Thursday, July 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 30

வரைபடத்திலிருந்து அழியும் அபாயத்தில் உடப்பு கிராமம்!

0

கொழும்பில் இருந்து வடக்கே சுமார் 105 கிலோமீட்டர் பயணித்தால், இயற்கை அன்னை தன் இரு கரங்களால் அள்ளி அணைத்தபடி வைத்திருக்கும் ஒரு விசித்திரமான கிராமத்தை நீங்கள் அடையலாம். அதுதான் உடப்பு எனும் அழகிய கிராமம்.

மேற்குப் பக்கம் ஆர்ப்பரிக்கும் இந்தியப் பெருங்கடல், கிழக்கே அமைதி காக்கும் முந்தல் ஏரி, தெற்கே சுற்றுலாப் பயணிகளைக் காந்தமாய்க் கவரும் ஆண்டிமுனை மணல் குன்றுகள் என இயற்கையின் அத்தனை எழிலும் கொட்டிக்கிடக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத் தமிழ் கிராமமே இந்த உடப்பு.

சுமார் 15,000இற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த உடப்பு கிராமம், வெறும் மீன்பிடி கிராமம் மட்டுமல்ல. பாரம்பரிய மீன்பிடித் தொழில், கடலோர இறால் வளர்ப்பு மற்றும் நுணுக்கமான பொற்கொல்லு தொழில் (தங்க நகைகள் செய்தல்) எனப் பன்முகத்தன்மையோடு இக்கிராமத்தின் பொருளாதாரம் சுழல்கிறது.

இந்தக் கிராமத்தின் மிக சுவாரஸ்யமான அம்சமே இவர்களின் கலாசாரப் பின்னணிதான். சிலாபம் கடற்கரையோரத்தைச் சுற்றியுள்ள பிற மீன்பிடி கிராம மக்கள் பெரும்பாலும் கத்தோலிக்கர்களாகவோ அல்லது பௌத்தர்களாகவோ, தங்களைச் சிங்களவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘கறாவே’ சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக உடப்பு மக்கள் முற்றிலும் தனித்துவமானவர்கள்!

இவர்கள் ‘கரையார்’, ‘அம்பலவாணர்’, ‘ஆசாரி’ (பொற்கொல்லர்) மற்றும் ‘செட்டி’ போன்ற சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்துத் தமிழர்கள் ஆவர். இவர்கள் தமக்கே உரித்தான, முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான வழிபாட்டு முறைகளையும் வாழ்வியலையும் இன்றும் தங்களின் அடையாளமாகப் பாதுகாத்து வரும் அதேவேளை அன்றுதொட்டு இன்றுவரை முஸ்லிம்களும் தமிழர்களோடு ஒன்றோடு ஒன்றாக இதே கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்றனர்.

யுத்த வடுக்களும் தற்போதைய வாழ்வியலும்:

அமைதியான இந்த இயற்கைச் சூழலுக்குப் பின்னணியில், நீண்டகாலமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரின் ஆறாத வடுக்களும் மறைந்துள்ளன. யுத்தத்தின் கோரப்பிடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து, குறிப்பாகக் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவிலான தமிழ் அகதிகளும் தஞ்சம் புகுந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

யுத்த காலப் பாதிப்புகள் இந்த மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் சமூகப் பொருளாதாரத்தையும் இன்னும் ஆழமாகப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.

அதிகாலையில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து, மாலையில் கரையேறும் எளிய தமிழ் மக்களின் வாழ்விடம். ஆன்மீகப் பெருமை வாய்ந்த, இலங்கையில் பிரசித்திபெற்ற ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ ஆலயத்தைக் கொண்டுள்ள புண்ணியமும், அமைதியும் நிறைந்த உடப்பு கிராமம் இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மெல்ல மெல்லக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரையைத் தாண்டும் கடல்: வீடுகளைக் காவு கொள்ளும் அலைகள்!

அண்மைக் காலமாக உடப்பு கிராமத்தில் கடலரிப்பின் வேகம் முன்னெப்போதையும் விடக் கடுமையாக அதிகரித்துள்ளது. அலைகளின் சீற்றம் தற்போது மக்களின் குடியிருப்புப் பகுதிகள் வரை ஊடுருவியுள்ளது. கடற்கரையோரம் இருந்த பல வீடுகள் ஏற்கனவே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் வீடுகளும் எந்த நேரத்திலும் கடலுக்குள் விழலாம் என்ற மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளன.

“இரவில் தூங்கப் பயமாக இருக்கிறது. எப்போது அலை வந்து எங்கள் வீட்டை இழுத்துச் செல்லும் என்று தெரியவில்லை” என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

கண்துடைப்பு நடவடிக்கைகள்: மண்ணுக்குள் புதைந்த கருங்கற்கள்!

மக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, தற்காலிகத் தீர்வாகக் கடலோரத்தில் சில கருங்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அது வெறும் “கண்துடைப்பு” நடவடிக்கை மட்டுமே என்பதைத் தற்போதைய நிலைமை நிரூபித்துள்ளது. முறையான திட்டமிடல் இன்றிப் போடப்பட்ட அந்தக் கற்களையும் தாண்டி கடல் நீர் ஊடுருவியுள்ளதுடன், அலைகளால் இழுத்து வரப்பட்ட மணல் அந்தக் கற்களை முழுமையாக மூடிவிட்டது. இதனால், கடலரிப்பைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட செலவுகள் அனைத்தும் வீணாகியுள்ளன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடப்பு கிராமத்திற்கு ஆபத்து கடலிலிருந்து மட்டுமல்ல, நிலத்திலிருந்தும் வருகின்றது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்தக் கிராமத்தைப் பெரிதும் வதைக்கிறது. குறிப்பாக, வெள்ளநீர் கலப்பு (Lagoon) வழியாகப் பெருங்கடலுக்கு வெளியேற்றப்படும்போது, அதை அண்மித்துள்ள குடியிருப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் மிகத் தீவிரமான அரிப்புக்குள்ளாகின்றன.

இது ஒருபுறமிருக்க, பருவப்பெயர்ச்சிக் காற்று (Monsoon Wind) வீசும் காலங்களில் கடலரிப்பின் வேகம் பல மடங்கு அதிகரித்து, கிராமத்தையே வரைபடத்திலிருந்து ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்கும் ஒரு துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியும் மௌனம் காக்கும் அரசு!

தங்கள் வாழ்வாதாரமும், சொந்த மண்ணும் அழிவதைக் கண்டு சகிக்காத உடப்பு கிராம மக்கள், இந்த அவல நிலை குறித்து நேரடியாக ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். எனினும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

உரிய அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இந்த விடயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி, கோப்புகளை இழுத்தடித்து வருகின்றனர்.

இறுதி எச்சரிக்கை: அழியப் போகிறதா ஒரு பாரம்பரிய கிராமம்?

அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கு நீடித்தால், இலங்கையின் மிக அழகிய ஒரு மீனவக் கிராமமும், அங்குள்ள மக்களின் பல தசாப்த கால வரலாறும் கடலுக்குள் சங்கமமாகிவிடும் பேராபத்து எழுந்துள்ளது.

இனிமேலும் தற்காலிகக் கண்துடைப்புகளைச் செய்யாமல், உடப்பு கிராமத்தைக் காப்பாற்ற “நிரந்தரக் கடல் தடுப்பு அணை” போன்ற முறையான பொறியியல் தீர்வுகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களினதும், சமூக ஆர்வலர்களினதும் அவசரக் கோரிக்கையாகும்!

கொழும்பில் கோலாகலமாக நிறைவடைந்த சர்வதேச கல்வி மாநாடு 2026!

0

கொழும்பு: சர்வதேச தரம் வாய்ந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்கும், நவீன கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதற்குமான ஒரு பிரம்மாண்டமான தளம் கொழும்பில் அரங்கேறியுள்ளது. International Association For Quality Education (சர்வதேச தரமான கல்விக்கான அமைப்பு) மற்றும் இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான Amazon College ஆகியன இணைந்து நடத்திய “சர்வதேச தரமான கல்வி மாநாடு 2026” (International Quality Education Conference 2026) கொழும்பு ஸ்ரீலங்கா ஃபவுண்டேஷன் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.

மாறிவரும் உலகிற்கு ஏற்ப கல்வித்துறையில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள், குறிப்பாக முன்பள்ளிக் கல்வியின் தர மேம்பாடு மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராய்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

சர்வதேச பிரதிநிதிகளின் சங்கமம்

இலங்கையின் கல்வி வரலாற்றில் முக்கியத்துவமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்மாநாட்டில் உள்நாட்டு கல்வியாளர்கள், கல்வித் துறை நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 17 சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தரமான முன்பள்ளிக் கல்வி மேம்பாடு, புதுமையான கல்வி நடைமுறைகள் மற்றும் நாடுகளுக்கிடையிலான கல்விசார் ஒத்துழைப்புகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு, தொழில்முறை தொடர்பு அமர்வுகளிலும் சுறுசுறுப்புடன் பங்கேற்றனர்.

இலங்கை வினியோகஸ்தர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழுவில் (TVEC) முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் உயர்கல்வி நிறுவனமான அமேசான் கல்லூரி, இலங்கையில் உயர்ந்த கல்வித் தரநிலைகளைப் பேணுவதிலும், கல்வி மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் தனக்குள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இம்மாநாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

சிறப்பு விருந்தினர்களின் வருகையும் வழிகாட்டல்களும்

கல்வி மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வில் சிறப்பம்சமாகத் திகழ்ந்தனர்:

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஷாணிக்கா ஹிரிம்புரகம அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மேற்கு மாகாண கல்வி, கலாசாரம், கலை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஜீ. எல். வேர்மன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் பண்டார (பொருளாதார நிபுணர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோப் – COPE குழுவின் முன்னாள் தலைவர்), வடமத்திய மாகாண ஆரம்பக் குழந்தைகள் அபிவிருத்தி ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நிமால் ஏகநாயக்க, சர்வதேச தரமான கல்வி சங்கத்தின் தலைவர் ஜனக கமல்கோட, Amazon College மற்றும் Campus நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கட்டுரைகளும் பாராட்டுக்களும்

மாநாட்டின் மற்றொரு முக்கிய அங்கமாக, பல இளம் மற்றும் மூத்த ஆய்வாளர்கள் தங்களது புதிய ஆய்வு முன்மொழிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கல்வித் துறையில் அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வதற்கு இந்த ஆய்வுகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த பேச்சாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அனைவரும் பாராட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் பஸ் – லொறி மோதி கோர விபத்து!

0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பஸ்ஸொன்றும், சிறிய ரக லொறி ஒன்றும் நேற்று (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் பஸ்ஸும், வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதி பாதசாரிகள் வீதியை கடக்கும் வெள்ளை கோட்டு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் வண்டி நடத்துனர் மற்றும் பஸ் வண்டியில் பிரயாணிகள், லொறியில் சென்றவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்களை சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய முறைமையில் மாகாணசபை தேர்தல்: 41 கட்சிகள் வரலாற்றுப் பிரகடனம்!

0

நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது மற்றும் அதற்கான தேர்தல் முறைமைகள் குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் முக்கியத்துவம், அது தொடர்ச்சியாகக் காலதாமதமாவதற்கான காரணங்கள் மற்றும் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட 42 எதிர்க்கட்சிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில், ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவினரும் இணைந்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இக்கூட்டுப் பிரகடனம் தற்போதைய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கும் ஆளுங்கட்சிக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இக்கூட்டுப் பிரகடனத்தின் முதன்மை உடன்பாடுகள் வருமாறு,

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பழைய தேர்தல் முறையின் கீழ், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் உடன்பாடு கண்டுள்ளனர்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதிப் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் கிடைக்கும் வரை, இந்த பழைய தேர்தல் முறையையே தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை மட்டத்தில், தத்தமது கட்சிகளின் வேட்புமனுக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக சுயாதீனமான அடிப்படையில் உறுதி செய்வதற்கு அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நாட்டின் முதன்மை அரசியல் தலைவர்கள் பலர் இக்கலந்துரையாடலில் நேரில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில்: ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆளுங்கட்சித் தரப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க கலந்துகொண்டார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் முழுமையாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்குள் மீண்டும் தரமற்ற நிலக்கரியா? வெடித்த புதிய சர்ச்சை!

0

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது. 

அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள், குறித்த நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையின்படி, குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் ‘ரிச்சர்ட்ஸ் பே கோல் டெர்மினல்’ துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதில் 59,766 மெட்ரிக் தொன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அந்த நிலக்கரி இருப்பின் சாம்பல் சதவீதம் 16.8 அலகுகளாகக் காணப்படுவதால், லங்கா நிலக்கரி நிறுவனம் கோரியிருந்த ஒப்பந்தப் பெறுமதியான 16 அலகுகளை விட அது அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக, அபராதக் கொடுப்பனவுக்கு உட்படுத்தியோ அல்லது வேறு எந்த வகையிலோ அந்த நிலக்கரி இருப்பைக் கொள்வனவு செய்ய நிலக்கரி நிறுவனத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ‘அத தெரண’ ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக, குறித்த நிலக்கரி இருப்பு தரத்தில் குறைவாக இருந்தபோதிலும், அதனை நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

ஒப்பந்த நடைமுறைகளின்படி, தரம் தொடர்பான இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்துடன், குறித்த கப்பல் விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு:அமைச்சில் நடந்த முக்கிய கூட்டம்!

0

புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் நீண்டகாலமாக நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில், ‘கலா ஓயா மற்றும் மா ஓயா’ குடிநீர் வழங்கல் திட்டங்களின் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நேற்று (25ஆம் திகதி) நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த 2026.05.14 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, கற்பிட்டி, புத்தளம், முந்தல், மகாகும்புக்கடவல, வனாத்தவில்லுவ, தங்கொடுவ, வென்னப்புவ மற்றும் நாத்தாண்டியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள முட்டுக்கட்டைகள் குறித்து புத்தளம் மாவட்டச் செயலகத்தால் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்த அமைச்சர், நிலவும் தடைகளை உடனடியாக அகற்றி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இந்த அவசர விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அரச நிறுவனங்களின் ஏகோபித்த ஆதரவு: சுற்றுச்சூழல் அறிக்கைகளுடன் பணிகள் ஆரம்பம்!

இக்கலந்துரையாடலின் போது, நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தடைகளை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்குப் பதிலளித்த:

  • தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
  • நீர்ப்பாசனத் திணைக்களம்
  • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

ஆகிய அனைத்து நிறுவனங்களும் ஒருமித்த உடன்பாட்டை எட்டின. தேவையான சுற்றுச்சூழல் அறிக்கைகளுக்கு இணங்க, நிலவும் பிரச்சினைகளுக்குத் தீவிரமாகத் தீர்வுகண்டு, மக்களுக்குத் தாமதமின்றி குடிநீரை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வதாக இந்த நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இந்த விசேட கலந்துரையாடலில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகங்கள் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நாத்தாண்டியாவில் மழையால் வெளிவந்த வெளிநாட்டு கைக்குண்டு!

0

ஜூட் சமந்த

நாத்தாண்டியா / மாரவில
நாத்தாண்டியா, துன்கன்னாவ – பக்மீகஸ்வெவ பகுதியில் வீதியோர புதை குழியிலிருந்து வெடிக்காத நிலையிலான வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று 25ஆம் திகதி முற்பகல் 10.00 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் இந்த கைக்குண்டைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக மாரவில பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

நாத்தாண்டியா – குளியாப்பிட்டிய பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள பக்கவாட்டு வீதி ஒன்றிற்குப் பக்கத்தில்தான் இந்த கைக்குண்டு மண்ணிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, வீதி வழியே நீர் பாய்ந்து சென்றதில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரகசியமாகப் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு தரைமட்டத்திற்கு மேலே தென்படத் தொடங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, கண்டெடுக்கப்பட்ட இந்த வெளிநாட்டு கைக்குண்டானது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும், இந்த ஆபத்தான குண்டை அந்த இடத்தில் புதைத்து வைத்தது யார்? எந்த நோக்கத்திற்காக இது கொண்டு வரப்பட்டது? என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவம் குறித்து மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

19 நாள் பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற 6 பேர் அதிரடியாக கைது!

0

ஜூட் சமந்த

புத்தளம் / ஆனமடுவ
பணத்தாசையின் உச்சக்கட்டமாக, பிறந்து வெறும் 19 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று ஆனமடுவ பகுதியில் அரங்கேறியுள்ளது. இந்த மனிதநேயமற்ற கடத்தல் முயற்சியை முறியடித்த புத்தளம் கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், குழந்தையின் தாய் உட்பட 6 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி ஆனமடுவ – ஆன்டிகம பகுதியில் வைத்து இந்த அதிரடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குழந்தையைக் கடத்திச் செல்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சொகுசு வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குழந்தையின் தாய், தாயின் மூத்த சகோதரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கற்பிட்டி – மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தையை ஒரு லட்சம் ரூபா விலைக்கு விற்க முயன்றுள்ளனர்.

மேலும் குழந்தையைக் கடத்திச் செல்ல வந்த வேனின் சாரதி புத்தளம் – பாலாவிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னணியில் இருக்கும் மாஃபியா: வைத்தியருக்கும் தொடர்பு?

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாய்க்கும், குழந்தையை விலைக்கு வாங்க வந்த தம்பதியினருக்கும் இடையில் தரகராகச் செயல்பட்டு, இந்த வியாபாரத்தை முடித்து வைக்கப் பின்னணியில் ஒரு வைத்தியர் செயல்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

புத்தளம் கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டு இந்த வளைத்துப் பிடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 6 பேரும், மீட்கப்பட்ட 19 நாள் பச்சிளம் குழந்தையும், கைப்பற்றப்பட்ட வேன் வாகனமும் மேலதிக சட்டப் பூர்வ விசாரணைகளுக்காகப் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சமூகப் பார்வை: ஒரு தாயின் வயிற்றில் உதித்த உயிரையே பணத்திற்காகப் பண்டமாற்று செய்யத் துணிந்த இந்தச் சம்பவம், மனித நேயம் இன்னும் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பணம் பறிக்கும் இந்த மாஃபியா கும்பலின் பின்னணியில் இருக்கும் அந்த வைத்தியர் யார் என்பது குறித்த தேடுதல் வேட்டையையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்த கொள்ளையன் அதிரடிக் கைது!

0

ஜூட் சமந்த

வென்னப்புவ / தங்கொடுவ
வீதியில் நடந்து செல்லும் பெண்களைக் குறிவைத்து, மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்து தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் செல்லும் பயங்கர கொள்ளையன் ஒருவனை தங்கொடுவ பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வென்னப்புவ, பொரலஸ்ஸ – கொஸ்கஹவத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி மாலை இந்த அதிரடி வேட்டை அரங்கேறியுள்ளது.

மின்னல் வேகத்தில் நடந்த கொள்ளையும் துணிச்சலான பெண்ணும்!

வென்னப்புவ – பொரலஸ்ஸ பகுதியில் பெண் ஒருவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தாலும், அந்தப் பெண் துணிச்சலுடன் உடனடியாகச் செயல்பட்டு சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் கிடைத்த உடனே சுதாரித்துக் கொண்ட தங்கொடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள், தப்பியோடிய கொள்ளையனை நோக்கி விரட்டிச் சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்தத் துரத்தல் வேட்டையின் முடிவில், மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்ற சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. அதுமட்டுமன்றி, அவரிடமிருந்து 5610 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்:

பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல அதிரவைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன:

  • திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்: கொள்ளைச் சம்பவங்களுக்கு இந்த நபர் பயன்படுத்தியது ஒரு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்துள்ளது.
  • தொடர் கொள்ளைகள்: இதற்கு முன்னரும் வென்னப்புவ, தங்கொடுவ மற்றும் கதானேகெதர ஆகிய பகுதிகளில் இதே பாணியில் வீதியில் சென்ற பெண்களின் தங்கச் சங்கிலிகளை இவர் கொள்ளையடித்துள்ளார்.
  • அடகு வைக்கப்பட்ட நகைகள்: கொள்ளையடித்த தங்கச் சங்கிலிகளை அடகு வைத்து, அந்தப் பணத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
  • போதைக்கு அடிமை: சந்தேக நபர் தீவிர போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது போதைப்பொருள் தேவைக்கான பணத்தைத் திரட்டவே இவர் இந்தத் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்.

தங்கொடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த அப்புஹாமி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கான எச்சரிக்கை: வீதிகளில் பயணிக்கும் போது நகைகள் விவகாரத்தில் அவதானமாக இருக்குமாறும், அவசர ஆபத்துகளின் போது உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வண்ணாதவில்லுவில் 15 கோடி ரூபாயைக் கடந்த அனர்த்த நிவாரணம்!

0

இயற்கை அனர்த்தத்தினால் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்த புத்தளம் மாவட்டத்தின் வண்ணாதவில்லு பிரதேச மக்களுக்கு, முதற்கட்ட அனர்த்த நிவாரணக் காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (25.05.2026) மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

அந்த வகையில் சுமார் 15 கோடி ரூபா நிவாரணத்தொகை குறித்த பயனாளர்களுக்கு வண்ணாதவில்லு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் வைத்து இன்று வழங்கிவைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு காசோலைகளை நேரடியாக மக்களிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில்:

  • பொது நிர்வாக அமைச்சர் சகோதரர் சந்தன அபயரத்ன
  • தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிரதி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் கயன் ஜனக
  • புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல்
  • வண்ணாதவில்லு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சகோதரர் சுரங்க
  • வண்ணாதவில்லு பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மக்களுக்குத் தங்களின் ஆதரவினை வெளிப்படுத்தினர்.
சேத விபரங்களும் துரித நடவடிக்கைகளும்

அண்மையில் ஏற்பட்ட டித்வா அனர்த்தத்தின் காரணமாக வண்ணாதவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

இதில் 68 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததுடன், 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்திருந்தன.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்போடு உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்டோருக்கான முதற்கட்ட காசோலைகள் இதன்போது வழங்கப்பட்டன. வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு இந்த நிதியுதவி பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது.

துயரக் கடலில் மூழ்கியிருந்த வண்ணாதவில்லு மக்களுக்கு, இன்றைய தினம் அரச மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் நேரடித் தலையீட்டின் மூலம் கிடைத்த இந்த 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிவாரணம், ஒரு புதிய மறுமலர்ச்சிக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.