Monday, November 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 174

இது இலாபம் ஈட்டும் சேவை நிறுவனமல்ல!

0

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் – சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனவரி முதலாம் திகதி, சுகாதார அமைச்சின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையும் எதிர்காலத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்படும் எனவும், புதிய யுகத்திற்கு பிரவேசிக்கும் நம்பிக்கையுடன் இந்நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்திற்கு பாரிய ஆணையை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அதிகாரிகள் மற்றும் பிரஜைகளின் பங்களிப்புடன் எதிர்வரும் ஐந்து வருடங்களில் இலங்கை பிரஜைகளின் நம்பிக்கையை நிறைவேற்றி நாட்டை மேம்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுகாதார சேவையை இலாபம் ஈட்டும் சேவையாக அரசாங்கம் கருதுவதில்லை, சுகாதாரம் என்பது பொது சேவையாகும். எனவே, இந்த சேவையை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு இயன்றனவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டார் தென்கொரிய ஜனாதிபதி!

0

ராணுவ ஆட்சியை அமல் செய்த விவகாரத்தில், கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தனர்.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இதற்கிடையே, ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.,03) தென் கொரியா புலன் ஆய்வு அதிகாரிகள், பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்று கோர்ட் கைது வாரன்ட் உத்தரவு செயல்படுத்தினர். யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்த போது அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

எனினும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது உத்தரவை செயல்படுத்தினர். இந்த கைது சட்ட விரோதமானது என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குமா?

0

இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன.

ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது.

செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

ஒரு புதிய ஆண்டு தொடங்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பல ஆண்டுகளாக தவறான ஆட்சியில் இருந்து மீள முயற்சிக்கும் நாட்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள்.

முந்தைய அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதியாக்கும் விதமாக 2.9 பில்லியன் டாலர் (2.31 பில்லியன் யூரோ) நிதித் தொகைப் பெறுவதற்காக, ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

கடுமையான சிக்கன நடவடிக்கைகள், வரி உயர்வு மற்றும் எரிசக்தி மானியங்களை குறைவாக வழங்குவதற்கு, ஐஎம்எஃப் ஒப்பந்தம் வழி வகுத்ததால் சர்ச்சைக்குரியதாக மாறியது. மேலும், இது பொதுமக்களின் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரசாரத்தின் போது திஸாநாயக்கவும் அவரது கூட்டணியும் ஐஎம்எஃப் உடன்படிக்கையின் சில பகுதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தனர்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.

“பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது, ஒரு சிறிய மாற்றம் கூட பேரழிவை ஏற்படுத்தும்…தவறு செய்வதற்கு எந்த வாய்ப்பையும் வழங்க முடியாது,” என்று திஸாநாயக்க கூறினார்.

“(ஐஎம்எஃப் கடனின்) விதிமுறைகள் நல்லதா அல்லது கெட்டதா, ஒப்பந்தம் நமக்கு சாதகமாக உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க இது நேரம் அல்ல. இந்தச் செயல்முறை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுத்தது, இதனை எங்களால் மீண்டும் தொடங்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

“அதிகமான வரிவிதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக மக்களுக்கு சில பொருளாதார நிவாரணங்களை வழங்குவதே திஸாநாயக்கவின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். கடன் மேலாண்மை மற்றொரு பெரிய சவாலாகும்,” என்று மூத்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட பிபிசியிடம் கூறினார்.

அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது உண்மையான போராட்டம் தொடங்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய அரசாங்கம் பற்றிய மக்களின் பார்வை மாறலாம்.

“மக்கள் அவருக்கு ஒரு மிகப்பெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அவரை அனுமதிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் உயங்கொட.

திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார். இரண்டு நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன.

இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம், குறிப்பாக சீன “ஆராய்ச்சி” கப்பல்கள் இந்தியாவின் தெற்கு முனைக்கு அருகில் உள்ள தீவின் துறைமுகங்களுக்கு வருகை தருவது இந்தியாவுக்குக் கவலை அளித்துள்ளது.

“இந்தியாவின் நலனுக்கு பாதகமான வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன்,” என்று நரேந்திர மோதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் திஸாநாயக்க கூறினார்.

இந்த உறுதிமொழியால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீனாவுக்கு பயணம் செய்யும்போது சீனா என்ன எதிர்பார்க்கிறது என்பதை திஸாநாயக்க அறிந்துகொள்வார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சட்டென்று மாறிய வானிலை!

0

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில், ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

0

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாய் வரை அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு டிசம்பர் மாதத்தின் பின்னர் குறைக்கப்படும் என்று வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கிராமிய அபிவிருத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை 7500 ரூபாவில் இல் இருந்து 10000 ரூபாய் வரை அதிகரிக்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நாட்களில் பிரதேச செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி தற்போது 47244 சிறுநீரக நோயாளர்கள் உள்ளனர என்று தரவுகள் பதிவாகியுள்ளன. அந்த தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தகவல் புதுப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்கள் குறித்து ஆராயவேண்டும்!

0

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்.

– பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு நேற்றை தினம் (31) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

தற்காலத்தில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் பிள்ளைகள் தொடர்ச்சியாக இருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விசேடமாக ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது அதிகரித்துள்ளது. எந்தவொரு சமூக, பொருளாதார காரணங்களை அடிப்படையாக கொண்டும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. குழந்தை பருவ வளர்ச்சியிலிருந்து 13 வருடகால பாடசாலை கல்வி உட்பட உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் பகிரங்கமாக காணப்பட வேண்டும். தனிநபர் மற்றும் சமூக பரிணாமத்தை ஏற்படுத்துவதை கல்வியின் பிரதான இலக்காகக்கொள்வது மிக முக்கியமாகும்.

மக்கள் கோரிய சமூக பரிணாமத்தை முன்னெடுப்பதற்கென பரிணாமமடைந்த கல்வி மாற்றத்தை மேற்கொள்வதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு புதிய உலகில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமது அரசு செயற்படுகிறது. சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் பிரஜையை உருவாக்குவதற்கென கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்கால முதலீடாகவே நாம் பார்க்கின்றோம். நீண்டகால பிரதிபலன்களைக் கொண்டுள்ள இந்த உணர்வுபூர்வமான வேலைத்திட்டங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்திற்கு விசேட பொறுப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுலா விதானபத்திரண, பிரதி பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை பிரிவு!

0

இலங்கை விமானப்படையின் உழைப்பு மற்றும் பங்களிப்புடன் கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று  சிகிச்சைப் பிரிவு மஹரகம அபெக்ஷா  வைத்தியசாலையில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட முதல் மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு இதுவாகும்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற திறப்பு விழாவில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால்,  கதிர்காமம் ஆலய நிதி உதவியுடன் 2023 ஆம் ஆண்டு மூன்று மாடிகளைக் கொண்ட சிகிச்சை வளாகம் நிர்மாணிப்பதற்காக அதன் பஸ்நாயக்க நிலமே முன்வந்தார்.

இத்திட்டத்திற்கு விமானப்படையினரின் உழைப்பின் காரணமாக மூன்று மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகம் நான்கு மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகமாக கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களைப் பயன்படுத்தி , புதிய எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை சிகிச்சைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்விற்கு இந்த திட்டம் நம்பிக்கையளித்து வழிவகுத்துள்ளது.

இந்த பிரிவின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை விமானப்படைக்கு பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படை தளபதி இதன்போது தமது இணக்கத்தை வௌியிட்டார்.

இன்றைய திடீர் காலநிலை மாற்றம்!

0

2025  ஜனவரி 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு2025 ஜனவரி 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அறிமுகமாகிறது புதிய அப், அச்சத்தில் வாகன ஓட்டுனர்கள்!

0

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி இன்று (01)  அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து உடனடியாக முறைப்பாடு தெரிவிக்கலாம்.

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-servicesக்குள் பிரவேசிப்பதன் மூலம் e-Traffic கையடக்கத் தொலைபேசி செயலியை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இலகுவாகப் பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக உங்களது முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுவதுடன், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயலியில் உள்ள Camera option icon அல்லது Vedio option iconஐ பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வீதிகளில் இடம்பெறும் பிற சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த கணக்கு மூலம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்களை விசாரணை செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்புவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கண்காணிக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு குறித்த முக்கிய அப்டேட்!

0
  • வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 தினங்கள் இடம்பெறும்
  • 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09ஆம் திகதி

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை 7 நாட்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.