Home Blog Page 216

எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம்!

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. 

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தனர். 

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்பினர்களின் ஆதரவையும் திரட்டி கையொப்பங்கள் பெறப்பட்டதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை, குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

இன்றைய இந்த விசேட ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன, நிசாம் காரியப்பர் மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலேயே பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் 6வது பிரிவில், “உறுப்பினர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பகிரங்க நம்பிக்கைக்கு இணங்க செயலாற்றுதல் முக்கியமானதாகும். 

அவர்களின் நடவடிக்கைள் எப்போதும் நேர்மையுடனும், ஒருமைப்பாட்டுடனும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது மீறப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்துடன் 9வது பிரிவின் படி, மனசாட்சிப்படி நடத்தல், மக்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பை சிறக்கும் வகையில் செயற்படல் என்பன மீறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாலும் அவருக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுவிக்கப்படுமா சீனாவின் BYD வாகனங்கள்!

இலங்கை சுங்கத்தால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 991, BYD வாகனங்களை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ஒப்புக்கொண்டார். 

வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் சிஜி நிறுவனம் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களின் வரிகளுக்கு இடையிலான வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட 3.6 பில்லியன் ரூபாய் தொகையை, ஒரு அரசு வங்கிக்கு உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவாதத்திற்குப் பொருந்தக்கூடிய வட்டியை மனுதாரர் நிறுவனம் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன. 

முன்வைக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்கு மனுதாரர் தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில், இந்த வாகனங்களை விடுவிப்பது தொடர்பாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் தனது உடன்பாட்டைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லு பாடசாலையில் போதை தடுப்பு செயலமர்வு!

பாடசாலை மாணவர்களிடையே போதை தடுப்பு மற்றும் போதை பாவனை தொடர்பான விஷேட செயலமர்வு ஒன்று புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் புத்தளம் பிரதேச சபை பிரதான முகாமையாளர் ஜனாப் A.M.A. அஸீர் தலைமையில் இன்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

சமூகத்தில் வேரூண்டி போயுள்ள போதை பாவனை தற்போது பாடசாலை மட்டத்திலும் பரவியுள்ளதை தடுக்கும் வகையில் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் பிரதேச சபையினால் ஏற்பாடு செயப்பட்டிருந்த குறித்த செயலமர்வு, சிரேஷ்ட வளவாளர் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 தொடக்கம் 11 வரையான மாணவ மாணவிகளுக்கு விஷேடமாக நடத்தப்பட்ட குறித்த செயலமர்வில், போதை பாவனை மற்றும் போதை தடுப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் போதைக்கு எதிராக மாணவர்களின் பங்களிப்பு தொடர்பிலும், அதே போல் ஆசிரியர்களின் முன்னுதாரணமான செயற்பாடுகள் தொடர்பிலும் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், நமது நாட்டில் பெண்கள் மத்தியில் பரவி வருகின்ற போதை பாவனை கலாச்சாரம் தொடர்பிலும் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.

சில முஸ்லீம் நாடுகளில் பெண்கள் மத்தியில் குறித்த போதை கலாச்சாரம் பரவியுள்ளதாகவும், அதே போல் தற்போது நமது நாட்டிலும் முஸ்லீம் பெண்கள் மத்தியில் குறித்த போதை கலாச்சாரத்தை பரப்பும் நடவடிக்கையில் பல நாசகார கும்பல்கள் பின்னால் இருந்து செயற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில், பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் ஷாஹீன் ரீஸா, லரீப் காசிம், புத்தளம் பிரதேச சபை அதிகாரிகள், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் M.S. நாசர், மற்றும் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களின் இணைப்பாளர் ஜனாப் ஷபீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

பின்தங்கிய பிரதேச மருத்துவமனையாகக் குறிப்பிடப்பட்ட, பெரும்பாலான மருத்துவமனைகளின் பெயர்களை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (7) வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக, 7 கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது. 

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் பின்தங்கிய பிரதேச மருத்துவமனையாகக் காணப்பட்டிருந்த மருத்துவமனைகளின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக நீக்கச் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 

திருகோணமலை மாவட்டம் உட்பட, நாடு முழுவதும் 134க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தக் காரணத்தால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிலையில், அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடொன்றை உருவாக்கிய 20 வயது இளைஞன்!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். 

அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதன் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளதாக, தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு அரசியல் அகாடமி!

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அரசியல் கல்வியறிவை வழங்குவதற்காக “அரசியல் அகாடமி” ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும் YoLoGo (Youth in Local Govrnance) திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று (05) மேல் மாகாண சபை பிரதான கேட்போர் கூடத்தில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் சேனாரத்ன, கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலீ பல்தாசர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முடிவெடுக்கும் பதவிகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் எதிர்காலத்தில் தலையிடும் என்றும், தீவு முழுவதும் நிறுவப்பட்ட இளைஞர் கழகங்களுக்குப் பொறுப்பான இளைஞர்களுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பிராந்திய மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடுகளுக்குப் பொறுப்பான இளைஞர்களுக்கு, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அணுகல் வழங்கப்படும் என்று “YoLoGo (உள்ளூர் ஆளுகையில் இளைஞர்கள்)” திட்டத்தின் மேற்கு மாகாண தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

1971 மற்றும் 1987-89 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இளைஞர் எழுச்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேராசிரியர் லக்ஷ்மன் ஜெயதிலக 1990 ஆம் ஆண்டு இளைஞர் ஆணைக்குழுவை அறிமுகப்படுத்தினார். பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர்களுக்கான (18-35) பரிந்துரைக்கப்பட்ட 40% ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் இளைஞர்களை அரச நிர்வாகத்தில் அதிகம் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,அது இதுவரை வெற்றிபெறவில்லை என்பதுடன், ஆளுநரின் ஆதரவின் கீழ் செயல்படுத்தப்படும் YoLoGo திட்டமானது சர்வதேச ஆதரவுடன் அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாகும் என்று ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி அருண பிரதீப் குமார ஆரம்ப விழாவில் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் உள்ள 49 நகர மற்றும் பிரதேச சபைகளிலிருந்தும் இளைஞர் கவுன்சிலர்களை பிரதிநிதிகளாக நியமிப்பதன் மூலம் ஒரு மாகாண இளைஞர் நிர்வாக வலையமைப்பு நிறுவப்படும் என்றும், அவர்களின் தலைமையில் இளைஞர் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

இந்த நிகழ்வில் கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துணை அமைச்சர் ருவான் செனரத், மேல் மாகாண ஆளுநர் ஹானீஸ் யூசுப் மற்றும் மேல் மாகாண ஆணையர் சாகரிகா ஜெயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடும் எதிர்ப்பை வெளியிட்ட ரவூப் ஹக்கீம் எம்.பி!

மட்டு.மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை
மீண்டும் முருங்கையேறும் வேதாளம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் காணிப்பிரச்சினையை இழுத்தடிக்கும் செயற்பாட்டிற்கு உடன்பட முடியாது. அது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையை நினைவூட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் சபை ஒத்திவைப்பு வேளையில் கொண்டு வரப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணி மற்றும் எல்லைப்பிரச்சினை தொடர்பான பிரேரணையை ஆதரித்து பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரையை வழிமொழிகின்றேன். அதேவேளை, இன்று அமைச்சரவையில் புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிப்பதாக தீர்மானம் எட்டப்பட்டிருப்பதான அறிவிப்பை அமைச்சர் வெளியிடவுள்ளதாக அறிகின்றேன்.

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது மாதிரியான செயற்பாடு என்பதுடன், திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் இவ்விவகாரத்தை அரசு இழுத்தடிக்க முயல்கின்றது. இது தான் அரசின் நிலைப்பாடென்றால், இதற்கு உடன்பட முடியாதென்பதை கூறிக்கொள்கின்றேன்.

அன்ரூ சில்வா, நாணயக்கார, பனம்பலன எனப்பல ஆணைக்குழுக்கள் அன்றிலிருந்து இன்று வரை நியமிக்கப்பட்டுள்ளன. இதுதான் அரசாங்கத்தினுடைய நிலைப்பாடா? ஏனென்றால் இதில் மிகத் தெளிவாக நாங்கள் எல்லோரும் காணுகின்ற ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத சில கிராம சேவகர் பிரிவுகளை ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு முறையிலும், மற்ற பிரதேச செயலகத்திற்கு இன்னுமொரு முறையிலும் நிர்வகிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அதிகாரிகள் அனுமதித்திருக்கிறார்கள் என்பது மிக மோசமான அநீதியாகும். இதன் பின்னணியில் தான் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் இப்பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்.

இது போன்றதொரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை 30.11.2021ம் ஆண்டு கடந்த அரசாங்க காலத்திலும் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஹாபிஸ் நஸீர் அஹமட் கொண்டு வந்த போது, இதே விவகாரத்தை நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

எனவே, இவவாறான குளறுபடிகளை அடிக்கடி ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் தொடர்ந்தும் இழுத்தடிப்புச்செய்யாமல் உண்மையில் செய்யப்பட வேண்டிய விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

கிராம சேவகர் பிரிவு எல்லைகளை இன விகிதாசார அடிப்படையில் அல்லாமல் நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்டு, மக்கள் தொகைக்கேற்ப மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப்பிரிவில் 31,565 பேரும், கோறளைப்பற்று வடக்கு, வாகரையில் 27,681 பேரும், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனையில் 35,126 பேரும், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடியில் 28,360 பேருமாக இருக்கின்ற நிலையில், கோறளைப்பற்று தெற்கு, கிரான் 620 சதுர கீமீ, கோறளைப்பற்று வடக்கு, வாகரை 589 சதுர கீமீ இருக்கத்தக்கதாக, கோறளைப்பற்று மத்தி, மேற்கு என்ற இரண்டு பிரதேசங்களும் வெறும் 8 சதுர கீமீ, 31 சதுர கிமீ இருக்கிறது. இது எந்த அடிப்படையில் நியாயமாக முடியும். இந்த அநியாயத்திற்குத்தான் மக்கள் நீதி கோரி நிற்கின்றனர். ஏனென்றால், இதில் மிகத்தெளிவான நாம் எல்லோரும் கண் முன்னே காண்கின்ற அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகள் சரிவர நடைமுறைக்கு வருவதற்கு நிருவாகங்கள் தடையாக இருக்கின்ற அதேநேரம், அரசாங்கங்களும் இது பற்றி பாரமுகமாக இருப்பதும் தொடர்ந்தும் இழுத்தடிக்கின்ற விவகாரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையாகவுள்ளதையிட்டு என்னுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன் எனத்தெரிவித்தார்.

சஷீந்திர ராஜபக்ஷ அதிரடியாக கைது!

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ‘AquaLivelihood’ திட்டம்!

இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பம்.

தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய “AquaLivelihood” திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து நேற்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

“நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தியின் மூலம் சார்க் பிராந்தியத்தில் உள்ள சிறு அளவு மீன் வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற மக்களின் போசாக்குப் பாதுகாப்பை உறுதிசெய்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக 3.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள 120,000க்கும் அதிகமான கிராமியக் குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ், இலங்கையில் சுமார் 11,000 கிராமிய மீன் வளர்ப்புக் குடும்பங்கள் நேரடிப் பயனடையவுள்ளதுடன், இதற்காக 586,224 அமெரிக்க டொலர்கள் (சுமார் 175 மில்லியன் இலங்கை ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் பிரதான தேசிய நிறுவனமாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) செயற்படுகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்:

“இன்று நாம் ஆரம்பிப்பது வெறுமனே ஒரு திட்டத்தை அல்ல, ஒரு பயணத்தை. ஆயிரக்கணக்கான சிறிய மீன் வளர்ப்பாளர்களுக்கு உதவும், கிராமப்புறக் குடும்பங்களின் போசாக்கையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும், நமது பிராந்தியத்தில் உறுதியான பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பயணம். இத்திட்டத்தின் பயனாளிகளில் குறைந்தபட்சம் 30% பெண்களாக இருப்பது இதன் மிக அழகான அம்சமாகும். இது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல, அபிவிருத்தியின் ஒவ்வொரு படியிலும் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் என்ற செய்தியாகும். பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சார்க் அபிவிருத்தி நிதியத்தின் மூலம் நாடுகள் ஒன்றிணைந்து, அறிவைப் பகிர்ந்துகொண்டு செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்தத் திட்டம் இலங்கைக்கும் முழுமையான தெற்காசியாவிற்கும் ஒரு பெரும் வெற்றியைத் தரும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.”

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள்:

“இந்தத் திட்டத்தின் மூலம், ஆய்வுக்கும் உற்பத்தியாளரின் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இலங்கையில் நிலவும் மீன் குஞ்சுகளின் பற்றாக்குறைக்குத் தீர்வாக, சமூகத்தால் நிர்வகிக்கப்படும் பரவலாக்கப்பட்ட இனப்பெருக்கப் பிரிவுகளை நிறுவுவதும் இதன் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். பெண்களை உதவியாளர்களாக மட்டுமன்றி, தீர்மானம் எடுப்பவர்களாகவும், உற்பத்தியாளர்களாகவும், தொழில் முயற்சியாளர்களாகவும் வலுவூட்டுவதன் மூலம், நாம் குடும்பங்களையும் சமூகங்களையும் கட்டியெழுப்ப முடியும். இந்தத் திட்டம், அரசாங்கம், ஆய்வாளர்கள், தனியார் துறை மற்றும் விவசாய சமூகத்தை ஒன்றிணைத்த, பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய மாதிரியாகும். இதுவே இத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.”

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், கித்சிறி தர்மப்பிரிய அவர்கள்:

“நமது நாடுகளில் நன்னீர் மீன்வளர்ப்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான தரமான மீன் குஞ்சுகளின் தட்டுப்பாடு மற்றும் மீன் தீவனத்திற்கான அதிக செலவு ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதே இதன் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலான மீன் தீவனத்தை உற்பத்தி செய்யவும், இலங்கையின் எட்டு மாவட்டங்களில் மீன் குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைக்கு இன்னும் தேவைப்படும் சுமார் 300,000 மெட்ரிக் தொன் மீன் அறுவடையை கடலில் இருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு நன்னீர் மீன்வளர்ப்பை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் 800-900 குடும்பங்கள் நேரடியாக வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். அத்தோடு 30,000க்கும் அதிகமானோருக்கு மறைமுகப் நன்மைகளும் கிடைக்கும்.”

சுங்கத்தின் கட்டுப்பாட்டில் 997 BYD வாகனங்கள்!

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD மின்சார கார்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக சமர்ப்பணங்களை உறுதி செய்வதற்காக இந்த மாதம் 7 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் அழைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜமீல், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனங்களை தடுத்து வைக்க சுங்கம் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

குறித்த வாகனங்களை வங்கி பிணைப்பத்திரங்களுக்கு அமைய சுங்கத்திற்கு விடுவிக்க முடியும் என அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார். 

இதன்போது இலங்கை சுங்கம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன சமர்ப்பணங்களை முன்வைத்து, இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 997 வாகனங்கள் சுங்கத்தின் பொறுப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அந்த வாகனங்களின் மோட்டார் திறன் 100 கிலோவாட்டா? அல்லது 150 கிலோவாட்டா? என்பதை முடிவு செய்ய மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரண்டு நிபுணத்துவமிக்க பேராசிரியர்கள் மற்றும் BYD-யின் இரண்டு பொறியாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அந்த அறிக்கை கிடைக்கும் வரை குறித்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வரிகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை சுங்க பணிப்பாளர் கணக்கில் வைப்புத்தொகையாக வைப்பு செய்தால், அந்த வாகனங்களில் 06 வாகனங்களை விசாரணைக்காகத் தக்கவைத்துக் கொண்டு, மீதமுள்ள வாகனங்களை விடுவிக்கலாம் என்றும் பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். 

இந்த சமர்ப்பணங்களின் பின்னர் குறித்த மனுவை இந்த மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் அமர்வு, இந்த முன்மொழிவு குறித்து மனுதார் தரப்பின் நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர். 

இந்த மனு, ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.