ஆராச்சிகட்டுவ – நல்லதரண்கடுவ பகுதியில் நேற்று இரவே வேளையில் சந்தேகத்திற்கிடமான விமானம் ஒன்று பல முறை தாழ்வாக பறந்ததாக பிரதேச மக்கள் பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த விமானம் மிகவும் தாழ்வாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பறந்ததாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
விமானத்தின் சக்கரங்களை கண்களால் காண முடிந்ததாகவும், குறித்த விமானத்தில் இருந்து ஒருவகையான வெளிச்சம் வெளிப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள், குறித்த விமானம் ஏதேனும் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என நினைத்து பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்ததாக தெரிவித்தனர்.
விடயம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் பிரிவு, நேற்றைய தினம் ஏற்பட்ட மழையினால் கட்டுநாயக்க விமான நிலையம் நீரில் மூழ்கி இருந்ததாகவும், அதனால் குறித்த விமானம் தரை இறங்க முடியாமையால் சிறுது நேரம் வானில் பறந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதையல் தோண்டுவதற்கு எனக்கூறி ரூ.21,25,000 மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேரை இம்மாதம் 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிங்கிரிய – ஊராபொத்த பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் ஒரு தாய் மற்றும் ஒரு மகளும் அடங்குவர்.
கல்வல – ஆண்டிகம பகுதியைச் சேர்ந்த ராசதோரேஜ் ராஜேஸ்வரி (45) என்பவர் அளித்த புகாரின் பேரில், சந்தேக நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆண்டிகம – கஜுவத்த பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டை ஒரு பெண் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், வீடு அமைந்துள்ள நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக அந்தப் பெண் மறுநாள் தன்னிடம் கூறியதாகவும் புகார்தாரர் போலீசாரிடம் தெரிவித்தார். புதையலை மீட்டெடுக்க, வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தமான தங்க நகைகளை தோட்டத்தில் புதைக்க வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் யாராவது இறந்துவிடுவார்கள் என்று அந்தப் பெண் புகார்தாரரிடம் கூறியிருந்தார்.
அதன்படி, கடந்த மாதம் 4 ஆம் தேதி சந்தேக நபரிடம் ரூ.21,25,000 மதிப்புள்ள தங்க நகைகளை வெள்ளைத் துணியில் சுற்றி கொடுத்து புதைக்கப்பட்டுள்ளதுடன், புதையல் மீட்கப்படும் வரை புதைத்த தங்க நகைகளை எடுத்தால், வீட்டில் யாராவது இறந்துவிடுவார்கள் என்று புகார்தாரரிடம் கூறியிருந்தார். தங்க நகைகள் புதைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சந்தேக நபரும், அங்கிருந்த அவரது மகளும் வீட்டிலிருந்து காணாமல் போனதாக புகார்தாரர் கூறியியுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும், தங்க நகைகள் சுற்றப்பட்டிருந்த துணிப் பையைத் திறந்தபோது, ஒரு நெக்லஸ், ஒரு கயிறு தகடு மற்றும் இரண்டு போலி மோதிரங்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் புகார்தாரர் போலீசாரிடம் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில், முக்கிய சந்தேக நபர், அவரது மகள் மற்றும் மற்றொரு நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் திருடப்பட்ட தங்க நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எனினும், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 286 ரன்கள் முன்னிலையுடன் 448/5 ரன்கள் எடுத்தது.
அபாரமாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரத்யேக சாதனையை இந்திய அணி படைத்தது. பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா இன்று தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில், டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டதுபோலவே இதிலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களைத் தாரை வார்த்தது. இதனால் அந்த அணி 146 ரன்களுக்குச் சுருண்டது.
இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக அலிக் அதான்ஷ் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களையும் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தலவத்துகொடவில் ரூ.10 பில்லியன் செலவில் ஹேமாஸ் நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நாட்டின் சுகாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் ஹேமாஸ் நிறுவனம், நேற்று (03) தலவத்துகொடையில் தனது அதிநவீன, முழுமையான வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டபட்டது.
சுமார் 900 சுகாதார நிபுணர்களைப் பணியமர்த்தவும், 150 நோயாளர்களுக்கான படுக்கை விரிபுபடுத்தவும் கொண்டதாக வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவீன அவசர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும், மேலும் அடிக்கல் நாட்டு விழா “சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அர்த்தம்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஹேமாஸ் மிக உயர்ந்த சுகாதாரப் பராமரிப்புக்கான முதலீட்டைச் செய்துள்ளதுடன் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப அதன் சேவைகளை விரிவுபடுத்தவும், தேசிய சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்
நாட்டில் முதலீடு செய்வதில் வணிக சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது நிரூபிக்கிறது என்றும், இந்த மருத்துவமனை நாட்டில் முதல் முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்துதல், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், இருதயவியல், நரம்பியல், இரைப்பை குடல், எலும்பியல் போன்ற சிகிச்சை பிரிவு வசதிகள் உள்ளிட்ட சிறப்புப் பராமரிப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால அர்ப்பணிப்புக்காக ஹேமாஸ் குழுமம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் திட்டமிடல் பிரிவு மற்றும் நிதி பிரிவுகளுக்கு தனது நன்றியைத் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துக் கொண்டார்.
ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ் நிகழ்வில் உரையாற்றுகையில்; இலங்கையின் முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை பயிற்சி மையத்தை நிறுவவும், இது அடுத்த தலைமுறை மருத்துவர்களின் அறுவை சிகிச்சை திறன்களை மேலும் மேம்படுத்த உதவுகிறது என தெரிவித்தார்.
ஹேமாஸ் குழுமத்தின் சுகாதாரப் பிரிவின் தலைவர் முர்தாசா யூசுப்மலி, இந்தத் திட்டம் ஹேமாஸ் மருத்துவமனைகள் வலையமைப்பின் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, மற்றும் நமது நாட்டை ஒரு வளர்ந்து வரும் பிராந்திய சுகாதார மையமாக நிலைநிறுத்துகிறது என்று கூறினார்.
இலங்கையில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவாக்கப்பட்ட மருத்துவமனை வலையமைப்பு, துல்லியமான இதய சிகிச்சைக்கான அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, விரிவாக்கப்பட்ட இருதய பராமரிப்பு மற்றும் அவசர இருதய பராமரிப்பு வசதிகள், சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் துறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை, மற்றும் ஸ்கோலியோசிஸ் சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட விரிவான முதுகெலும்பு பராமரிப்பு, சிக்கலான தசைக்கூட்டு நிலைமைகள் மற்றும் பிரத்யேக எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவ அலகு, மற்றும் ரோபோ நுட்பங்களை உள்ளடக்கிய மேம்பட்ட சிறுநீரக மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல அதி நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துகிறது.
இந்நிகழ்வில் ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ், ஹேமாஸ் குழும சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் தலைவர் முர்தாசா எசுஃபாலி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சந்திரா, இயக்குநர் பொது மேலாளர் டாக்டர் பிரதீப் எவர்ட், மூத்த பிரமுகர்கள், ஆலோசகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹேமாஸ் குழும தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்விக்கு, பாக்கிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்க முடிவு
துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.
இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது. அதற்குப் பதிலளித்த நக்வி, ”கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்காக பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், நக்வியின் நிலைப்பாடு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் விளையாட்டுச் சமூகங்கள் முழுவதும் பாராட்டுகளைத் தூண்டியுள்ளது, மேலும் நாட்டின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான, ’ஷாஹீத் சுல்பிகர் அலி பூட்டோ எக்ஸலன்ஸ் தங்கப் பதக்கம்’ அவருக்கு வழங்கப்பட உள்ளது. ’தி நேஷன்’ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி , சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து சங்கங்களின் தலைவரான வழக்கறிஞர் குலாம் அப்பாஸ் ஜமால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
”இந்தியாவுடன் அரசியல் மற்றும் விளையாட்டு பதற்றங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் நக்வியின் நடவடிக்கைகள் தேசிய பெருமையை மீட்டெடுத்துள்ளன. இது கிரிக்கெட்டைப் பற்றியது மட்டுமல்ல. இது கண்ணியம், இறையாண்மை மற்றும் அழுத்தத்தின் கீழ் வளைந்து கொடுக்க மறுப்பது பற்றியது” என்று ஜமால் தெரிவித்துள்ளார். இதற்கான விழா, விரைவில் கராச்சியில் நடைபெற இருப்பதாகவும், அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமை விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
யுத்தத்திற்கு பின்னரான பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச பார்வை இலங்கை மீது காணப்பட வேண்டுமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும் என தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சம்பியன் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கிளிநொச்சி சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சீருடை அறிமுக நிகழ்வு அணி உரிமையாளர் ந.குகதீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ .சுமந்திரன் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்;
நாளை மறு தினம் ஆறாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான அறுபத்து ஒன்று தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
சென்ற வருடம் இணை அனுசரனை நாடுகள் கொண்டு வரும்போது இலங்கை அரசாங்கம் அதனை எதிர்த்தது. வாக்கெடுப்பு நேரத்தில் வாக்கெடுப்பை கோரவில்லை அது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த முறையும் இந்த எதிர்பார்ப்பினை இணை அனுசரனை நாடுகள் கொண்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்ட சில திருத்தங்களை கூட மேற்கொண்டுள்ளனர். சில வார்த்தை பிரயோகங்களினால் சில நாடுகள் எதிர்த்தால் அது நிறைவேற்றாமல் போனால் அது பாதகமாக அமையும். இந்த தீர்மானத்தால் என்ன பிரயோசனம் என்று பலர் எதிர்த்துள்ளனர்.
குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனால் யுத்தத்திற்கு பின்னரான வடக்கு கிழக்கின் பொறுப்பு கூறல் நல்லிணக்கம் தொடர்பான பார்வை இல்லாது போகும். குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரின் பார்வை தொடர்ந்து காணப்படும். தொடர்ச்சியாக குறித்த தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகளுக்கு நன்றி கூறுகின்றோம்.
உள்ளடக்கத்தில் சில எதிரான கருத்துக்கள் உள்ளன அதனை சுட்டிகாட்டியிருக்கின்றோம். இந்த முயற்சியை கொண்டுவரும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.
புத்தளம் புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை (03) மிக கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எல்.எம். றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைஸல், விஷேட அதிதியாக புத்தளம் வலய கல்விப் பணி மனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், கௌரவ அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். நௌஸாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி வட மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பிடித்து மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி இருந்தது.
அந்த வகையில் மன்னார் முருங்கன் பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
குறித்த போட்டியில் ஒவ்வொரு பாடசாலை சார்பாகவும் 5 மாணவர்கள் கலந்துகொண்டு போட்டியில் பங்கெடுத்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற மாகாண மட்ட அறிவுக்களஞ்சியப் போட்டியில் ஏனைய சகல பாடசாலைகளையும் வீழ்த்தி மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும்.
இதேவேளை குறித்த முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் அதான் கூறுதல் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எஸ்.சப்ராஸ் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அரபு தமிழ் போட்டியில் அதே பாடசாலையைச் சேர்ந்த எச்.அஸ்ரா என்ற மாணவியும் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் ஒரே பாடசாலை மூன்று போட்டிகளிலும் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
குறித்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற சகல வழிகளிலும் மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு ஊர் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துவரும் அதேவேளை மாணவர்களின் இச்சாதனைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டத்தில் யானைகள் மற்றும் மனித மோதலை தடுப்பது தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று 03.10.2025 புத்தளம் மாவட்ட செயலாளர் Y.I.M. சில்வா தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த மாவட்டத்தில் காட்டு யானை மற்றும் மனித மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை தடுக்கும் நோக்கில் குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்களில் இதுவரை சுமார் 300 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 150 இற்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
காட்டு யானைகளுக்கு தேவையான நீர் மற்றும் உணவு பற்றாக்குறையின் காரணமாகவே காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவதாகவும், அதனை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வருடத்திற்கு சுமார் 8 மாதங்கள் வரை காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த சுற்றாடல் பிரதி அமைச்சர், யானை மனித மோதல்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுப்பதே பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்க, காட்டுப்பகுதிக்குள் சுமார் 15 குளங்கள் புனரமைக்கப்பட இருப்பதாக புத்தளம் பிராந்திய வனத்துறை பணிப்பாளர் கமால் தென்னகோன் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் தென்னங்கன்றுகள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்த புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 370 கி.மீ தூரத்திற்கு காட்டு யானைகளுக்கான பாதுகாப்பான மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம், குருநாகல், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் காட்டு யானைகளின் அதிக அச்சறுத்தல் இருக்கும் முக்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்களை தடுக்கும் நோக்கில், வனத்துறைக்கு 100 கெப் ரக வண்டிகளும், 150 மோட்டார் சைக்கிள்களும் கொள்முதல் செய்ய அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிக மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 35 வயதுடைய, திருமணமான நபர் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் பிள்ளையை இரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த குழந்தை மிகுந்த வலியினால் துடித்துள்ளதை அடுத்து மேற்கொண்ட சோதனையின்போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வாழைத்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் வீட்டை ஊர் மக்கள் முற்றுகை இட்டனர்.
இதன்போது தப்பி ஓட முயற்சித்த குறித்த சந்தேக நபர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.