Home Blog Page 24

புத்தளம், கல்பிட்டி விவசாயிகளுக்கு 1000 ரூபாய் கூட உர நிவாரணம் இல்லை!

“பணத்தை ஒதுக்கி என்ன பயன்?” – பாராளுமன்றத்தை அதிரவைத்த தஹீர் மரிக்காரின் ஆவேச உரை!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்காக பெருந்தொகையான நிதியை ஒதுக்குவதாகக் கூறினாலும், அந்தச் சலுகைகள் அடிமட்டத்தில் உள்ள உண்மையான பயனாளிகளுக்குச் சென்று சேருகிறதா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹீர் மரிக்கார் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் தாஹீர் மரிக்கார் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள சூழலில், நாட்டின் சுமை தாங்கும் தூண்களான சிறு தொழில் மீனவர்களும், விவசாயிகளும் சொல்லெணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். “அரசாங்கம் இலக்கங்களில் கணக்குக் காட்டுகிறதே தவிர, கடலுக்குச் செல்லும் ஏழை மீனவனின் பாக்கெட்டுக்கு அந்தச் சலுகை போய்ச் சேரவில்லை” எனவும் அவர் காரசாரமாக எடுத்துரைத்தார்.

கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை போன்ற நாட்டின் பிரதான விவசாய பகுதிகளில் வாழும் விவசாயிகள் இன்று உரம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு மூட்டை உரம் 14,000 முதல் 15,000 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், ஒரு ரூபாயேனும் நிவாரணம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். டீசல், மின்சாரக் கட்டண உயர்வால் விவசாயமும் மீன்பிடியும் முற்றாக முடங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் எதிர்காலத் தூண்களான க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நிலைமை தொடர்பாகவும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். மன்னார், புத்தளம் போன்ற தூரப்பிரதேசங்களில் பரீட்சை நடக்கும் மையங்களில் மின்வெட்டு மற்றும் நீர் விநியோகத் தடைகள் ஏற்படுவது மாணவர்களின் மனநிலையைப் பெரிதும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த விடயத்தில் அரசியல் லாபங்களைப் பார்க்காமல், கல்வி அமைச்சு, மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதை நினைவூட்டி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

கொழும்பில் சுடச்சுட சந்திப்பு: இந்திய தூதுவருடன் 6 சிறுபான்மை கட்சிகள் பேச்சு!

இலங்கை அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறுபான்மை மக்களின் குரலை மிக வலுவாக எதிரொலிக்கும் வகையில், 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், இக்கூட்டணியின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேரில் சந்தித்து அதிரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK), ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA), தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஆகிய ஆறு முக்கிய தூண்கள் ஒன்றிணைந்துள்ள இந்த சந்திப்பு, தலைநகர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தத்தமது கட்சியின் தனித்துவமான கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், சிறுபான்மை சமூகத்தின் பொதுவான உரிமைப் போராட்டங்களுக்காக ஒரே குடையின் கீழ் திரண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நீண்டநாட்களாக இழுபறியில் உள்ள மாகாண சபை தேர்தல்கள் குறித்துப் பேசிய இக்கூட்டணி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் அதிரடியாக சந்தித்துப் பேசியிருந்தது.

அடுத்த 24 மணிநேரத்திற்குள் இந்தியத் தூதரகக் கதவுகளையும் தட்டியுள்ள இப் புதிய கூட்டணி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம், அதிகாரப் பகிர்வு, மாகணசபை தேர்தல் விவகாரம் மற்றும் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து இந்தியத் தரப்பிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைப்பதே இந்த மின்னல் வேக சந்திப்பின் முதன்மை நோக்கமாகும்.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் தனித்தனியாகப் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட பலவீனங்களை உணர்ந்து, “கூட்டுப் பலமாக வாருங்கள்” என இந்தியத் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவும், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த அரசியல் பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாகவும் அமைந்த இந்த ராஜதந்திர சந்திப்பு, இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

“இனி எங்களை அப்படி கூப்பிடாதீங்க” – புதிய பெயருடன் நவோரோ நாடு!

பசிபிக் பெருங்கடலின் நடுவே, இயற்கை அன்னையின் கொடையாக மிளிரும் பவளப்பாறைகளும் சுண்ணாம்புக்கற்களும் நிறைந்த ஒரு குட்டித் தீவு… உலக வரைபடத்தில் மிகச்சிறிய புள்ளியாகத் தெரிந்தாலும், இன்று சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளது! ஆம், துவாலு மற்றும் வாடிகன் நகரத்திற்கு அடுத்தபடியாக உலகின் 3வது மிகச்சிறிய நாடான நவுரு, தனது பழம்பெரும் அடையாளத்தை மீண்டும் கையில் எடுத்து அகில உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

12,000 மக்கள் மட்டுமே வாழும் இந்த அமைதியான தீவு நாடு, சாதாரண ஒரு நிலப்பரப்பு அல்ல. அந்நிய ஆதிக்கத்தின் வடுக்களைத் தாங்கி நின்ற ஒரு வரலாற்று மையம்! முதலில் ஜெர்மனியால் காலனித்துவப்படுத்தப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே 1968 ஆம் ஆண்டு சுதந்திர குடியரசாக உருவெடுத்தது. காலப்போக்கில் தொலைந்துபோன தங்கள் தாய்மொழிப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகாலக் கனவு, இப்போது மெய்ப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பாரம்பரியம், தாய்மொழியின் எழுத்துக்கூட்டு மற்றும் தனித்துவமான உச்சரிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், “நவுரு” என்ற பெயர் இனி “நவோரோ குடியரசு” (Republic of Naoero) என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒரு அறிவிப்பு, வெறும் பெயர் மாற்றத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை; சர்வதேச ரீதியிலான பெரும் மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, உலகளாவிய அடையாள அமைப்புகளில் அந்நாட்டின் சர்வதேச குறியீடு ‘NRU’ என்பதிலிருந்து ‘NRO’ ஆக அதிரடியாக மாறுகிறது. அதைவிட முக்கியமாக, உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மற்றொரு மாற்றம் குடிமக்களின் அடையாளத்தில் நடந்துள்ளது. இனி அந்நாட்டு மக்கள் “நவ்ருவான்” என்று அழைக்கப்பட மாட்டார்கள்! மாறாக, அவர்களின் தாய்மொழிச் சொல்லான “டெய்-நவோரா” என்ற கம்பீரமான பெயரால் அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது சொந்த அடையாளத்தையும் பண்பாட்டையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் நவோரோ எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறிய நாடாக இருந்தாலும், தன் சுயமரியாதையையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காத நவோரோ குடியரசின் இந்தப் புதிய பயணம், வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது!

இன்னும் 3 சிறைகளில் அசம்பாவிதம் நடக்கப்போகிறதா?

சிறைச்சாலைகளை இலக்குவைக்கும் நாசகாரச் சக்தி? பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!

நாட்டின் சிறைச்சாலை அமைப்பைச் சீர்குலைத்து, பெரும் கலவரத்தை உருவாக்கச் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா? என்ற அதிர வைக்கும் சந்தேகத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கார பாராளுமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியுள்ளார். மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற விகாரமான மோதல் சம்பவம் தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்தபோதே, இந்த அதிரடித் தகவல்களை அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் வெறும் கைதிகளுக்கிடையிலான மோதல் மட்டுமல்ல, அதன் பின்னணியில் அந்தச் சிறைச்சாலையின் இயல்புநிலையை முழுமையாகச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியொன்று இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் வெளிப்புறத் தரப்பொன்றின் கைகள் உள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது மிகத் தீவிரமாக முடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதிர்ச்சி இதோடு முடியவடையவில்லை! மகர சிறைச்சாலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள இன்னும் மூன்று சிறைச்சாலைகள் தொடர்பாகத் தமக்குக் கிடைத்த மிகவும் முக்கியமான ரகசியத் தகவல்களைச் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கார சுட்டிக்காட்டினார். இதன் மூலம், ஏனைய சிறைகளில் நடக்கவிருந்த அசம்பாவிதங்கள் முன்கூட்டியே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அதேவேளை, மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தற்பொழுது கணக்கிடப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையின் அமைதியைச் சீர்குலைத்து, சேதங்களை ஏற்படுத்திய கைதிகள் எவராயினும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் தனது கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் என்றும், அவர்கள் தகுந்த தண்டனையை அனுபவிப்பது உறுதி என்றும் அமைச்சர் இறுதியாக எச்சரித்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பைத் தடுக்க புதிய சட்டங்கள்!

இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிதி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தும் நோக்கில், பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய நிதிச் சட்டமூலங்கள் உத்தியோகபூர்வமாகச் சட்டங்களாக மாறியுள்ளன. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இச்சட்டமூலங்களில் இன்று (04) தனது சான்றுரையைப் பதிவுசெய்து கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான இலங்கையின் போராட்டம் புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது.

நிதி உலகையும் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் கறுப்புப் பணச் சுத்திகரிப்பை அடியோடு ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டத்தின் மூலம், நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை அதிவிரைவாக முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், ஒரு நபர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும்கூட, சந்தேகத்திற்குரிய சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் சட்ட ரீதியான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் யுகத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 2026 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் அனைவருமே இனி சட்டபூர்வ நிதிப் பரிவர்த்தனை வரைவிலக்கணத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை இடைநிறுத்தி வைக்கும் உத்தரவுக் காலம் 7 நாட்களில் இருந்து 14 வேலை நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கென வலுவான ‘நிதிப் புலனாய்வுப் பிரிவு’ மற்றும் தேசியக் குழு என்பனவும் அமைக்கப்படவுள்ளன.

அதேபோன்று, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமும் எவ்வித மாற்றமுமின்றி சட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நிதி நடவடிக்கை செயலணியின் (FATF) சர்வதேச தரநிலைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத் திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் சட்டவிரோதப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வரவிருக்கும் சர்வதேச பரஸ்பர மதிப்பீடுகளில் இலங்கையின் நிதித் துறையின் நம்பகத் தன்மையையும், தேசிய பாதுகாப்பையும் உலகளவில் உயர்த்திக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

என் கைது ஒரு காமெடி: “ரீல்ஸ் வெறியில் டம்மி முதல்வர்”

சென்னை: என் கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை பயந்தவன் நான் அல்ல என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், நான் பேசாத ஒன்றை கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய்யாக பரப்புகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்ப முதல்வர் விஜய் முயற்சிப்பதாகவும் கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுகவின் கடைசி தொண்டன் கூட கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்றும் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். காலையிலேயே உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்கு வந்த போலீசார், அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டினர்.

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது 12 மணி வரை உதயநிதி ஸ்டாலின் கைது செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் 11 மணியளவிலேயே உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது வீட்டில் இருந்தே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் போலீஸ் அராஜகம் என்று கோஷம் எழுப்பினார்.

இதன்பின் காவல்துறை வாகனத்தில் ஏறிய உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தலுக்கு முன் தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் என்று அனைவருக்கும் ரீல்ஸ் வெறி முற்றி போயுள்ளது.

நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய் பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கு பயப்படுபவம்ன் நான் அல்ல.. திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படும் ஆள் கிடையாது. காவிரி பிரச்சனையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்பின் காவல்துறை வேனில் இருந்தவாறே உதயநிதி ஸ்டாலின் வெளியில் எட்டி திமுக தொண்டர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் உட்பட 7 பேர் பலி!

நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான சீரற்ற வானிலை மற்றும் திடீர் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகக் காவல்துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இயற்கையின் இந்தச் சீற்றத்தால் மிக மோசமான பாதிப்பை ஹட்டன் பகுதி சந்தித்துள்ளது. ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் திடீரென ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக வீடு ஒன்று முற்றாகப் புதையுண்டது. இந்தச் சோகமான சம்பவத்தில் வீட்டில் இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, சீறிப்பாயும் வெள்ளப்பெருக்கும் மனித உயிர்களைக் காவு கொண்டுவருகிறது. வட்டவளை, ஞானானந்தகம வீதியில் அமைந்துள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கேயான பாலத்தைக் கடக்க முயன்ற 53 வயதுடைய நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மற்றொரு புறம், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது மண்மேடுகள் சரிந்து விழுந்ததில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று, நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மேலும் ஒரு 67 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட 45 வயதுடைய நபர் ஒருவர் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயுள்ளார். அனர்த்தங்கள் காரணமாக மேலும் மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற வானிலையை முன்னிட்டு கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் முடிவுக்குச் சர்வதேச அளவில் கிளம்பியது பலத்த எதிர்ப்பு!

இலங்கை நீதித்துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய திருத்தச் சட்டமூலம் ஒன்று தொடர்பில் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அண்மையில் முன்மொழிந்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்துச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டத் திருத்தங்கள் தன்னிச்சையான மற்றும் தற்காலிகத் தீர்மானங்களின் அடிப்படையில் அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அமைப்பு, இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கே பெரும் சவாலாக அமையும் என எச்சரித்துள்ளது.

1953 ஆம் ஆண்டு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இத்தாலியின் ரோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இச்சங்கம், உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, தற்போது இலங்கையின் விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உட்படப் பல உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையிலேயே, இந்தத் தீவிர நிலைமையைக் கவனத்திற்கொண்டு சர்வதேச நீதிபதிகள் சங்கமும் அரசாங்கத்திற்குத் தனது அழுத்தமான கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பது தர்க்கரீதியான, கொள்கைசார்ந்த மற்றும் வலுவான நடைமுறைகளின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மாறாக அவசர முடிவுகள் மூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முற்றாகச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் கௌரவமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

வரைபடத்திலிருந்தே மறையப்போகிறதா கற்பிட்டி, கீரிமுந்தலம கிராமம்?

இலங்கையின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் வடமேற்குச் கடலோரத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கும் கற்பிட்டி தீபகற்பத்தின் ஒரு பகுதி, விரைவில் அந்த வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் அதிர்ச்சிகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கற்பிட்டி – கீரிமுந்தலம எனும் அழகிய மீனவக் கிராமம் தான் தற்போது கடலின் கொடூரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது!

இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக முழுமையாகக் கடலையே நம்பியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக சீறிப்பாயும் அலைகள், அவர்களின் நிலத்தையும் நிம்மதியையும் சேர்த்தே மெல்ல மெல்ல விழுங்கி வருகிறது. கரையோரங்கள் மிக மோசமாக அரிப்புக்குள்ளாகி வருவதால், கிராமமே கடலுக்குள் மூழ்கும் அபாய எச்சரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்கியுள்ளன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதேச மக்களும், ‘டஜ்பே’ கிராமிய மீனவர் அமைப்பும் இணைந்து, கடலைத் தடுக்க தங்களால் முடிந்தவரை மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக அரண் அமைத்தனர். ஆனால், தற்போது வீசிவரும் பேரடை புயல் காற்றும், வழக்கத்திற்கு மாறான கொந்தளிப்பான அலைகளும் அந்த மணல் மூடைகளையும் அசால்ட்டாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டன!

அதுமட்டுமா? கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகள், அலைகளின் மோதலால் பலத்த சேதமடைந்துள்ளன. “வழமையாகக் தவணைக்காலத்தில் கடல் கொந்தளிப்பாக இருப்பது எங்களுக்குப் பழகிய ஒன்றுதான். ஆனால், இம்முறை இதுவரை இல்லாதவாறு அலைகள் மிகக் கொடூரமாக சீறிப்பாய்கின்றன!” எனக் கண்ணீருடன் கூறுகிறார் உள்ளூர் மீனவர் ஒருவர்.

படகுகளை நங்கூரமிடவும், வாடிகளை அமைத்து மீன்பிடித் தொழிலைச் செய்யவும் அவர்களுக்கு இந்தச் சிறிய கரைப்பகுதிதான் ஒரே வாழ்வாதாரம். அதுவும் கடலுக்குள் கரைந்து போனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கிவிடும். அதிகாரிகளும் அரசும் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரக் கரைப்ப பாதுகாப்புத் தடுப்புகளை ஏற்படுத்தாவிட்டால், கீரிமுந்தலம கிராமம் என்பது வெறும் வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே எஞ்சியிருக்கும்!

ஜுட் சமந்த

அமரபுர மகா நிகாயவின் அனுநாயக்க தேரரின் இறுதிச்சடங்கு அரசாங்க மரியாதைகளுடன்!

ஜுட் சமந்த

இலங்கையின் பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய சேவையாற்றிய அமரபுர மகா நிகாயவின் அனுநாயக்க, அதிபூஜ்ய ஹேனேபொல சிறி சுமங்கல திஸ்ஸாபிதான தேரரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 02) மாபெரும் மக்கள் அலைக்கு மத்தியில் அரசாங்க மரியாதைகளுடன் இடம்பெற்றன. மாதம்பே – கருக்கமுவ சுகதானந்த வித்தியாலய மைதானத்திற்குத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கும் சோகத்திற்கும் மத்தியில் தேரரின் திருவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாதம்பே – ஹேனபொல கிராமத்தில் பிறந்த இவர், 1975 ஆம் ஆண்டு துறவற வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார். மாரவில – ஹால்பன்வில ஸ்ரீ ஞானோதய பிரிவேனாவில் உயர்கல்வியைக் கற்று, 1981 இல் சீதுவ – மூகலன்கமுவ சீமாலக்கயில் உபசம்பதா நிலையை அடைந்தார். இதன்பின்னர், மாதம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பௌத்த விகாரைகளின் விகாராதிபதியாகப் பொறுப்பேற்று, அப்பகுதி மக்களின் ஆன்மீகத் தேவைகளை முன்னின்று பூர்த்தி செய்யத் தொடங்கினார்.

தேரரின் சமூக மற்றும் மதச் சேவைகளைப் பாராட்டி, 1995 இல் அமரபுர மகா நிகாயவின் வடமேல் மாகாண உப பிரதான சங்கநாயகவியாகப் உயர்த்தப்பட்டார். தொடர்ந்து 2021 ஒக்டோபர் 19 அன்று அமரபுர மகா நிகாயவின் ‘அனுநாயக்க’ என்ற உயரிய பதவிக்கு நியமிக்கப்பட்டார். மாதம்பே சாசனாரக்ஷக்க பலமண்டலத்தின் செயலாளராகவும், கலாச்சார மையத்தின் தலைமை ஆலோசகராகவும் அப்பகுதியின் மறுமலர்ச்சிக்குத் தொடர்ச்சியாகப் பங்காற்றி வந்தார்.

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆசாட பௌர்ணமி (எசல போயா) தினத்தன்று மாதம்பே – கருக்கமுவ ஸ்ரீ சுபோதாராம விகாரையில் வைத்து தேரர் இயற்கையெய்தினார். இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதிலும் சோக அலை வீசியதுடன், தேரருக்கு மரியாதை செலுத்த நாடளாவிய ரீதியில் மக்கள் வரத் தொடங்கினர்.

நேற்றைய இறுதி நிகழ்வில், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க அதிபூஜ்ய மாதம்பாகம அஸ்ஸஜி தேரர், சிரேஷ்ட பேராசிரியர் கந்தேகொட விமலதம்ம தேரர், நாகதீப ராஜமகா விகாராதிபதி நவதகல பதுமக hisமி உள்ளிட்ட மகா சங்கத்தினரும், கத்தோலிக்க மதத் தலைவர்களும் பங்கேற்றனர். மேலும், ராஜாங்க நிர்வாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டச் செயலாளர்கள் உட்படப் பல அரச அதிகாரிகளும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ சுபோதாராம விகாரையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தேரரின் திருவுடல், பூரண அரசாங்க மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.