Sunday, March 15, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 189

கிளிநொச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.03.2025) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரால் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,

அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்த போதுமான நிதி வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமங்களை நோக்கிய நிதிப்பாய்ச்சலை மேற்கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது. மேலும் ஒதுக்கப்படும் நிதியில் ஒரு சதமேனும் திருப்பி அனுப்பப்படாமல் இந்த ஆண்டுக்குள்ளேயே செலவு செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக 9 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் 7 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 2 திட்டங்களுக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப்பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் 13 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கான நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை முன்வைத்த திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா 3 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்கியது.

பூநகரி, கரைச்சி, கண்டாவளை ஆகிய 3 பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் 2 வேறு திட்டங்களில் காற்றாலை மின்திட்டங்கள் முன்னெடுப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் நிலைபேறு சக்தி அதிகார சபையால் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றன. சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் கலந்துரையாடி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப்பெற்று அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

மீள்குடியேறியவர்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கான அனுமதி ஒருங்கிணைப்புக்குழுவால் வழங்கப்பட்டது. அதேவேளை, 0.6 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டுக்கு பயனாளிகள் விருப்பம் தெரிவிக்காமையால் அந்த நிதியை, தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டங்களுக்கு வழங்க அமைச்சுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இதன்போது மாவட்டச் செயலரால் தெரியப்படுத்தப்பட்டது.

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வீதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதி 5 மாவட்டங்களுக்கு சமனாக பகிரப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான தெரிவுகள் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதால், தற்போது தெரிவு செய்யப்படாத வீதிகள் அதில் உள்ளடக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஆண்டு கிடைக்கப்பெறும் நிதியை உரிய காலத்துக்குள் நிறைவு செய்தால் மேலதிக நிதியைக் கோருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் குளங்களின் திருத்தத்துக்கான முன்மொழிவுகளும், விவசாய வீதி திருத்தங்களுக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்புக்குழு அதற்கு அனுமதி வழங்கியது. அதேபோன்று அனர்த்த முகாமைத்துவ பிரிவின் செயற்றிட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவியல் நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீண்ட கருத்தாடல்கள் இடம்பெற்றன. இந்தத் திட்டத்தை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சமர்பிக்குமாறு கோரப்பட்டது.
அதன் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பிரேரணைகள் தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கல்மடுக்குளத்தை இரண்டு அடி உயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அதனை முன்னெடுப்பதற்கு வனவளத் திணைக்களத்தால் இடையூறு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதைப்போன்று வன்னேரிக்குளம், தேவன்கட்டுக்குளத்தை இணைத்து அபிவிருத்தி செய்வதன் மூலம், மேலதிகமாக 600 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை செய்ய முடியும். ஆனால் இந்த அபிவிருத்திப்பணியையும் முன்னெடுக்க வனவளத் திணைக்களம் தடையாக இருக்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவுசெய்யாவிட்டால், நிதி திரும்பும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு திட்டங்களையும் நிறைவேற்ற ஒருங்கிணைப்புக்குழு ஒப்புதல் வழங்கியதுடன், இது தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் கடந்த ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஒவ்வொரு விடயமாக ஆராயப்பட்டது. மதுபானசாலை அனுமதிகள், சட்டவிரோத மணல் அகழ்வு என்பன தொடர்பில் நீண்ட கருத்தாடல்கள் நடைபெற்றன.

இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஜெ.றஜீவன், க.இளங்குமரன், இ.அர்ச்சுனா ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னை உரம்!

0

இலங்கையில் தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னை உரம் வழங்கும் தொடக்க நிகழ்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்ய கூட்டமைப்பு, யுரல்கலி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்ச்சி திட்டத்தில், இலங்கையின் பலன் தரும் தேங்காய் உற்பத்தி செய்யும் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தேங்காய் உரத்தை வழங்கப்பட உள்ளது.

குறித்த நிகழ்வு வெல்லவாய பிரதேச செயலகத்தின் தென்னை உற்பத்தி திணைக்கள ஹந்தபானாகள தேங்காய் நாற்றுப்பண்ணையில் நடைபெற உள்ளது.

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி!

0

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்.

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 04 முதல் 06 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன், இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!

0

தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் 1ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், உணவு தரப்படுத்தல் மற்றும் தரம் தொடர்பில் நாட்டில் காணப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துதல், நுகர்வோருக்கு சத்தான மற்றும் போசாக்கான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிக்க உணவை வழங்குதல் குறித்த வர்த்தக சமூகத்தின் அணுகுமுறை மாற்றத்தை உருவாக்க “Clean Srilanka” திட்டத்தின் மூலம் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில பண்டார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

சிக்கிய ஹஷீஷ் போதைப்பொருள்!

0

சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பாணந்துறை பாலத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்தபோது, ​​ஒரு பொலித்தீன் பையுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 870 கிராம் ஹஷீஷ் மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இந்த போதைப்பொருட்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகக் தெரிவிக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைதான சந்தேக நபரை தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Click here to join our whatsApp group

கணக்கெடுப்பு அறிக்கை இன்று!

0

பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (28) வெளியிடப்பட உள்ளது. 

இந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியான பிறகு, பயிர் சேதத்தை ஏற்படுத்தும் இந்த விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பயிர் சேதத்தில் நேரடியாக ஈடுபடும் காட்டு விலங்குகளான குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு 15 ஆம் திகதி நடத்தப்பட்டது. 

மேலும் இதற்கு பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதற்கு பங்களித்தனர்.

வடக்கில் சிக்கிய கேரள கஞ்சா!

0
சுமார் 08 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகரொருவர் பரந்தன் பிதேசத்தில் கைது.

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருபது (20.150) கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொரி (01) மற்றும் ஒரு சந்தேக நபர் நேற்று 2025 மார்ச் 26 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.

அதன்படி, கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகேணி கடற்படை நிறுவனத்தால் பரந்தன் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதி வழியாகச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று சோதனை செய்யப்பட்டது.

அந்த நேரத்தில், ஒரு (01) சந்தேக நபரும் லொரியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இருபது (20.150) கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (01) லொரியும் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 08 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

யுனெஸ்கோ அறிவியல் கூட்டத்தில் இலங்கை பங்கேற்பு!

0

யுனெஸ்கோ அறிவியல் இராஜதந்திரம் குறித்த உலகளாவிய அமைச்சர்கள் உரையாடலில் இலங்கை சார்பாக அமைச்சர் கிருஷாந்த அபேசேன கலந்துகொண்டார்.

யுனெஸ்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல் இராஜதந்திரம் குறித்த உலகளாவிய அமைச்சர்கள் உரையாடல் கடந்த மார்ச் 25-26 தேதிகளில் பிரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்றது.

“வேகமாக மாறிவரும் உலகில் அறிவியல் இராஜதந்திரம்: ஆண்கள் மற்றும் பெண்களின் மனதில் அமைதியைக் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த உலகளாவிய உரையாடல் நடைபெற்றது.

தற்போதைய சிக்கலான உலகளாவிய சூழலில் புதுமையான அறிவியல் ராஜதந்திர கட்டமைப்புகள் மற்றும் அணுகுமுறைகளை ஆராய்ந்து மதிப்பிடுவதற்காக நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ராஜதந்திரிகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.

புவிசார் அரசியல் சிக்கல்களும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பின்னிப் பிணைந்துள்ளன, இது தொற்றுநோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அறிவியல் இராஜதந்திரத்தை ஒரு முக்கிய காரணியாக ஆக்குகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் மனித உரிமைகளை அடைய உதவுகின்றன என்பதை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.

நாடுகள் அறிவியல் முன்னேற்றத்தை ராஜதந்திரத்துடன் இணைப்பதால், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு கூட்டு அணுகுமுறை மிக முக்கியமானது.

அறிவியல் மற்றும் கல்வி மூலம் அமைதியைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் யுனெஸ்கோ, அறிவியல் ராஜதந்திரத்தில் தனது பங்கை விரிவுபடுத்துகிறது. உலகளாவிய அதிகாரப் போராட்டங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கையை எதிர்கொள்ளும் வகையில், உரையாடல் மற்றும் புரிதலை வளர்ப்பதற்கு புதுமையான மற்றும் விரிவான கட்டமைப்புகள் தேவை. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல, சமகால சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு புதிய கட்டமைப்பை நிறுவும் நோக்கத்துடன், யுனெஸ்கோ, அறிவியல் இராஜதந்திரம் குறித்த உலகளாவிய அமைச்சர்கள் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.

அறிவியல் இராஜதந்திர முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும், நிலையான ஒத்துழைப்புகளை உருவாக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும், அறிவியல் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது. மாநாட்டின் முடிவில், மேற்கண்ட கருப்பொருள் குறித்த ஒரு கூட்டு அமைச்சரவை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாமர சம்பத் எம்.பி கைது!

0

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். 

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (27) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான அவர் கைதானார். கைதானவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

ஏற்கனவே கடமையாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த டீ சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து. ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஜெ.ஏ சந்திரசேன இதற்கு முன்பு கழுத்துறை பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்