Home Blog Page 217

தேசபந்து குறித்த தீர்மானம் நிறைவேற்றம்!

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார். 

இதன்படி குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் இந்த பதவி நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். 

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை பரிந்துரைப்பார்.

நாட்டுக்கு முன்னுதாரணமாக மாறிய முரசுமோட்டை கல்லூரி!

பலபோகங்களாக பயிர்ச்செய்கைக்கு உட்படாது காணப்பட்ட கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரிக்கு சொந்தமான வயலில் நடுகை செய்யப்பட்ட வயலின் அறுவடை விழா பாடசாலையின் முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இயந்திரம் மூலம் நாற்று நடுகை செய்யப்பட்ட வயலின் குறித்த அறுவடை நிகழ்வில் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

கல்லூரிக்கு சொந்தமான வயலில் நெல் நடுகை செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்படும் இந்நிகழ்வு முழு நாட்டுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நடவடிக்கையானது மாணவர்கள் மத்தியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வேரூண்டச்செய்வதாகவும், நாட்டில் நெல் உற்பத்தியில் தண்நிறைவான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், புலிங்க தேவன் கமக்காரர் அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த வயல் நாற்று நடுகை முதல் அறுவடை வரையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் முரசுமோட்டை புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினர் அனுசரனையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசுமை புரட்சியின் முன்னோடியாக மாறிய சவூதி அராபியா!

பசுமை புரட்சியின் முன்னோடி; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சவூதி அரேபியாவின் மிகப்பெரும் முன்னேற்றம்.!

எஸ். சினீஸ் கான்

பசுமை என்பது ஒரு தேசத்தின் எதிர்காலம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டும் நாட்டாக இன்று சவூதி அரேபியா உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. Vision 2030 என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ், சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் Saudi Green Initiative (SGI) சுற்றுச்சூழல் திட்டம் எதிர்காலத்தில் அதீக நன்மைகளை பெற்றுத்தரக்கூடியதாகும்.

இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 151 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் நட்டுப் பசுமையை பரப்பியுள்ளன. இது வெறும் மரநடுகை அல்ல. இது ஒரு உயிர்மூச்சாக, பசுமை எதிர்காலத்தின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஒரு வறண்ட நிலத்தில் இந்த அளவுக்கான பசுமை வளர்ப்பு என்பது சவூதி அரேபியாவின் அதீத நம்பிக்கையையும், தலைமைத்துவ திறமையையும் காட்டும் நேரடி சான்றாகும்.

மேலும், 500,000 ஹெக்டேர் நிலம் மீண்டும் உயிர்த்தெழச் செய்யப்பட்டுள்ளதுடன், காலநிலை மாற்றம், மணல் மற்றும் தூசி புயல்களுக்கு எதிரான 5 முக்கிய சுற்றுச்சூழல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கில் முதல் முறையாகவே நடைபெறுகின்ற பெரும் நிகழ்வாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் மிகவும் வியக்கத்தக்கது:

  • பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு 4.5% லிருந்து 18.1% ஆக உயர்வு.
  • தேசிய பூங்காக்கள் 18 லிருந்து 500 ஆக அதிகரிப்பு.
  • 2020 முதல் இன்று வரை 40,000+ சுற்றுச்சூழல் அனுமதிகள்.
  • கடல் சூழலுக்காக 8,000+ உயிரினங்கள் மீண்டும் அறிமுகம்

இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மீதான உண்மையான அக்கறையின் வெளிப்பாடுகளாக உள்ளன. எண்ணெய் வளத்தில் மட்டுமே நம்பியிருந்த ஒரு நாட்டின் இப்படி ஒரு பசுமை மாற்றம், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக அமைகிறது.

இளவரசர் முகம்மத் பின் சல்மானின் தலைமை வழிகாட்டுதலின் கீழ், சவூதி அரேபியா ஒரு புதிய பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை திட்டங்கள், மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்நாட்டின் முயற்சிகள், வருங்கால தலைமுறைகளுக்கே ஒரு பரிசாக அமையும்.

மெய்நிகர் நகரமாக மாறவுள்ள கண்டி!

மெய்நிகர் நகரத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் (Virtual city creation project) முன்னோடிக் கருத்திட்டமாக யுனெஸ்கோ உலக மரபுரிமையாக இருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை உள்ளிட்ட கண்டி நகரம் Virtual city in Kandy எனும் பெயரில் நிர்மாணிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தின் முதலாவது பகுதியாக கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுலாத்துறை ஆற்றல் வளங்களுடன் கூடிய இடங்களாக முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அந்த வகையில் 58 இடங்கள் முதல் கட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டத்தின் இரண்டாவது பகுதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகை வளாகம் மற்றும் அதனை அண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுமான 20 இடங்களை தொழிநுட்ப ரீதியாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தி நிறுவனங்களுக்குள்ள ஆற்றல் வளங்கள் மற்றும் துரித இயலுமைகள் தொடர்பாகவும், குறித்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முற்கூட்டிய உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் குறித்த கருமங்களுக்காக ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய Clean Srilanka கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் மூலம் Virtual city in Kandy கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றுமொரு ஆப்பு!

    பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி எல்லைகளைத் திருத்தம் செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

    பாராளுமன்ற உயர்ந்தபட்ச உறுப்பினர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய்கள் முறையை காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் கூட்டுக் காப்புறுதி நடைமுறைப்படுத்துவதற்கு 2023.05.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

    அதற்கமைய, கடந்த காலப்பகுதியில் குறித்த காப்புறுதிக் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்ற போது ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற ரூபாய் 1,000,000/- காப்புறுதிக் காப்பீட்டு எல்லையை ரூபாய் 250,000/- ஆகக் குறைப்பதற்கு முன்மொழிந்துள்ளார். 

    அதற்கமைய, 2025.10.19 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250,000/- ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    காசாவை முழுமையாக கைப்பற்ற உத்தரவு!

    காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது-

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ்  வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன.

    இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு உத்தரவிடுவார் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.

    தீர்மாமொன்றை எடுத்துள்ளேன், அதிலிருந்து பின்வாங்க முடியாது,காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கப்போகின்றோம்,முப்படைகளின் பிரதானி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் பதவி விலகவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார் என அவருக்கு நெருக்கமான சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலின் வைநெட் செய்தி வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேலின் இராணுவஅதிகாரிகள் தரைநடவடிக்கையை விஸ்தரிப்பதை விரும்பவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தன.

    ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரை நடவடிக்கையில் ஈடுபடுவது பணயக்கைதிகளிற்கும் படையினருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என  இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

    பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கையை விஸ்தரிக்கவிரும்புகின்றார் என வெளியான தகவல்களை இஸ்ரேலிய படையினரின் தாய்மார் கண்டித்துள்ளனர்.

    செம்மணி புதைகுழியிலிருந்து 54 சான்றுப் பொருட்கள்!

    யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.

    இதன்போது பொதுமக்கள் குறித்த சான்றுப் பொருட்களைப் பார்வையிட்டு அது பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ, நீதிமன்றுக்கோ குறிப்பிட முடியும்.

    இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப்பொருள்களைப் பார்வையிடுவது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி கட்டளை ஒன்றை வெளியிட்டிருந்தது.

    அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    1.இது ஒரு நீதிமன்றச் செயல்முறை என்பதனால், அந்நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் கண்ணியத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

    2. காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

    3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

    4. இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

    5. பங்குபற்றும் நபர்கள், மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

    6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

    7. பங்குபற்றும் நபர்கள், காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.

    8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    மருமக்களை காப்பாற்றிய மாமா மரணம்!

    வேல்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தன் சகோதரியின் மகள்மாரை காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்து, பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

    உயிரிழந்தவர் Swanseaயில் வசித்து வந்த மோகன நீதன் முருகானந்தராஜா என்ற 27 வயதுடையவர் ஆவார். 

    அவர் தனது உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். 

    அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருந்த, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின் மகள்மார் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். 

    தன் சகோதரியின் மகள்மாரை குறித்த நபர் மீட்டுக் கரை சேர்த்துள்ளார். 

    பின்னர் அவர் நீரில் மூழ்கியுள்ளார். 

    நீரில் மூழ்கிய மோகனை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிய, மறுநாள் அவரது உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

    செயற்கை சிறுநீரகம் அறிமுகம்!

    சிறுநீரக நோய்கள் உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகின்றன. 

    இந்நிலையில், மருத்துவ உலகில் முக்கியமான மைல்கல்லாக செயற்கை சிறுநீரகம் (Artificial Kidney) உருவாக்கப்பட்டுள்ளது. 

    அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குறித்த செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளனர். 

    குறித்த செயற்கை சிறுநீரகம் உண்மையான சிறுநீரகத்தைப் போலவே 90% செயற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

    பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

    இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    அதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.