Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 29

ஜனாதிபதி அநுரவின் புதிய அவசரகால சட்டத் திருத்தம்!”

0

நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நிலவிய அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசரகால ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த கட்டளைகள், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய அவசரகால கட்டளைகளுக்கு இணங்க, இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பல கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பல புதிய கட்டளைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவசரகால நிலைப் பிரகடனத்துடன் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், குறித்த கட்டளைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கட்டளைகளின் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தேசிய உதைப்பந்தாட்ட மகுடம் கிண்ணியா அல்-அமீன் வசம்!

போராட்ட குணத்தை வெளிப்படுத்திய எருக்கலம்பிட்டி வீரர்கள்!

பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போர் நேற்று (31.01.2026) அனுராதபுரம் பண்டுகாபய கல்லூரி மைதானத்தில் உணர்ச்சிகரமாக இடம்பெற்றது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

பரபரப்பான இறுதிப் போட்டி

மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தெரிவான 27 சிறந்த பாடசாலை அணிகள் மோதிய இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில், கிண்ணியா அல்-அமீன் பாடசாலை மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அதீத திறமையை வெளிப்படுத்திய நிலையில், ஆட்ட முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை வெற்றி பெற்று தேசிய சாம்பியனாக முடிசூடிக்கொண்டது.

எருக்கலம்பிட்டியின் வரலாற்றுப் பயணம்

இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இந்தத் தொடர் முழுவதும் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அணி காட்டிய அதிரடி ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  • முதல் போட்டி: காலி வித்யாலோகா அணியை 3:0 என வீழ்த்தினர்.
  • இரண்டாம் சுற்று: பதுளை அல்-அத்னான் பாடசாலையை 1:0 என வெற்றிகொண்டனர்.
  • காலிறுதி: கிண்ணியா முள்ளிப்பொத்தனை அணியை 2:1 எனத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
  • அரையிறுதி: பலம் வாய்ந்த மாவனல்லை ஸாஹிரா கல்லூரியுடன் மோதி, 4:3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, புத்தளம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த எருக்கலம்பிட்டி வீரர்களுக்கு ஊர் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

“எங்கள் சிறுவர்கள் காட்டிய இந்த வீரமும், போராட்ட குணமும் வெற்றியை விட மேலானது. தேசிய அரங்கில் எருக்கலம்பிட்டியின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்துவிட்டார்கள்,” என எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட ரசிகர் பட்டாளம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற கிண்ணியா அல்-அமீன் பாடசாலைக்கும், இறுதி வரை போராடி இரண்டாம் இடத்தைப் பிடித்த எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், 27 முன்னணி பாடசாலைகளுக்கு மத்தியில் புத்தளம் மாவட்டத்தின் பெருமையை தேசிய மட்டத்தில் பறைசாற்றிய எருக்கலம்பிட்டி வீரர்களுக்கு ரசிகர்கர்களினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேவேளை இடம்பெற்ற குறித்த சுற்றுத்தொடரில் புத்தளம் அசன் குத்தூஸ் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்று புத்தளம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளமை விஷேட அம்சமாகும்.

புத்தளம் மண்ணின் இரு கல்லூரிகள் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுக்கொண்டமை அனைத்து கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்திற்காக வீதிக்கு வந்த புத்தளத்து பெற்றோர்கள்!

0

கல்வியே ஒரு சமூகத்தின் கண்கள். அந்தக் கண்கள் இருண்டுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில், இன்று புத்தளம் நகரில் பெற்றோர்கள் ஒருமித்த குரலில் திரண்டனர்.

6-ம் தர மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அதிகாரிகளின் கதவுகளைத் தட்டி தங்களது நீதியான கோரிக்கையை முன்வைத்தனர்.

இன்று காலை புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக பெற்றோர்கள் பெருமளவில் திரண்டனர். எந்தவிதமான வன்முறைகளுமின்றி, மிகவும் அமைதியான முறையில் அதேநேரம் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாவதை பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர்கள், கைகளில் ஏந்தியிருந்த பதாதைகள் வழியே அதிகாரிகளுக்கு பலமான செய்தியைச் சொல்ல முயன்றனர். “புதிய பாடத்திட்டம் எங்கே?”, “எங்கள் பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே!” போன்ற வாசகங்கள் அந்த இடத்தையே உணர்வுபூர்வமாக மாற்றியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் பேரணியாகச் சென்று, தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை (Petition) உரிய அதிகாரிகளிடம் கையளித்தனர்.

முதலில், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாக அதிகாரி மனூஷா செவ்வந்தி அவர்களிடம் மகஜர் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக்க சில்வா அவர்களையும் நேரில் சந்தித்து தமது கவலைகளையும் கோரிக்கைகளையும் பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஏன் இந்தப் போராட்டம்?

புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டும், அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராதது மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைப் பாதித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பரீட்சைகள் நெருங்கும் வேளையில், போதிய வழிகாட்டல்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாகவும், இதற்கு கல்வி அமைச்சு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சமூகத்தின் அடித்தளமான மாணவர்களின் கல்விக்காக, தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வீதிக்கு வந்த பெற்றோர்களின் இந்த முயற்சி, அதிகாரிகளின் செவிகளை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜாம்பவான்களை வீழ்த்தி இறுதிப் போரில் எருக்கலம்பிட்டி சிங்கங்கள்!

இலங்கை கால்பந்து வரலாற்றில் ஒரு சிறிய கிராமத்துப் பாடசாலை தேசிய மட்டத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. ஆனால், அதனை இன்று நனவாக்கிக் காட்டியிருக்கிறார்கள் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 18 வயதிற்குட்பட்ட வீரர்கள்.

18 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தேசிய உதைப்பந்தாட்டச் சுற்றோப்போட்டி, அனுராதபுரம் பண்டுகாபய கல்லூரி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முழு இலங்கையையும் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அணி.

மாகாண மட்டங்களில் வெற்றி வாகை சூடிய 27 முன்னணிப் பாடசாலைகள் பங்கேற்ற இந்தத் தொடரில், சிறு கிராமத்துப் பாடசாலையான எருக்கலம்பிட்டி அணியினர் காட்டிய அதீத திறமை, இன்று அவர்களை மகுடத்தைத் தொடும் இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளது.

இறுதிப் போட்டிக்கான எருக்கலம்பிட்டி அணியின் இந்தப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் காட்டிய போராட்ட குணம் வியக்கத்தக்கது:

  • முதல் ஆட்டம்: காலி வித்தியாலோக அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர்.
  • இரண்டாவது ஆட்டம்: பதுளை அல்-அத்னான் அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.
  • காலிறுதி: கிண்ணியா முள்ளிப்பொத்தனை மகா வித்தியாலயத்துடனான பலப்பரீட்சையில் 2:1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
  • அரையிறுதி: கால்பந்து உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியை 4:3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, “நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல” என்பதை உலகுக்கு நிரூபித்து இறுதிப் போட்டிக்குள் கால்பதித்துள்ளனர்.

நான்கு கடினமான கட்டங்களைத் தாண்டி வந்துள்ள எருக்கலம்பிட்டி வீரர்கள், நாளை நடைபெறவுள்ள இறுதிப் பெரும் போரில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை அணியுடன் மோதவுள்ளனர். இது வெறும் ஒரு கால்பந்து போட்டி மட்டுமல்ல, புத்தளம் மாவட்டத்தின் விளையாட்டுத் திறமைக்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

வெறும் அதிர்ஷ்டத்தால் இந்த இடத்திற்கு அவர்கள் வரவில்லை; ஒவ்வொரு நிமிட ஆட்டத்திலும் சிந்திய வியர்வையும், வெற்றிக்காகக் காட்டிய வெறியுமே அவர்களை இங்கு கொண்டு வந்துள்ளது.

எருக்கலம்பிட்டி அணியின் இந்த அசுர வளர்ச்சி, அந்த ஊர் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியை நேரில் கண்டு தமது வீரர்களை உற்சாகப்படுத்த நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே அனுராதபுரம் நோக்கிப் படையெடுக்கவுள்ளது.

“மைதானம் எருக்கலம்பிட்டியில் இல்லை, ஆனால் நாளை மைதானத்தில் எருக்கலம்பிட்டிக்காரர்கள் தான் இருப்பார்கள்” எனச் சொல்லும் அளவிற்கு அந்த ஊர் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார்கள். தமது மண்ணின் மைந்தர்களுக்கு ஊக்கமளிக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நாளை நேரில் சென்று ஆதரவு வழங்கத் தயாராகிவிட்டனர்.

“எங்கள் மண், எங்கள் வீரர்கள், எங்கள் கிண்ணம்” என்ற உணர்வுடன் ரசிகர்கள் மைதானத்தை அதிரவிடக் காத்திருக்கின்றனர்.

திறமையும், அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் கொண்ட எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வீரர்கள், நாளை தேசியக் கிண்ணத்தை ஏந்தி வரலாற்றுச் சாதனை படைக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நுரைச்சோலை பிரேரணை புஸ்வாணமானது!

0

நிசாம் காரியப்பர் மற்றும் அதாஉல்லாவின் பலத்த எதிர்ப்பினால் நுரைச்சோலை பிரேரணை புஸ்வாணமானது

(எஸ்.எம்.அறூஸ்)

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இன்று (30) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்நாயக்க, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல. ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, முத்து ரத்வத்த, ஏ.ஆதம்பாவா, கே.கோடிஸ்வரன், எம்.எஸ்.அப்துல் வாசித், சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளிட்ட கிழக்குமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், 2025 – 2026ம் ஆண்டில் அம்பாரை மாவட்ட செயலகம் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் மற்றும் வேறு தாபனங்கள் ஊடாக செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தொடர்ந்தும் அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி,வீதி அபிவிருத்தி,திண்மக்கழிவகற்றல், குடிநீர் திட்டம், யானை வேலி பாதுகாப்பு முறைமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் இவ்விடயங்களில் அதீக அக்கரையுடன் பணியாற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

மேலும், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை நீதிமன்றத் தீர்ப்பை மையமாக வைத்து மக்களிடம் கையளிக்கும் பிரேரணையை பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கொண்டு வந்த போது, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியேர் பலமாக எதிர்த்ததுடன் பாராளுமன்றக் குழுவின் ஊடாகவே இதனை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமென நிசாம் காரியப்பர் இங்கு தெரிவித்தார்.

நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரியது எனவும் அக்காணிகள் யாவும் அக்கறைப்பற்று பிரதேசத்திற்குரிய காணிகள் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களும் தனது கருத்தை தெரிவித்தார். இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு எதிர்காலத்தில் பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்ட நிகழ்வுகளில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கொண்டு வந்த பிரேரணையை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ ஏற்றுக்கொண்டு அதற்கு நடவடிக்கை எடுப்பதாக இங்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும், பிரஜா சக்தி குழுக்கள் நியமித்தப்படும்போது, கட்சி அரசியல் சாராமல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதுடன் அவ்வாறு நியமிக்கப்பட்டால் தனக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாரும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ குறிப்பிட்டார்.

அப்பாவி முகமூடிக்கு பின்னால் 22 கோடி ரூபாய் விஷம்!

0

அமைதியான கிராமப்புறச் சூழலுக்குள் மறைந்திருந்த பாரிய போதைப்பொருள் வலைப்பின்னலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அதிரடியாக முறியடித்துள்ளனர்.

இன்று (29) காலை கணேமுல்ல, பொல்லதே பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, எவரும் எதிர்பாராத வகையில் 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி பொலிஸாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்று (29) காலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

ஒரு நடுத்தர வயதுப் பெண் இவ்வளவு பெரிய தொகையிலான போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையைச் சீரழிக்கும் இந்த “மெதுவான விஷம்” சமூகத்தின் அடிமட்டம் வரை ஊடுருவியிருப்பதை இச்சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

குறித்த பெண்ணை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 04 கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் மற்றும் 3450 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

“நிபா வைரஸ்” தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0

இலங்கைக்குள் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

‘நிபா’ வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அண்மைக் காலத்தில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் தொற்றுடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், அந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிந்துரைக்கவில்லை எனவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘நிபா’ வைரஸ் பிரதானமாக விலங்குகளுக்கு இடையில், குறிப்பாக வௌவால்களுக்கு இடையில் காணப்படும் ஒரு தொற்று நோயாகும். 

தொற்றுக்குள்ளான விலங்குகள் அல்லது பொருட்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது மிக அரிதாகவே மனிதர்களுக்குப் பரவக்கூடும் எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

மனிதர்களுக்கு இடையில் தொற்று பரவுவது நெருங்கிய மற்றும் நீண்டகால தொடர்புகள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாகவும், இந்த வைரஸ் இன்ஃபுளுவென்சா போன்று காற்றின் மூலம் இலகுவாகப் பரவும் வைரஸ் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், நோயாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காகப் பலமான நோய் கண்காணிப்பு முறைமை இலங்கையில் செயற்படுவதாகவும், ஏதேனும் நோய் நிலைமை அடையாளம் காணப்பட்டால் உடனடியாகப் பதிலளிக்கச் சுகாதார அமைச்சு முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

அதற்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் நோயைக் கண்டறிவதற்கு தேவையான ஆய்வுகூட வசதிகளும் உள்ளதாக அவர் வலியுறுத்தினார். 

சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட உரிய சர்வதேச நிறுவனங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டுப் பிராந்திய நோய் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், சரியான தகவல்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான மூலங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புத்/எருக்கலம்பிட்டி 98-பெட்ச் நண்பர்களின் முன்மாதிரிச் செயல்!

தான் கற்ற பாடசாலை இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அதற்குத் தோள் கொடுப்பது ஒரு நன்றியுள்ள மாணவனின் தலையாய கடமையாகும். அந்த வகையில், புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1998ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பிரிவு பழைய மாணவர்கள், இன்று ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாடசாலையின் சுற்றுமதிலின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது. பாடசாலையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்த மதிலை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் தொகை நிதி தேவைப்பட்டது. இதனை அறிந்த ஊரின் நலன்விரும்பிகள் மற்றும் பரோபகாரிகள் நிதிப் பங்களிப்பு செய்து வரும் நிலையில், 1998ஆம் ஆண்டு அதே பாடசாலையில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் தாமாக முன்வந்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த 1998 நண்பர்கள் குழுவினர், திரட்டப்பட்ட சுமார் 80 ஆயிரம் ரூபாய் நிதியினை பாடசாலை அதிபர் ஜனாப் S.M.ஹுசைமத் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இந்த உதவியினைப் பெற்றுக்கொண்ட அதிபர் ஜனாப் S.M.ஹுசைமத் அவர்கள், பழைய மாணவர்களின் இந்தச் செயலை வெகுவாகப் பாராட்டினார்.

“கல்வி கற்று வெளியேறி பல ஆண்டுகள் கடந்த பின்னரும், தான் கற்ற இடத்தின் தேவையறிந்து ஓடிவந்து உதவும் இந்த மனப்பாங்கு ஏனைய மாணவர்களுக்கும், இளைய தலைமுறைக்கும் ஒரு சிறந்த பாடமாகும்” என கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக அனைவரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில், நட்பின் பெயரால் ஒன்றுணைந்து தமது பாடசாலைக்காக இந்த நிதியுதவியை வழங்கியமை இப்பிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இந்தச் செயல், “எம்மை உருவாக்கிய பாடசாலைக்கு நாம் செய்யும் கைம்மாறு” என சமூக ஆர்வலர்களால் பாராட்டப்படுகிறது.

புத்/எருக்கலம்பிட்டி கல்லூரியில் கோலாகலமான “கால்கோள் விழா”

கல்வியின் வாசல் தேடி வரும் மழலைகளை வரவேற்கும் உன்னத நிகழ்வான “கால்கோள் விழா”, புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) மிகவும் உணர்வுபூர்வமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, பாடசாலை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.

விழாவின் தொடக்கத்தில், புதிய மாணவர்கள் கல்லூரியின் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். தரம் இரண்டு, மூன்று மற்றும் நான்கு பயிலும் சிரேஷ்ட மாணவர்கள், தமது புதிய தம்பிகளையும் தங்கைகளையும் இன்முகத்துடன் வரவேற்ற காட்சி அங்கிருந்தோரின் நெஞ்சங்களை நெகிழச் செய்தது.

2026ஆம் கல்வியாண்டிற்காக சுமார் 85 புதிய மாணவர்கள் இப்பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இம்மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளைச் சீராக முன்னெடுக்கும் வகையில் அவர்கள் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன.

தனித்துவமான கற்பித்தல் முறைகள் மூலம் அவர்களின் ஆரம்பக் கல்வி பலப்படுத்தப்படவுள்ளது.

கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில், மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவிற்கு மேலதிக மெருகூட்டின. தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், அதிபர் மற்றும் விசேட பேச்சாளர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெறுமதிமிக்க ஆலோசனைகளை வழங்கினர்.

“ஒரு குழந்தையின் கல்விப் பயணம் என்பது பாடசாலையும் பெற்றோரும் இணைந்து கட்டியெழுப்பும் கோபுரம்,” என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இது பாடசாலையின் வளர்ச்சி மீது அப்பகுதி மக்கள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

புதிய சீருடையில், கைகளில் புத்தகப் பைகளுடன் துள்ளித்திரிந்த மழலைகளின் சிரிப்பொலியால் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வளாகமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

முருகண்டியில் நித்திரை கலக்கத்தால் நேர்ந்த கோர விபத்து!

ஏ9 பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற பயங்கர விபத்தில், அரச பேருந்தும் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்து சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகண்டி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிரே யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரை கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வேகமாக வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார், சிதைந்த பாகங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள், போதிய ஓய்வெடுத்து வாகனங்களை செலுத்துவதன் மூலமே இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.