Thursday, November 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 196

சோகத்தில் முடிந்த திருமணம்: தீ விபத்தில் 100 பேர் பலி

0

ஈராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஈராக், நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், திருமண மண்டபத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கட்டடத்தின் கூரைகள் அங்காங்கே இடிந்து விழுந்ததில் தீ வேகமாக பரவியுள்ளது.

இதனால் மண்டபத்தைவிட்டு வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

முதல்கட்ட விசாரணையில் திருமண நிகழ்வின்போது வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உயர்நிலைக் குழு விசாரணைக்கு ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய ரீதியில் நாகவில்லு பாடசாலை மாணவி 2ஆம் இடம்

0

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட மாணவர் சாகித்திய விழாவில், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடத்தினை புத்தளத்தை சேர்ந்த முஹம்மத் ஜனீஸ் செய்னப் பெற்றுக்கொண்டுள்ளார்.

“எமது தேசத்தை விழிப்படைய செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கலாச்சார துணை குழுவினரால் 28 வது தடவையாக இந்த போட்டி நடாத்தப்பட்டிருந்து.

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் பல்கலைக்கழக பொறியியல் பீட ஈ.ஓ.ஈ. அரங்கில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் இம்மாணவி, நாகவில்லு  முஹம்மது ஜனீஸ் மற்றும் பாத்திமா சியாஸ்னா தம்பதிகளின் புதல்வியாவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த இம்மாணவியை எமது ஊடகமும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது

உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்?

0

பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 48 ஒருநாள் போட்டிகளில் 832 ரன்களும் 67 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு முக்கியமான ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். ஆசிய கோப்பை போட்டியிலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார் ஹசரங்கா.

இதற்கு முன்பாக லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவரும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவருமாக ஹசரங்கா அசத்தினார்.

தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் செப்.28ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி அணிக்கான கடைசி மாறுதல்களை அறிவிக்கலாம் என்பதால் இன்னும் 4 நாள்கள் இருக்கிறது.

ஏற்கனவே மதீஷா தீக்‌ஷானா ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஹசரங்காவின் இழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கனடா இந்தியா உறவில் விரிசல் – நடந்தது என்ன?

0

‘காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவு அமைப்பினரின் தொடா்பு உள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிரப்பட்டுவிட்டது. எனவே, மிகத் தீவிரமான இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர இந்தியா ஆக்கபூா்வமாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா்.

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ‘நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்புக்கு தொடா்பு உள்ளது’ என்று ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா். அதனைத் தொடா்ந்து, அந் நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறும் கனடா அரசு உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு (விசா) வழங்கலையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிகையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.

மேலும், ‘கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டு பாரபட்சமான அரசியல் உள்நோக்கமுடைய கருத்து’ என்று இந்தியா குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் விவகாரத்தில் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் இந்தியாவிடம் கனடா பகிரவில்லை’ என்று தெரிவித்தது.

இந்த நிலையில், கனடா வந்துள்ள உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பத்திரிகையாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவிடம், இது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த ட்ரூடோ, ‘நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவு அமைப்பினரின் தொடா்பு உள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிரப்பட்டுவிட்டது. எனவே, மிகத் தீவிரமான இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர இந்தியா ஆக்கபூா்வமாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கனடா விரும்புகிறது. இது மிக முக்கியமானது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது’ என்றாா்.

கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் – அமெரிக்கா:

‘நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:

கனடா பிரதமா் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் கனடா அதிகாரிகளுடன் அமெரிக்கா தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதோடு, புலனாய்விலும் ஒத்துழைப்பை அளித்து வருகிறது. கனடாவின் இந்த புலனாய்வு விசாரணை மிக முக்கியமானது என்பதோடு, இந்த விசாரணையில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற வேண்டியதும் முக்கியம். எனவே, இதற்கு காரணமானவா்கள் பொறுப்பேற்பது மிக அவசியம் என்று பிளிங்கன் கூறினாா்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு!

0

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று (20) அதன் தவிசாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஈட்டர் தாக்கதலை அடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலயே இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் அதன் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!

0

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை தொடர்களை நடத்திய இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.

மும்பை, ஆமதாபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ நிர்வாகம் வழங்கி வருகின்றது. கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் இலவசமாக விஐபி இருக்கையில் அமர்ந்து காணலாம்.

Image

முதலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

தொடர்ந்து, மேலும் பல பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது வாட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்

https://chat.whatsapp.com/Dbro3n5Nm3r3YPQXC7jPxn

 

மற்றுமொரு பரபரப்பு தகவல் வெளியிட்ட பா.உ டயனா கமகே

0

சுற்றுலாத்துறையை மேப்படுத்த “ நைட் லைப் “ மிக மிக அவசியம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்.

சுற்றுலாத்துறையை மேப்படுத்த “ நைட் லைப் “ அவசியம். இலங்கை வரும் சுற்றுலாப்பயணி பகலில் சீகிரிய மலைக்கு ஏறுவார்கள், ஶ்ரீ மஹா போதிக்கு செல்லவார்கள், இரவில் சீகிரிய மலைக்கு ஏற முடியாது, ஶ்ரீ மஹா போதிக்கு செல்ல முடியாது.

அப்படி என்றால் இரவு 6 மணிக்கே ஹோட்டல் அறையில் போய் தூங்க சொல்கிறீர்களா ? இரவு வேளையில் அவர்கள் செலவிட நாம் அதற்கான வழிமுறைகளை அமைத்துகொடுக்க வேண்டும். மதுபான சாலைகள் திறந்து இருக்க வேண்டும்.

ஏன் நாட்டில் யாருமே மது அருந்துவதில்லையா ? கஞ்சா அடிப்பதில்லையா ? விபச்சார தொழிலில் ஈடுபடுவதில்லையா ? பிறகு ஏன் நைட் லைப் மட்டும் வேண்டாம் என்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நைட் லைப்பை ஆரம்பித்தால் சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்ல நாட்டு மக்களை நைட் லைபுக்கு இழுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் – கிளிநொச்சி சிவில் பிரதிநிதிகள், ஜப்பான் தூதராலய அதிகாரியுடன் சந்திப்பு

0

புத்தளம் வாழ் யாழ் – கிளிநொச்சி சிவில் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான் தூதராலய உயர் அதிகாரிகளுடன் இன்று 19/09/2023 மாலை 4.00 மணியளவில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கான ஜப்பான் தூதராலயத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி Kana MORIWAKI அவர்களை சந்தித்து சமகால இடர் நிலைமைகளையும் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சில கோரிக்கைகளும்  முன்வைக்கப்பட்டன.

எதிர்காலத்தில் இது தொடர்பாக காத்திரமான முன்னெடுப்புக்களுக்கு தாம் உதவுவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதராலயத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது வடமாகாண இடம் பெயர் செயலகத்தின் முன்னால் ஆணையாளர் S. மதீன் ஆசிரியர், மெளலவி அப்துல் மலிக், B. நிலாம், M.H.பைறூஸ் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மகஜர் ஒன்றும்  கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் நூல் அறிமுக விழா

0

மறைந்த பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் எனும் தலைப்பில் கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையினால் வெளியிடப்பட்ட நூலின் அறிமுக விழா கடந்த வியாழக்கிழமை (07.09.2023) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் கொழும்பு தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கௌரவ பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறை பேராசிரியர் சுமதி சிவமோகன் கருத்தாளமிக்க நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.

ஓய்வு நிலை வரலாற்றுத்துறை பேராசிரியர் B. A. ஹுஸைன்மியா அவர்கள் ‘நான் கண்ட ஹஸ்புல்லாஹ்’ எனும் தலைப்பில் பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ்வுடனான தனது 45 வருட பன்முக உறவின் சுருக்கத்தை உணர்வு பூர்வமாக முன்வைத்தார்.

பேராசிரியர் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ என்ற இந்த நூலாக்க முயற்சி குறித்து கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவரும் ஒய்வுநிலை அரபு மொழித்துறை பேராசிரியருமான மெளலவி M. S. M. ஜலால்டீன் சிறப்புரை நிகழ்தினார்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தான் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நின்று சமூகப் பணியாற்றியவர். பல்வேறு தேசிய அமைப்புகளுடனும் இணைந்து தனது பணிகளை அவர் முன்னெடுத்திருக்கிறார். அந்த வகையில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வுக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் இடையிலான சமூகப் பணிசார் தொடர்பு பற்றி ஜமாஅத்தின் உதவிப் பொதுச் செயலாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பிரதம செயற்திட்ட அதிகாரியுமான M.H.M. ஹஸன் கருத்துரைத்தார்.

May be an image of 1 person and studying
அவ்வாறே பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தேசிய சூரா சபையுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சிரேஷ்ட ஆய்வாளராக கடமையாற்றுகின்ற, பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மாணவர் M. அஜிவடீன் கருத்துரை வழங்கினார்.

சகோதரர் M. L. M. தெளபீக் அவர்களால் நெறியாக்கம் செய்யப்பட்ட நூல் அறிமுக விழாவில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் பணியாற்றுகின்ற பல்வேறு சமூக தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஆண்களும் பெண்களுமாக பெரும் எண்ணிக்கையானோர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவின் போது முக்கிய பத்து பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

May be an image of 14 people, dais and text

இறுதியாக பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பம் சார்பாகவும் கொழும்பு வாழ் எருக்கலம்பிட்டி மற்றும் மன்னார் மாவட்ட முஸ்லிம் சமூகம் சார்பாகவும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் கௌரவ தலைவர் லுக்மான் சஹாப்டீன் அவர்களால் நிறைவுரையும் நன்றியுரையும் வழங்கப்பட்டு நூல் அறிமுக விழா நிறைவு செய்து வைக்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் டாப் 10 வீரர்கள்!

0

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான அணிகள் மற்றும் வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சாதனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பல முறை தங்களது அணிகளுக்காக வெற்றியையும் தேடித் தந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து முதல் 10 இடங்களில் இருப்பவர்களை பின்வருமாறு காணலாம்.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,278 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.95 ஆக உள்ளது.

அவரது ஸ்டிரைக் ரேட் 88.98 ஆகும். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 152. உலகக் கோப்பை போட்டிகளில் அதிகம் சதம் அடித்தவரும் இவரே. கடந்த 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக முறையே 523 ரன்கள் மற்றும் 673 ரன்கள் குவித்தார்.

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

உலகக் கோப்பை தொடரில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.86 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 79-க்கும் அதிகமாக உள்ளது.

அவர் 5 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 140*. இதனை அவர் இந்தியாவுக்கு எதிரான 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்தார்.

குமார் சங்ககாரா (இலங்கை)

உலகக் கோப்பை தொடரில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா 1,532 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.74 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86.55 ஆகும். அவர் 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124.

பிரையன் லாரா (மே.இ.தீவுகள்)

பிரையன் லாரா உலகக் கோப்பை தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1,225 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 42.24 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 116.

ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பை போட்டிகளில் அறிமுகமானார் டி வில்லியர்ஸ். அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,207 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 63.52 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 117-க்கும் அதிகமாக உள்ளது. அவரது சிறந்த ஸ்கோர் 162*. அவர் 4 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்)

ஆடுகளத்தில் களமிறங்கினால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பவர் கிறிஸ் கெயில். உலகக் கோப்பையில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,186 குவித்துள்ளார். அவரது சராசரி 35.93 ஆகும். ஸ்டிரைக் ரேட் 90.53 ஆக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 215. இதுவே உலகக் கோப்பை தொடரின் முதல் இரட்டை சதமாகும்.

சனத் ஜெயசூர்யா (இலங்கை)

உலகக் கோப்பையில் 38 போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூர்யா 1,165 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 34.26 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 90.66 ஆக உள்ளது. அவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 120.

ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)

உலகக் கோப்பையில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 1,148 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.92 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 74.40 ஆகும். அவர் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 128*.

ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

உலகக் கோப்பை வரலாற்றில் வங்கதேசம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,146 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.84 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 82-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124*. அவர் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

திலகரத்னே தில்ஷன் (இலங்கை)

உலகக் கோப்பை தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன் 1,112 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 52.95 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 92-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 161*. 2011 ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக தில்ஷன் உள்ளார். அவர் 2011 உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் 500 ரன்கள் எடுத்தார். அதில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும்.