Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 25

43% ஆக இருந்த அரசாங்கத்தின் மக்கள் ஆணை 25% ஆக வீழ்ச்சி!

0

தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆதரவுத் தளம் 25 வீதத்திற்கும் குறைவான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் செல்வாக்கு குறித்து தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வின் ரகசிய அறிக்கை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கம்மன்பில குறிப்பிட்டார். அந்த அறிக்கையின்படி, அரசாங்கத்தின் வாக்கு வங்கி 25% க்கும் சற்று குறைவாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே எந்தவொரு மாகாண சபையையும் வெல்ல முடியாது என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்த தயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக 43% ஆக இருந்த ஆதரவு தளம் தற்போது 25% ஆகக் குறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்:

அந்த வகையில் ரணவிரு (மாவீரர்) என்ற கௌரவம் குறைக்கப்பட்டு, அவர்களை வெறும் சிப்பாய்களாகக் கருதியமை, வடக்குக்கு பௌத்தர்கள் வெறுப்பைப் பரப்பவே வருகிறார்கள் என்ற கருத்துக்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் சொத்து விபரங்கள் வெளிப்பட்டமை, அரசாங்கத்தின் நிர்வாகத் தவறுகளால் ஏற்பட்ட நிலக்கரி மற்றும் உப்பு ஊழல்கள் அம்பலமானமை போன்ற காரணங்களினால் அரசாங்கம் தனது செல்வாக்கை இழந்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் 45 இலட்சமாக வீழ்ச்சியடைந்தது. இது வெறும் ஆறு மாத காலப்பகுதியில் 24 இலட்சம் வாக்குகள் அல்லது 34% வீழ்ச்சியாகும் என கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

2015 இல் நடத்தப்பட வேண்டிய தேர்தலை ரணில் விக்ரமசிங்க 2018 வரை ஒத்திவைத்ததால் ‘மொட்டு’ கட்சி உருவாகி வெற்றி பெற்ற வரலாற்றை நினைவுபடுத்திய அவர், தற்போது தேர்தலை மேலும் ஒரு வருடம் ஒத்திவைத்தால் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 3% ஆகப் பாதாளத்திற்கு வீழ்ந்துவிடும் என எச்சரித்தார்.

“எனது இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை என்றால், உடனடியாக மூன்று சரத்துக்கள் கொண்ட சட்டமூலத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்த அவர், 2025 இல் தேர்தலை நடத்தியிருந்தால் இரண்டு மாகாணங்களையாவது வென்றிருக்க முடியும், ஆனால் இனி வரும் காலங்களில் அதுவும் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதம்பே பகுதியில் வீதி அறிவித்தல் பலகைகளில் குளறுபடி!

0

ஜூட் சமந்த

மாதம்பே புதிய நகரத்திலிருந்து பழைய நகரம் ஊடாக சிலாபம் – கொழும்பு பிரதான வீதிக்கு நுழையும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள வீதி அறிவித்தல் பலகைகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA) இந்த இடத்தில் இரண்டு அறிவித்தல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு பலகைகளும் ஒன்றுக்கொன்று சுமார் ஒரு மீட்டர் இடைவெளியில் மிக அருகருகே அமைந்துள்ளன.

இதில் ஒரு அறிவித்தல் பலகையின்படி, அந்த இடத்திலிருந்து சிலாபம் நகரத்திற்குள்ள தூரம் 12 கிலோமீட்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மிக அருகிலேயே உள்ள மற்றைய பலகையில் அந்தத் தூரம் 11.5 கிலோமீட்டர் எனக் காட்டப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் அமைந்துள்ள இரண்டு பலகைகளிலும் இவ்வாறு அரை கிலோமீட்டர் வித்தியாசத்தில் வெவ்வேறான தூர அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளதால், மாதம்பே பழைய நகரத்திலிருந்து சிலாபத்திற்கான உண்மையான தூரம் எது என்பதில் பயணிகளும் வாகன சாரதிகளும் பாரிய குழப்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அதிகாரிகளின் இவ்வாறான கவனயீனமான செயல்பாடுகள் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைந்து சரியான தூரத்தை வெளிப்படுத்தும் வகையில் பலகைகளைச் சீரமைக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மககும்புக்கடவலவில் தீவிரமடையும் யானை – மனித மோதல்!

0

மககும்புக்கடவலவில் தீவிரமடையும் யானை – மனித மோதல்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

ஜூட் சமந்த

மககும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் யானை – மனித மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மககும்புக்கடவல பகுதிக்கு அருகில் தேசிய பூங்காக்கள் எதுவும் இல்லாத போதிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சில யானைகள் வல்பாழுவ (Walpaluwa) அரச காப்பகத்திற்குள் நுழைந்தன. ஆரம்பத்தில் இவை சிறிய கூட்டமாக இருந்த நிலையில், தற்போது பல கூட்டங்களாகப் பிரிந்து கிராமங்களுக்குள் ஊடுருவி வருகின்றன. இந்த மோதல்களின் விளைவாக இதுவரை பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, கடமையில் இருந்த வனவிலங்கு அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக மீகஹகெலே (Meegahakele) மற்றும் கருவலபெத்த (Karuwalabedda) ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டங்கள் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக 5 முதல் 7 ஆண்டுகள் வரை பராமரிக்கப்பட்ட, பலன் தரத் தயாராக இருந்த தென்னை மரங்கள் மற்றும் பெருமளவிலான வாழைப் பயிர்களை யானைகள் முற்றாக அழித்துள்ளன.

வறட்சி மற்றும் யானைத் தொல்லைகளுக்கு மத்தியிலும் தென்னை, வாழை மற்றும் உப பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வந்த சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் உழைப்பு தற்போது வீணாகியுள்ளது.

“யானைகள் முன்பு ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே தென்படும், ஆனால் தற்போது பகல் இரவு வித்தியாசமின்றி கிராமங்களுக்குள் திரிகின்றன” என விரக்தியில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்த போதிலும், இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பணக்காரர்களால் கொள்வனவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெரிய நிலப்பரப்புகள் யானைகளின் மறைவிடமாக மாறியுள்ளன. பகல் நேரங்களில் அங்கு பதுங்கியிருக்கும் யானைகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்துகின்றன.

வழக்கமாக யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாகக் கூறப்படும் நிலைக்கு மாறாக, மககும்புக்கடவலவில் மனிதர்கள் உருவாக்கிய விவசாய நிலங்களை யானைகள் முழுமையாகக் ஆக்கிரமித்துள்ள சூழல் உருவாகியுள்ளது.

பல கோடி மக்கள் பணம் செலவிடப்பட்டும், யானைகளை விரட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், தமது பிள்ளைகளைப் பாதுகாக்கவும் வாழ்வாதாரத்தை மீட்கவும் நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக்குத்து!

0

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அதே நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு உத்தியோகத்தரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக திக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடந்த (06) இரவு கடும் மதுபோதையில் பொலிஸ் நிலையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் நித்திரை செய்துகொண்டிருந்தபோது, மற்றைய உத்தியோகத்தர் கூர்மையான ஆயுதத்தால் அவரது வயிற்றுப் பகுதியில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார் என ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட சில அதிகாரிகள் மாணிக்கக்கல் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவர்கள் இரவு நேரங்களில் அதிகளவில் மது அருந்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொலிஸ் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே சக உத்தியோகத்தர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம், பொலிஸ் துறையினரின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமிதிரிகலவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!

0

தல்துவ – அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். 

விபத்துக்குள்ளான குறித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். 

குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த தாராபுரம் அணி!

0

வட மாகாண விளையாட்டுத் துறையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சாதனையை தாராபுரம் மண் பதிவு செய்துள்ளது. வட மாகாண ரீதியிலான கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து, மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழக வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை (06) மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

முப்பதாண்டு கால காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி

கடந்த 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர், வட மாகாண ரீதியிலான கரப்பந்தாட்டத் தொடரில் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது. சுமார் 34 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, தாராபுரம் கிராமத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த மன்னார் மாவட்ட விளையாட்டு ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

வெற்றி வீரர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (06) தாராபுரத்தில் விமர்சையாக நடைபெற்றது. ஊர் எல்லையிலிருந்து வீரர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது, பேண்ட் வாத்தியம் முழங்க, ஊர்மக்கள் திரண்டு நின்று பூத்தூவி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைய தலைமுறையினருக்கு இந்த வெற்றி ஒரு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளதை அந்த இடத்தின் உணர்வுபூர்வமான சூழல் பிரதிபலித்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீரர்களைக் கௌரவித்தார்.

“எமது பிரதேச இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் கொண்டுள்ள திறமைக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். வளங்கள் குறைந்த சூழலிலும் அர்ப்பணிப்புடன் போராடி வட மாகாணத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஜின்னா விளையாட்டுக்கழக வீரர்களின் சாதனை போற்றத்தக்கது,” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஜப்ரான், முன்னாள் தவிசாளர் முஜாஹீர், இணைப்பாளர் முனவ்வர், அல்-மினா மகா வித்தியாலயத்தின் அதிபர் பழீல் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், விளையாட்டுக்கழக நிர்வாகிகளும், ஊர் பெரியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் இந்த வெற்றி, வெறும் விளையாட்டுத் துறையோடு நின்றுவிடாமல், ஒற்றுமையினாலும் விடாமுயற்சியினாலும் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வடபுல இளைஞர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய இளம்படை!

0

19 வயது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

16வது இளையோர் 19 வயது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமிபியாவில் கடந்த ஜன. 15ம் தேதி துவங்கியது. இதன் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் நேற்று ஹராரே மைதானத்தில் மோதின.

இறுதிப் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இ்நதிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன் குவித்தது.

துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூரியவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. சாதித்து காட்டிய இளம்படைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடியை பரிசாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை முட்டிப்போடவைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

0

ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் 2025-ஆம் ஆண்டில் இந்தியா மீது கடுமையான பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகித்தது. குறிப்பாக ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவைத் துண்டிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

2025-ஆம் ஆண்டில் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது இருமுறை வரி உயர்வை அமுல்படுத்தியது, இதனால் இந்தியப் பொருட்கள் மீது மொத்தமாக 50% வரி விதிக்கப்பட்டது.

பரஸ்பர வரி (Reciprocal Tariff): ஏப்ரல் 2025-இல், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி, இந்தியப் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்பட்டது.

அபராத வரி (Penalty Tariff): ஆகஸ்ட் 2025-இல், உக்ரைன் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கூடுதலாக 25% அபராத வரி விதிக்கப்பட்டது.

இதன் மூலம் ஜவுளி, ஆபரணங்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதிகள் அமெரிக்க சந்தையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ரஷ்யாவின் வருமானத்தைக் குறைத்து, அந்நாட்டைத் தனிமைப்படுத்த இந்தியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்த அமெரிக்கா பல திட்டங்களை முன்னெடுத்தது:

  • எண்ணெய் இறக்குமதியைத் தடுத்தல்: இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிடம் இருந்து எரிசக்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.
  • ஆயுதக் கொள்முதல் மாற்றம்: ரஷ்யாவிடம் இருந்து $S-400$ ஏவுகணை அமைப்பு போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்க இந்தியாவுக்குப் பெரும் அழுத்தம் தரப்பட்டது.
  • நிதியியல் கட்டுப்பாடு: ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு டாலருக்குப் பதிலாக ரூபாயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சர்வதேசத் தடைகளை இந்தியா மீறாமல் இருக்கவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தியா மீதான அமெரிக்காவின் இவ்வாறான தொடர் தாக்குதலை அடுத்து, சமீபத்திய தகவல்களின்படி (பிப்ரவரி 7, 2026), இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

குறிப்பாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டதை அடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது.

அந்த வகையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கூட்டறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  1. ஜவுளி, தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18%ஆக குறைகிறது.
  2. இந்திய மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி.
  3. இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிப்பு.
  4. இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல்.
  5. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் $500 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புதல்.
  6. அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் தானியங்கள், சிவப்பு சோளம், பாதாம், முந்திரிக்கு வரி விலக்கு.
  7. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், சோயா பீன் எண்ணெய், மதுபானத்திற்கு வரி விலக்கு.

இவைகளை தாண்டி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டியின் பல பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு!

0

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையானது இன்று (08) காலை 6.00 மணி முதல் நாளை (09) அதிகாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்தச் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அஸ்கிரிய (மாநகர சபை எல்லை), வேகிரிய, பல்லேமுல்ல புதிய மற்றும் பழைய யட்டிஹலகல, கொண்டதெனிய, ராஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவெல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கஹவத்த, குருகொட, புளுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பாலனகல, மெதவெல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர, மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜப்பான் வரலாற்றிலே ஒரு திருப்புமுனையான தேர்தல் இன்று!

0

ஜப்பானின் அடுத்த ஆட்சியைத் தீர்மானிப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (08) நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஜப்பான் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில், சுமார் 103 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தயாராக உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 44,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் அப்போதைய பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba), பதவியேற்று ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே தனது பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, சனாயே தாகாயிச்சி (Sanae Takaichi) ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் ஜப்பான் வரலாற்றில் பிரதமராகப் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்ல அவர் அதிரடி முடிவை எடுத்தார்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, பிரதமர் சனாயே தாகாயிச்சி முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் அதனுடன் கூட்டணியில் உள்ள ஜப்பான் கண்டுபிடிப்பு கட்சி (Japan Innovation Party) ஆகியவை இணைந்து நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தனது தலைமைத்துவத்தை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்திக்கொள்ள எடுக்கும் இந்த முயற்சி, அந்நாட்டின் எதிர்கால அரசியல் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.