வெற்றிக்காக பெறுமதிமிக்க சான்றிதழும், சம்பியன் கிண்ணமும் அவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் சட்டத்தரணி சப்ரி மொஹம்மட் சப்னி மொஹம்மடின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

புத்தளம் கல்வி வலய மாணவர்களை கெளரவித்த ACMC கல்விப்பிரிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு இன்று (15) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கெளரவிப்பு நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான MTM தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற சுமார் 158 மாணவர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த கல்வி வலயத்தில் அதிகப்படியாக புத்தளம் பாத்திமா கல்லூரியைச் சேர்ந்த 29 மாணவர்கள் 9A பெற்று நினைவுச்சின்னங்களை பெற்றுக்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக புத்தளம் மாநகர சபை முதல்வர் ரின்சாத் அஹமத், துணை முதல்வர் முஹம்மது நுஸ்கி, புத்தளம் பிரதேச சபை தவிசாளர் ரதிக சஞ்சீவ, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருடன் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.