சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் மற்றும் உறுமய காணி உறுதித் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய அரசாங்கத் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை இந்த வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக நாட்டின் தேர்தல் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) இந்த திட்டங்களில் உள்ளார்ந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதுடன் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த குறித்த திட்டங்களின் தற்காலிக இடைநிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.
இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் நேற்று முதல் பங்களாதேஷில் காலவரையற்ற முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இணைய சேவைகளை முடக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது பின்னர் அந்த நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த பின்னணியில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ISRC SRI LANKA மற்றும் HRC SRI LANKA சமூக சேவை அமைப்பின் கீழ் இலவச கண்புரை (CATARACT) ஸ்கிரீனிங் முகாம், கடந்த 27 ஜூலை 2024 (சனிக்கிழமை) கொழும்பு டெமட்டகொட அல் ஹிஜ்ரா முஸ்லீம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ISRC சமூக சேவை அமைப்பின் பிரதம பணிப்பாளர் அஹமட் செய்யாப் அவர்களின் தலைமையில் காலை 9.30 தொடக்கம் மாலை 2.00 PM வரை நடைபெற்ற குறித்த கண் பரிசோதனை நிகழ்வில் இன மத வேறுபாட்டின்றி 1000 யிர்க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.
அத்துடன் கண் பரிசோதனை செய்த நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை (Cataract ) அதிகமாக இணங்காணப்பட்டதுடன் அவர்களுக்கான இலவச சத்திரசிகிச்சை எதிர்வரும் மாதங்களில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் அஹமட் செய்யாப் தெரிவித்தார்.
ISRC SRI LANKA மற்றும் HRC SRI LANKA சமூக சேவை அமைப்பின் கீழ் இலவச கண்புரை (CATARACT) ஸ்கிரீனிங் முகாம் கொழும்பின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விஷேட உயர்பீட கூட்டம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்த சமயம் கூட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகான் சில புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமையால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமை மற்றும் விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை போன்ற காரணங்களால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகானை உடனடியாக வெளியேறுமாறு பணித்தார்.
கட்சியின் தற்போதைய உயர்பீடக் கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில் யஹியாகான் பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டிய தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த முடிவை மிகவும் மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை உண்டாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் (Israel) கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ், ஜிஹாத் அமைப்புகள் மற்றும் ஈரான் (Iran) ஒன்றிணைந்து இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள தமது ஆதரவாளர்களை சந்தித்து இஸ்ரேலை தாக்குவதற்கான சிறந்த வழி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, ஈராக் ஆயுதக் குழுக்களின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஹிஸ்புல்லா, ஹூதி, இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளும் கலந்துரையாடலில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் படி, சிரியாவில் (Sryia) இருந்து ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் சிரிய பாலைவனங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கப் படையினர் தலையிடாவிட்டால், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என நாளைத் தீர்மானிக்கவுள்ளது.
அந்தக் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம், அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சித் தலைவர் ரவுஃப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது யாருக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களுடன் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் அரசாங்கத்தின் ஜனாதிபதியுடன் பெரும்பான்மை கட்சிகளின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது ஆதரவுகளை வெளிப்படுததியுள்ள நிலையில் சிறுபான்மை கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் வெளிவாராமல் இருப்பது கேள்விக்குரியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு கட்சியின் உறுப்பினர்கள் கட்டுப்படுவார்களா? இல்லையா? என்று பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாளயத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் ஜனாப் எஸ்.எம். ஹுசைமத் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இன்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பாடசாலைக்கான உள்ளக வீதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு வைபவமும் இன்றைய நிகழ்வில் இடம்பெற்றது.
சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று இப்பாடசாலைக்கு கண்டிப்பாக தேவை என பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களிடம் ஈ நியூஸ் பெஸ்ட் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்ததின் மூலமாக குறித்த ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றை பாடசாலைக்கு தருவதாக வாக்குறுதி அளித்தார்.
மேலும் பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு’’ எனும் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் உபகரணங்கள் பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஈ நியூஸ் பெஸ்ட் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இதேவேளை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் பாடசாலைக்கு மிக விரைவில் வழங்கப்படும் என பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜவ்ஸி, இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி, ஊடகசெயலாளர் எம்.எம்.நௌபர், பாடசாலை அபிவித்தி சங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.
ஈரான் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.
இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியா தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர் என்று ஈரானிய புரட்சிப் படைகள் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 இலட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (31) இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
“நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீற முடியாது. தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2022 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். அந்த ஆதரவு இல்லாவிட்டால் இன்று நாடு இந்த நிலையை அடைந்திருக்காது. எனவே அந்த தீர்மானத்தை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த இடத்தில் உள்ளனர். ஆனால் மக்களுக்காக இணைந்து பயணிக்க வேண்டும். சம்பிரதாய அரசியல் இனி செல்லுபடியாகாது. ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு வழியில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பியதர்ஷன யாப்பா, இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆஷு மாரசிங்க, முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மாகாண அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நூற்று ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe) வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (vajira abeywardena) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் நேற்று (29) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.
அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
இவ்வாறு சென்றவர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.