கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
காங்கேசந்துறை ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்படும்.
முப்பது ஆண்டுகால யுத்தத்தால் அழிக்கப்பட்ட காங்கேசந்துறை ரயில் நிலையம் அதன் முன்னைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்க போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று (08) காங்கசந்துறை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த ரயில் பாதையை, காங்கசந்துறையில் கட்டப்பட்டு வரும் தொழில்துறை வலயம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இது பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக வசதிகளை வழங்கும் என்றும், ரயில் பாதையை புனரமைப்பதன் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ரயில் நிலையத்தில் இதுவரை பொருட்களைப் பெறுவதற்கும் சேமிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை என்றும் அவர் கூறினார். நேற்று தொடங்கிய சரக்கு போக்குவரத்து சேவைகள் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியையும் இலாபகரமான சேவையையும் வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
புத்தளம் கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு அண்மித்த புத்தளம் பெளத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் புத்தளம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கரம்பை உலுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாக கொண்ட 56 வயது மதிக்கத்தக்க முஹம்மது இஸ்மாயீல் ஜெமீல் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் உடல் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பின் குடியரசு கட்சிக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
டிரம்ப் நிர்வாகம் தன் தொழில்களுக்கு சாதகமாக இருக்கும் என எண்ணிய நிலையில், சமீபத்தில் புதிய சட்ட மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்தது. அதில் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகை ரத்து, அரசின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன.
தன் தொழில்களை பாதிக்கும் இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார். மேலும், டிரம்ப் அரசை நேரடியாக விமர்சிக்க துவங்கினார்.
பதிலுக்கு டிரம்பும், மஸ்க் நிறுவனத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், மானியங்களை நிறுத்துவேன் என மிரட்டல் விடுத்தார்.
அதன் பின், தன் சமூக வலைதள பக்கத்தில் ’80 சதவீத நடுநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா?’ என கருத்து கணிப்பு நடத்தினார்.
இதில், 56.30 லட்சம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் சரியாக 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், ‘மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி’ என கூறியவர், கட்சிக்கு ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரை சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்தார்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள நீல மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக் கிளியொன்று கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாகக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த கூண்டில் 30 பஞ்சவர்ணக் கிளிகள் இருந்த நிலையில், அதிலிருந்து ஒரு கிளி காணாமற்போயுள்ளதாகக் கடமையிலிருந்த கூண்டின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலையில் விலங்கொன்று காணாமற்போனால் உயர் அதிகாரியே காவல்துறையில் முறைப்பாடு செய்யவேண்டும்.
ஆனால் கிளி காணாமல் போனமை தொடர்பில் விலங்குகள் குறித்த அனுபவமற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அலவத்தகம தலைமையிலான மது வரிஅதிகாரிகள் இணைந்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இலங்கை கடற்படையினர், நேற்று (2025 ஜூன் 05) கல்பிட்டி மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகளை அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் குழுவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 64 பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பத்தொன்பதாயிரம் (19,000) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அனைவரும் நல்வாழ்வு வாழ இந்த உயரிய நாளில் பிரார்த்திப்போம்
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகையும் பெருமகிழ்சியும் அடைகின்றேன்.
புனித மிக்க இந்த தியாகத் திருநாளில் எம் அனைவர் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியட்டுமாக!
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இறைத் தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த தியாகத்தினை வரலாறு நெடுகிலும் நினைவு கூறப்படுகின்ற தினமாக இந்த ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.
ஏகத்துவம் ,இறையச்சம், இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு போன்ற உயரிய குணவியல்புகளை வருடாவருடம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கும் உலகத்திற்கும் போதித்துச் செல்கின்றது.
தினந்தினம் துயரமிகு வாழ்வை அநுபவிக்கும் பலஸ்தீன் மக்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்து இந்தப் புனித ஹஜ்ஜுப் பெருநாளை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஆரவாரமின்றி அனுஷ்டிக்கும் படி உங்களை நான் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
பொருளாதாரத்தில் வீழ்ந்த எம்தாய்நாடு தற்பொழுது அந்நிலையில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவடைந்து வருகிறது . இந்நிலை மேலும் முன்னேற்றமடைந்து விரைவில் நாட்டில் பொருளாதாரம் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளும் முற்று முழுதாக நீங்க ஏக இறைவனை இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி. கே.காதர் மஸ்தான் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள், நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.
வன்னி வாழ் மக்களுக்கான மனிதநேய நம்பிக்கை நிதியம், மெத்தா புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் இன்று வெள்ளிக்கிழமை (06.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதிலிருந்து மனிதநேயம் அமைப்பை தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். போருக்கு முன்னரும், போரின் பின்னரும் அந்த அமைப்பு இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்தார். அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கும் உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.
இந்த நிறுவனத்தின் தலைவி திருமதி கைலாசபிள்ளை அவர்கள் பல தடவை ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறுவார். நாங்கள் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்வதைவிட அவர்களை வலுப்படுத்தி சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யவேண்டும் எனக் குறிப்பிடுவார். அது மிகச் சரியானது. அந்த வழியில் பயணிப்பதை நான் வரவேற்கின்றேன், என்றார் ஆளுநர்.
புதுப்பித்தல் துறையில் தொழில் நிமித்தமாக ஒரே நாளில் 148 பேர் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் கீழ் உள்ள Renovation, General work, Ceramic Tiling, Plastering work ஆகியவற்றில் பணிபுரிய 148 இலங்கையர்கள் கடந்த 4 ஆம் திகதி இஸ்ரேல் சென்றுள்ளனர்.
தொழில் நிமித்தம் பயணிக்கும் 6வது குழுவாக இந்தக் குழு இஸ்ரேல் சென்றுள்ளதுடன், அவர்களை மூன்று பிரிவுகளின் கீழ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவுடன் மொத்தமாக 413 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலின் புதுப்பித்தல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.